தீமைகளை அழிக்கும் ஒத்தக்கடை அருள்மிகு யோக நரசிம்மர்...!

  இளங்கோ   | Last Modified : 14 Jan, 2019 11:41 am

othakadai-arulmigu-yoga-narasimha-special-story

ஆனை மலை எப்படி இருக்கும் என்றும் அதன் சிறப்புகள் மற்றும் வரலாற்றை நாம் கண்டோம். ஆனைமலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு யோக நரசிம்மர் கோவிலைப் பற்றி இங்கு காண்போம். 

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை என்கிற ஊரில் ஆனைமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிம்மர் கோவில். இக்கோவில் ஒரு தொன்மையான குடைவரை கோவிலாகும். ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோவில் மிகவும் பழமையான  கோவிலாகும். குடைவரை கோவில்களை கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள் இக்கோவிலை கட்டியதாகவும், பிற்காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலை நன்கு பராமரித்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் இறைவனாக ஸ்ரீ யோக நரசிம்மரும், இறைவியாக நரசிங்கவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். நரசிம்மர் கோவில்களிலேயே மிகப்பெரும் நரசிம்மரின் மூலவர் விக்கிரகத்தை கொண்ட கோவிலாக இந்த ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.

ரோமச முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டி, இக்கோவிலின் சக்கர தீர்த்த குளத்தில் நீராடி யாகம் செய்ததாக  தல புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அப்போது ரோமச முனிவர் நரசிம்ம மூர்த்தியை அவரின் அவதார ரூபத்தில் தரிசிக்க எண்ணினார்.  அவரின் ஆசைக்கிணங்க மகாவிஷ்ணு உக்கிரமான நரசிம்மர் ரூபத்திலேயே காட்சி தந்தார் நரசிம்ம மூர்த்தி.  நரசிம்மரின் உக்கிரத்தால் வெளிப்பட்ட வெப்பம் அனைத்து லோகங்களையும் அழித்து விடுமோ என்று அஞ்சிய தேவர்கள், மகாலட்சுமியிடம் முறையிட, லட்சுமி தாயார் வந்து நரசிம்மரை அரவணைத்ததும் அவரின் உக்கிரம் தணிந்து, யோக நரசிம்மராக காட்சியளித்து ரோமச முனிவர் வேண்டிய வரத்தை அளித்து ஆசிர்வதித்தார். 

தேய்பிறை பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்ததால் இக்கோவிலில் தேய்பிறை பிரதோஷ தினத்தில் மிக சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றன. கல்வி பயலும் மாணவர்கள் நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கை.   நரசிம்மரோடு நரசிங்கவல்லி தாயாரையும் வணங்கினால் திருமண தடை தாமதம் போன்றவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் வேண்டிய காரியங்கள் நிறைவேறினால் நரசிம்மருக்கும், தாயாருக்கும் வஸ்திரம் சாற்றி தங்களின் நன்றியை தெரிவிக்கின்றனர். 

திருவண்ணாமலை கிரிவலம் செல்வது  போன்று இக்கோவில் அமைந்திருக்கும் ஆனை மலையையும் பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.  எப்போதெல்லாம் தீமைகளின் பலம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அவற்றை அழிப்பதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வருகிறார். தீமையின் மொத்த உருவமாக இருந்த ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக மகாவிஷ்ணு எடுத்த ஒரு அவதாரம் தான் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.