நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் அரசு... சேலம் மக்கள் கவலை...!

  அனிதா   | Last Modified : 19 Jan, 2019 06:32 pm
government-violate-the-occupations

சேலம் மாவட்டத்தில் 7 கிராம மக்களின் நீர் ஆதாரமாக இருக்கு நீர்நிலையை அரசே ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி மக்கள் மற்றும் அரசின் நடவடிக்கை...

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக பல்லாயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள், குட்டைகள் காணாமல் போய்விட்டன. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ஏரிகள், குளங்கள், குட்டைகளில் சரிபாதி இன்று ஆக்கிரமிப்பில் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அரசர்கள் காலத்தில் கூட நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் நீர்நிலைகளை மேம்படுத்தாவிட்டாலும் அழிக்காமல் இருந்தால் போதும் என்ற நிலை உருவாகிவிட்டது.

கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த இரண்டு கழகங்களின் ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான நீர் நிலைகள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியுள்ளன என்றால் அது மிகையாகாது. ஏழை, எளிய மக்கள் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் முதல் உயர்தர மக்கள் வரை ஏரி, குளம், குட்டைகளில் வீடுகள் கட்டியுள்ளனர். நடைமுறையில் உள்ள சட்டங்களைக்கொண்டே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்.

அரசு நிலங்களில் உள்ள குளம், குட்டைகளின் ஆக்கிரமிப்பை அகற்று முன் நோட்டிஸ் தரவேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. ஆனால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டிய ஆட்சியாளர்களே நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு அலுவலகங்கள், அரசு குடியிருப்புகள் கட்டி வருகிறது என்பது கசப்பான உண்மையாகும்.

அந்த வகையில், சேலம் சிவதாபுரம் அருகே உள்ள சேலத்தாம்பட்டி பகுதியில் உள்ள ஏரி சுமார் 98 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலமாக அருகே உள்ள சிவதாபுரம், ஆண்டிப்பட்டி, சோளம்பள்ளம், அறியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட ஏழு கிராமங்களுக்கு நிலத்தடி நீர் அதிகரித்து வருவதுடன், பல்வேறு தேவைக்காக இந்த ஏரி நீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனிடையே சேலத்தாம்பட்டி ஏரிகரை அருகே கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்னர் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, சேலம் திருமணி முத்தாறு கரையோரத்தில் இருந்த மக்களை குடியமர்த்தினர்.

இந்நிலையில் ஏரியின் ஒரு பகுதியை மூடி குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளனர். இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளம் தோண்டியதில் ஏரியின் நீருற்று வந்துள்ளது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் அரசு அதிகாரிகள் கட்டிட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மண் கொண்டு வந்து கொட்டி, ஏரியை மூடி வந்ததால் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், அண்மையில் ஏரிக்கரையின் மீது அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திரளான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டு, ஏரியை மண் கொண்டு மூடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  சேலத்தாம் பட்டி ஏரிக்கரை அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை உடனடியாக கைவிட்டு மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் மட்டுமின்றி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அதே பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது மிகவும் பலுதடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் அந்த குடியிருப்பில் உள்ள மக்களை மாற்று இடத்தில் குடியமர்த்த வேண்டும் எனவும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். 

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணியிடம்  கேட்டபோது, சேலத்தாம்பட்டி ஏரி அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுவரும் இடமானது குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமானது எனவும், ஏரியில் மண் கொண்டு மூடி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய் எனவும் தெரிவித்தார். குடியிருப்புகள் கட்டப்படும் பகுதியின் சர்வே எண்கள் கடந்த 1999 முதல் குடிசை மாற்று வாரியத்தின் பெயரில்தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

ஏரி அருகே கட்டிட பணிகளை மேற்கொள்ள பள்ளம் தோண்டியதில் ஐந்து அடியிலேயே நீரூற்று வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் கட்டப்படும் குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம் ஏற்படும். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த குடியிருப்பில் வாழும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என நமது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், இது குறித்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, குடிசை மாற்று வாரியம் ஆகிய மூன்று துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்கள் அப்பகுதியில் முழுமையாக ஆய்வு மேற்கொண்ட பின்பு தரும் அறிக்கையை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வேலியே பயிரை மேய்ந்தது போல நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமே நீர் நிலைகளை அழிக்க நினைப்பது வேதனைக்குறியது. எனவே மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி தமிழக அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு சேலத்தாம்பட்டி ஏரி அருகே கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டிட பணிகளை நிறுத்தி சேலத்தாம்பட்டி ஏரியை பாதுகாக்க வேண்டும். அதேபகுதியில் மிகவும் பழுதடைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள மக்களை மாற்று இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை மட்டுமின்றி சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close