‛திருச்சியில் மாநாடு நடத்தினால் திருப்பு முனையாக அமையும்’ என்பது அரசியல் கட்சிகளின் நம்பிக்கை. தேர்தல் காலத்தில், வாய்ப்புள்ள கட்சிகள், திருச்சியில் மாநாடு நடத்திவிடும். அரசியல் கட்சிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்தி தந்த திருச்சிக்கு, இப்போது திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
1960களுக்கு முன்பு வரை, திருச்சி விவசாய மாவட்டமாகத்தான் இருந்தது. காமராஜர் முதல்வராக இருந்த அந்த காலத்தில், மத்தியில் இருந்து ஒரு குழு, பெல் நிறுவனம் தொடங்க, தமிழகத்திற்கு இடம் பார்க்க வந்தது.
மாநிலம் முழுவதும் சுற்றிப்பார்த்துவிட்டு, இடம் கிடைக்காமல் திரும்பி செல்லும் முன்பு, அந்த குழு, முதல்வரை சந்தித்து விபரம் கூறியது. உடனே, காமராஜர், திருச்சி அருகே ஒரு இடத்தை பரிந்துரைக்க, அது ஏற்கப்பட்டு தற்போது அங்கு பெல் நிறுவனம் செயல்பட்டு வருகுகிறது.
அதன் பிறகு துப்பாக்கி தொழிற்சாலை, பொன்மலை டீசல் லோகோ என்று மேலும், 2 தொழிற்சாலைகள் திருச்சியில் இயங்கி வருகிறது. இவற்றில், பெல் நிறுவனத்தை நம்பி சிறு, குறு நடுத்தர தொழிற்சலைகள் உருவானது.
இதில், பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலை செய்கிறார்கள். தற்போது, பெல் நிறுவனத்தை நம்பி தொடங்கப்பட்ட நிறுவனங்கள், பல கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதற்கு ஏற்ற ஆர்டர்கள் கிடைக்காமல் சிரமத்தில் உள்ளன.
அதன் பின்னர், பல ஆட்சிகள் வந்து சென்றாலும், திருச்சிக்கு என்று தொழிற்சாலைகள் உருவாகவில்லை.
தற்போது இந்த சூழ்நிலையை, மத்திய, மாநில அரசுகள் மாற்றும் நிலையில் உள்ளன.
மாநில அரசு வானுார்தி தொழில் கொள்கை ஒன்றை வகுத்து, அதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெற்றுள்ளது. விரைவில், வானுார்தி மற்றும் பாதுகாப்புத்துறை உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற் கொள்கை இறுதி செய்யப்பட உள்ளது.
அது, நடைபெற உள்ள உலக தொழில் முதலீட்டார்கள் மாநாட்டில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, மத்திய அரசு, மேக் இன் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது.
அதே போல வேறு பல திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அவற்றில் ஒன்றாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம், தமிழ்நாடு பாதுகாப்பு கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் திருச்சி உள்ளிட்ட, 5 நகரங்களை பாதுகாப்புத்துறை உற்பத்தி கேந்திரங்களாக அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தை (20ம் தேதி) மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கி வைக்கிறார்.
இதன் மூலம், மேலும் பல தொழிற்சாலைகள் திருச்சியில் அமையும் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையிலும், பல வித ஆயுதங்கள் தயாரிக்கப்படலாம்.
இதன் காரணமாக திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்ட இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இதன் மூலம் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும். மத்திய, மாநில அரசுகளின் இந்த முயற்சி, முழுமையாக வெற்றி பெற, உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும்.
தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள சுற்றுவழிச்சாலை பணியை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், சரக்கு போக்குவரத்து எளிதாக நடக்கும் வகையில், சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
இன்னொருபுறம், இந்த திட்டத்தில் பெரிய பெரிய தொழிற்சாகளை மட்டும் தொடங்கி, அதில் மட்டும் உற்பத்தி நடந்தால், திருச்சி நகர மக்களின் பொருளாதார நிலையில் பெரிதாக மாற்றம் இருக்காது.
அதற்கு பதிலாக, சிறு, குறு தொழிற்சாலைகளையும், ஆர்டர்கள் கொடுத்து இணைத்தால் தான் நல்லது.
அவ்வாறு நிகழ்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில், திருச்சி திருப்பு முனையை சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
newstm.in