அரசு ஊழியர்களே... சம்பளம் பத்தலன்னா தயவு செய்து இதை செய்யுங்க!.

  பாரதி பித்தன்   | Last Modified : 23 Jan, 2019 11:16 pm
govt-staff-if-your-salary-is-not-enough-then-resign-your-job

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடினர்.  இருந்த பணம் எல்லாம் காலி.  இதனால், வரும், 31ம் தேதி வரை அவர்கள் பாடு திண்டாட்டம் தான். இப்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர்.

இவர்கள் இதே போல ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்  வேலைநிறுத்தம் செய்த போது, அவர்களுக்கு மாற்றாக வெறும், ரூ. 4 ஆயிரம் சம்பளத்தில் பல ஆயிரம் பேர் களம் இறங்கினர். தற்போது, அவர்களும் அரசு ஊழியர்களாக மாறிவிட்டதால் வேலை நிறுத்தத்தில் களம் இறங்கி உள்ளனர். 
இந்த போராட்டத்திலும், அவர்களின் நிரந்தர கோரிக்கையான பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதும் இடம் பெற்றுள்ளது. 

இவர்கள் வாழும் அதே தமிழ்நாட்டில், வேலையில் சேர்ந்த உடனே பி.எப்., பிடிக்கப்படும் என்று விளம்பரம் வெளியாகிறது.  தனியார் நிறுவனங்கள் எவ்வளவு கேவலமாக ஊழியர்களை நடத்துகிறது என்பது தான், அந்த விளம்பரம் சொல்லும் செய்தி.   \

ஜப்பானில் கணவன், மனைவி அரசு வேலையில் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களின் மகன் அரசு வேலையில் சேருக்கிறான். சில ஆண்டுகள் கழித்து தாய், தந்தை ஓய்வு பெறுகிறார்கள். இப்போது அந்த குடும்பத்தில் அரசில் வேலை செய்பவர் ஒருவர், ஆனால் அரசு ஒருவனுக்கு சம்பளம், 2 பேருக்கு ஓய்வூதியம் என்று வழக்க வேண்டிய கட்டாயம்.

அந்த நாட்டில் சராசரி வயது அதிகம். 90 முதல் 100வயதை தொட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகம். அங்கு ஓய்வு பெற வேண்டிய வயது, 60 என்றால் அவருக்கு 30ஆண்டுகள் ஓய்வூதியம் வழங்க வேண்டிய நிலை. இதனால் அரசின் பொருளாதாரமே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டம் கண்டது. 

அந்த நிலை, இந்தியாவில் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், 2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு, பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படுகிறது. தற்போது தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்க்கு பிடிக்கப்படும் சேமநலநிதியில் கூட, குறிப்பிட்ட தொகையை பிடித்தே பென்ஷன் வழங்கப்படுகிறது. அவர்கள் இதை எதிர்காத போது, அவர்களை விட பல மடங்கு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள் இதை எதிர்ப்பது வேடிக்கை. 

அரசு பள்ளி கல்லுாரிகள், தனியார் பள்ளி கல்லுாரிகள், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், பிஎஸ்என்எல்,  போலீஸ் காரர் என்று ஒப்பிட்டு பாருங்கள். அரசு துறையினர் பெரும் சம்பளம் அவர்களுக்கு உள்ள அதிகாரம், வசதி அதே வேலையை தனியாரில் செய்பவருக்கு கிடைக்கிறதா என்று எண்ணிப்பார்த்தால் தற்போது இவர்கள் எந்த அளவிற்கு நியாயமாக போராட்டம் நடத்துகிறார்கள் என்று தெரியும். 

அரசு ஊழியர்களுக்கு, 7 வது சம்பள கமிஷன் இவ்வளவு தான் சம்பளம் என்று நிர்ணயம் செய்துள்ளது. தனியாரில் சம்பளம் உண்டு, கமிஷன்  உண்டு ஆனால் சம்பள கமிஷன் மட்டும் எனக்கு தெரிந்த வரையில் இல்லை. 
அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட, வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி, கூலியை அதிகரித்துக் கொள்ள முடியும். ஆனால் தனியார் நிறுவன ஊழியர்கள் கொத்தடிமைகள். அவர்களும் போராட முடியாது. அவர்களுக்காக யாரும் போராட மாட்டார்கள். 

இவ்வளவு சலுகை கேட்கும் இந்த அதிகாரிகள், தங்களின் பணிக்கு பொறுப்பு ஏற்பார்களா என்றால், அதற்கும் பதில் கிடைக்காது. அரசு பள்ளிகளில், 100 சதவீத தேர்ச்சி, முதல் ரேஷன் கடையில் எப்போதும் எல்லா பொருளும் சரியான எடையில் கிடைக்கும் என்பதெல்லாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அதிசயங்கள். அந்த அளவிற்கு தான், நம் அரசு ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். லஞ்சம் என்பது கூட, ஆபீஸ் செலவாக மாறிவிட்டது. பிறப்பு முதல் சாவு வரை ஒவ்வொரு மனிதனும் குறைந்தது ரூ. 50 ஆயிரம் அளவிற்கு லஞ்சம் கொடுத்து இருப்பான்.

இவை அனைத்துக்கும் இந்த அதிகாரிகள் தான் காரணம். இவர்களோ  அமைச்சர்கள், அரசியல் வாதிகளை கை நீட்டிவிட்டு, தங்களுக்கு பங்கு வராதது போலவே நடிப்பார்கள். உண்மையில் லஞ்சம் வாங்காத அரசு ஊழியர் என்று ஒருவர் இருந்தால் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவருக்கு இணையாக அல்லது சிறிது வசதியாக வாழ்வார்கள். அப்படி யாரும் உங்களை சுற்றி இருக்கிறார்களா என்று பாருங்கள். 

தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவன் சம்பளம் கட்டாவிட்டால், உன் வேலையே வேண்டாம் என்று வெளியேறி விடுவான். அரசு ஊழியர் நண்பர்களே, அப்படி ஒரு வழி இருக்கிறது. அதை ஓய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தாமல், வேலைக்கு சேர்ந்த சில காலத்திலேயே வெளியே வரலாமே.

யார் உங்களை இத்தனை சிரமப்பட்டு அரசுக்கு ஊழியம் பார்க்க சொல்வது. பிடித்தால் வேலை செய்யுங்கள்; இல்லை என்றால் வெளியேறுங்கள். 110 கோடி மக்கள் தொகையில், ஒற்றை இலக்க சதவீதம் தான் நீங்கள். மற்றவர்கள், உங்களால் ஏற்படும் காலி இடத்தை நிரப்பி கொள்வார்கள். ஆனால் இப்போது நீங்கள் வேலை செய்யும் வகையிலேயே தனியார்துறையில் வேலை செய்தீர்கள் என்றால், ஒரு நாள் கூட வேலைக்கு வைத்துக் கொள்ள மாட்டான். 

யோசியுங்கள் நண்பரகளே !
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close