எலியட்ஸ் கடற்கரையை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. போக்குவரத்து சப்தம் இல்லாத அமைதியான இடம், பரந்து விரிந்த கடற்கரை...
எலியட்ஸ் கடற்கரை சென்னை பெசன்ட் நகர் பகுதியில் அமைந்த கடற்கரை ஆகும். மெரீனா கடற்கரையின் தெற்கில் அமைந்த இந்தக் கடற்கரை அருகில் அஷ்டலட்சுமி கோயிலும் வேளாங்கன்னி தேவாலயமும் அமைந்துள்ளன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்கடற்கரைப் பகுதிக்கு வெள்ளையர்கள் மட்டுமே சென்ற வரக்கூடியதாக இருந்தது. அப்போதைய சென்னை ஆளுனர் எட்வர்ட் எலியட்டின் பெயரால் வழங்கப்பட்ட இந்தக் கடற்கரை பெசன்ட் நகர் கடற்கரை என்றே அறியப்படுகிறது.
இளைய தலைமுறையினர் மட்டும் அல்லாது குடும்பமாக கூடும் இடமாக தற்போது இந்தக் கடற்கரை உள்ளது. கையேந்தி பவனில் இருந்து ஏ.சி ரெஸ்ட்டாரண்ட் வரை இங்கு உள்ளது. வார இறுதி நாட்களில் வண்டிகளை நிறுத்தக்கூட இடம் கிடைக்காத நிலை உள்ளது. அஷ்டலட்சுமி கோயில் திருவிழாவோ, வேளாங்கன்னி கோயில் திருவிழாவோ இருந்தால் சொல்லவே முடியாது. நடக்க கூட முடியாது. மனித தலைகளே கருவண்ணத்தில் அலைமோதும்.
எலியாட்ஸ் கடற்கரையில் ஒரு நினைவுச் சின்னமும் உள்ளது. அதுதான், கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம் விளங்குகிறது. மூழ்கிக் கொண்டிருந்த ஓர் நீச்சல்காரரை காப்பாற்ற தன்னுயிர் தந்த ஓர் டச்சு மாலுமியின் நினைவாக இந்த நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
குடும்பம் குடும்பமாய் இங்கு வந்து கடற்கரையை ரசிப்போர் ஒரு பக்கம் இருக்க, சில சமூக விரோதிகளும் இங்கு உலா வருவதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.