பன்முகத் தன்மை கொண்ட மாபெரும் கலைஞர் அண்ணாதுரை!

  சாரா   | Last Modified : 03 Feb, 2020 03:47 pm
article-on-annadurai

தமிழக அரசியலில், திராவிடக்கட்சிகளின் ஆணி வேர் என அழைக்கும் அளவுக்கு, ஆளுமை செலுத்தியவர் அண்ணாதுரை. தமிழகத்தில் முதல்வராக, சிறந்த அரசியல் தலைவராக, நாடக நடிகராக, எழுத்தாளராக, கதாசிரியராக, சிறந்த ஓவியராக, நகைச்சுவை ததும்ப பேசும் நபராக திகழ்ந்தவர் அண்ணாதுரை என்றால் அது மிகையாகாது. 

ஆரம்ப காலங்களில், நாடகங்களுக்கு கதை எழுதி வந்த அண்ணாதுரை, தேவை ஏற்படும் போது, சில நாடகங்களில் அவரே நடிக்கவும் செய்துள்ளார். அது தவிர, திரையுலகில் ஜாம்பவானாக திகழும், திகழ்ந்த பலரையும் ஒரு காலத்தில் நடிப்புத் துறைக்கு அறிமுகம் செய்தவரே அண்ணாதுரை தான். 

ஓர் இரவு என்ற நாடகத்தை, ஒரு இரவு முழுவதும் விடிய விடிய உறங்காமல் கண் விழித்து எழுதினார். அதன் காரணமாகவே அந்த நாடகத்திற்கு ஓர் இரவு எனவும் பெயர் சூட்டினார். 

அந்த நாடகம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, அது பின்னாளில் திரைப்படமாக வெளியானது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின், தமிழகத்தில் காங்கிரஸ் அல்லாத, திராவிட கட்சி ஒன்று முதன் முதலில் ஆட்சி அமைத்தது என்றால், அதற்கு முழுக் காரணம் அண்ணா தான். 

திராவிட முன்னேற்ற கழகத்தை துவங்கி, காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். அதன் பின் மெட்ராஸ் மாகாணம் என இருந்த பெயரை, தமிழ்நாடு என மாற்றிக் காட்டினார்.

பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டபோதெல்லாம், தன்னை காண வரும் நபர்களிடம் அண்ணா கேட்பது இரண்டே பொருட்கள் தான். ஒன்று, புத்தகம் மற்றொன்று, வெள்ளை காகிதம். 

நிறைய புத்தகங்கள் படித்த பின், தன் ஓய்வு நேரங்களில், தன் மனதில் பட்டதையெல்லாம், வெள்ளை காகிதத்தில் ஓவியமாக வரைவார் அண்ணா. அவரின் பல சிறந்த ஓவியங்களை, அவரின் நினைவு இல்லத்தில் இன்றும் காணலாம். 

மிக எளிமையாக வாழ்ந்து மறைந்த அண்ணா, சட்டசபையில் நடக்கும் காரசாரமான விவாதங்களையும், ஒரு நொடிப்பொழுதில் மாற்றி அமைத்துவிடுவார். தனக்கே உரிய நகைச்சுவை உணர்வால், கொதிப்புடன் பேசும் எதிர்க்கட்சியினரையும், சிரிக்க வைத்துவிடுவார். 

ஒரு சமயம், அண்ணா முதல்வராக இருந்த போது, எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர், உயிரியல் பூங்காவிற்கு தான் வழங்கிய ஆண் புலிக்குட்டி சரியாக பராமரிக்கப்படவில்லை என புகார் கூறினார். அதே நேரம், எம்.ஜி.ஆர் பரிசளித்த பெண் புலிக்குட்டி மிக நன்றாக கவனித்துக்கொள்ளப்படுவதாகவும் கூறினார். 

இதற்கு சற்றும் தாமதிக்காமல் பதில் அளித்த அண்ணா, ‛‛சம்பந்திகள் இருவரும் தங்கள் பிரச்னையை தனியாக பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்’’ எனக் கூறியதும், சபையே சிரிப்பலையில் மூழ்கியது. கோபத்துடன் கேள்வி கேட்ட உறுப்பினர் கூட சிரித்துவிட்டு அமர்ந்துவிட்டார்.

இப்படி, புத்தக வாசிப்பு, கதை வசனம் எழுதுவது, நாடகங்களில் நடிப்பது, ஓவியம் வரைவது, லாவகமாக பேசுவது, மொழியாற்றல், எளிமை என, பன்முகத்தன்மை கொண்டவராக வாழ்ந்த பெருந்தலைவர் அண்ணாதுரை என்பதில் யாருக்கும் எந்த சந்தேமும் இருக்க முடியாது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close