திக்கு தெரியாமல் நிற்கும் திருநாவுக்கரசர்..!

  பாரதி பித்தன்   | Last Modified : 03 Feb, 2019 08:21 pm

thirunavukkarasar-situation-special-story

தமிழக அரசியலில் தன் 27வது வயதில் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திருநாவுக்கரசர். அதன் பின்னர் அறந்தாங்கி என்றால் திருநாவுக்கரசர் என்று பெயர் வாங்கும் அளவிற்கு அந்த தொகுதியில் பல முறை வெற்றி பெற்றார். 

அந்த தொகுதியில் நடக்கும் திருமணம், மரணம் போன்றவற்றிக்கு தவறாமல் சென்று தனது இணைப்பை வலுவாக்கி கொண்டவர் அவர்.  அவருக்கு நெருக்கமான தொண்டர்கள் இது பற்றி வேடிக்கையாக கூறும் போது , அண்ணன் ஊருக்கு வந்து விட்டார் என்றால் பந்தல் போட்ட வீட்டில் எல்லாம் நுழைந்துவிடுவார். அங்கு சென்று ஏதோ ஒருவகையில் வீட்டில் இருப்பவரை தன்னுடன் தொடர்புபடுத்தி வாழ்த்திவிட்டோ, அல்லது துக்கத்தை பகிர்ந்து கொண்டோ வருவார்.  இந்த நடவடிக்கை அவரன் அரியலுக்கு அஸ்திவாரமாக அமைந்தது. இதனால் அவருக்கு என்று ஒரு ஆதரவாளர்கள் எல்லா ஊர்களிலும் ஏற்பட்டார்கள். 

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக ஜெ, ஜா என்று பிரிந்த நிலையில் இவர், கே.கே எஸ்எஸ்ஆர், அழகு சீனிவாசன் உட்பட சில பேர் தான் ஜெயலலிதாவை அரசியலில் துாக்கி பிடித்தவர்கள். ஜெயலலிதா வளர்ந்த பின்னர் திருநாவுக்கரசரால் அவருடன் இணக்கமாக செல்ல முடியவில்லை. இதனால் எம்ஜிஆர் அண்ணாதிமுக என்ற கட்சியை தொடங்கி 2001ம் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில்  3 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றார். 

இதனால் அவரது ஆதரவாளர்கள் வளமாகவே இருந்தார்கள். அவர் தனக்காக இல்லாவிட்டாலும் தன் ஆதரவாளர்களுக்காகவே எதாவது ஒரு பதவியில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவரால் பதவி இல்லாமல் இருக்க முடியவில்லை. கருணாநிதியிடம் சொல்லி தனக்கு அமைச்சர் பதவி வாங்கி தர கூறினார். ஆனால் கலைஞரோ கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் சேரு பிறகு அமைச்சர் பதவி பற்றி யோசிக்கலாம் என்று கூறினார். இதனால் அவரால் தன் ஆதரவாளர்களுக்கு நன்மை செய்ய முடியாமல் கைகள் கட்டிப்போடப்பட்டது. யார் துணையும் இல்லாமல் தானே வாஜ்பாயிடம் அமைச்சர் பதவிக்கு அடிபோட, அவர் அமைச்சர் பதவி தருவது ஒன்றும் பெரியவிஷயம் இல்லை, உங்களைப் போன்றவர்கள் பாஜவில் இருந்தால் கட்சி வலுப் பெறும் யோசியுங்கள் என்றார் (இது திருநாவுக்கரசரே கூறியது). இதனால் அவர் கட்சியை கலைத்து விட்டு பாஜவில் இணைந்தார். 

அதன் பின்னர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும் கூட அவரை மத்திய பிரதேசத்தில் ராஜ்சபா எம்பியாக்கி பின்னர் அமைச்சரும் ஆக்கினார்கள். பாஜ ஆட்சியில் இருந்த வரை அந்த கட்சியில் பலன் அனுபவித்த திருநாவுக்கரசருக்கு, தேர்தல் நேரத்தில் பாஜக மீது நம்பிக்கை இழப்பு ஏற்பட்டது. பொதுவாக காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளில் ஒன்றில் இருந்து மற்றொருக்கு செல்பவர்கள் எளிதில் அக்கட்சியுடன் ஒன்றி விடுவார்கள். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் அரங்கராஜன் குமாரமங்கலம் சரியான உதாரணம். ஆனால் திராவிடக் கட்சிகளில் இருந்து தேசிய கட்சிக்கு செல்பவரால் ஒழுங்காக குப்பை கொட்ட முடியாது; அவர்கள் தாமரை இலை தண்ணீர் போலதான் இருப்பார்கள். இதற்கு திருநாவுக்கரசரே நல்ல உதாரணம். இப்படி கொள்கை ரீதியான பிடிப்பும் இல்லை. அரசியல் ரீதியான பிடிமானமும் இல்லை என்ற நிலையில் அவர் பாஜகவை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 

அங்கோ மூப்பனார், வாழப்பாடி போன்றவர்களாலேயே கட்சியை முன்னேற்ற முடியாதநிலையில் இவர் பாவம் என்ன செய்ய முடியும். அதிலும் பக்கத்து இலையான அதிமுகவில் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் பதவியில் அமர்ந்தனர். இவருக்கோ புள்ளப்பூச்சியை இடுப்பில் கட்டிக் கொண்ட கதையாக காங்கிரஸ் கட்சியில் குப்பை கொட்ட வேண்டிய நிலை. இதற்கும் பிப். 2ம் தேதியுடன் முடிவு ஏற்பட்டது. 

இப்போது திக்கு தெரியாத காட்டில் நிற்கிறார். பாலச்சந்தரின் எதிர் நீச்சல் திரைப்படத்தில் நாகேஷ் ஒவ்வொரு முறையும் உச்சிற்கு சென்று  மீண்டும் கீழே விழும்போது கோபுரத்தின் மீது இருந்து இலை ஒன்று காற்றில் விழுவது போல காட்டியிருப்பார். அதற்கு இணையாக திருநாவுக்கரசர் என்ற இலை மீண்டும் தரைக்கு வந்து விட்டது. இது மீண்டும் கோபுரம் ஏறுமா என்பதை அரசியல் காற்றுத்தான் முடிவு செய்யும். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close