திமுக வெற்றிக்கு செக்..!

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Feb, 2019 09:07 am
check-to-dmk-special-story

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுகவிற்கு வலுவான எதிரிகள் யாரும் இல்லை. அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டாலும், தேர்தலை யார் தலைமையில் சந்திக்கப் போகிறது. இந்த ஆட்சியால் மக்கள் மனதில் ஏற்படும் கோபத்தை எப்படி சமாளிக்கப் போகிறார்கள். உள்ளாட்சி, இடைத் தேர்தல்களை நிறுத்துவற்கு காரணத்தை தேடி கண்டுபிடித்து அதனை செயல்படுத்தும் அதிமுக லோக்சபா தேர்தலில் எப்படி வெற்றி பெறும் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் அதிமுக இருக்கிறது. 

இது போன்ற நிலை திமுகவிற்கு இல்லாத காரணத்தாலும், ஸ்டாலின் தலைவராக இருப்பதாலும் லோக்சபா தேர்தலில் திமுகவின் வெற்றி அதிமுகவைவிட எள் முனை அளவிற்கு அதிகம் இருந்தது. 

தனது வெற்றியை உறுதி செய்யும் நோக்கத்தில் ஊராட்சிகள் தோறும் ஸ்டாலின் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தி வருகிறார். திமுக கூட்டணி கடந்த ஆண்டே இறுதி செய்யப்பட்டுள்ளது. இடையில் துரை முருகனின் பேச்சு கூட்டணியை உறுதி செய்து விட்டது. 

இன்றைய சூழ்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி,முஸ்லீம் லீ்க் மற்றும் ஊடகங்கள் இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. 

மற்றொரு புறம் அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக என்று இன்று வரை தனித்தனி கட்சியாக திமுகவிடம் அடிவாங்க தயாரான நிலையில் காத்திருக்கின்றன. இதில் கட்டுச் சோற்றில் எலியை வைத்து கட்டியதைப் போல திமுகவின் இலவச இணைப்பாக தினகரன் கொடுக்கும் தொல்லைகளையும் அதிமுக சமாளிக்க வேண்டும்.

இப்படிப்பட்டசூழ்நிலையில் அதிமுக, பாஜக கூட்டணி என்ற பூனைக்குட்டி வெளியே எட்டிப்பார்க்கத் தொடங்கி உள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை  துணை முதல்வர் பன்னீர் செல்வம், பேட்டி அளித்த போது, எங்களுடன் ஒத்த கருத்துள்ள தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம், அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது என்றார். இதன் படி பார்த்தால் தற்போது இடத்தை காலியாக வைத்து இருப்பது பாஜக மட்டுமே. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஏற்கனவே திமுக அணியில் இடம் பெற்று விட்டன. இதர தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதால் பிரச்சார வாகனத்தில் மேலும் ஒரு கொடி கட்டுவதற்கு உதவுமே தவிர்த்து அது ஓட்டாக மாறாது. 

இன்னொரு புறம் முன்னாள் முதல்வரின் கருத்தை ஆமோதிப்பது போலவே  மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திருச்செந்துாரில் நிருபர்களிடம் கூறியதும் உள்ளது. அவர் தமிழகத்தில் 30 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கருதியிருந்தோம்.(எப்படி என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்) மத்திய பட்ஜெட் வெளியான பின்னர் பாண்டிசேரியை சேர்த்து 40 தொகுதிகளையும் வெற்றி பெறுவோம் என்று கூறி உள்ளார். இது கடந்த லோக்சபா தேர்தலைப் போல பாஜக தலைமையிலான கூட்டணி அமைந்தால் மட்டும் சாத்தியம் இல்லை. அதனால் அதிமுகவும் அவர்களுடன் இணைய உள்ளார்கள் என்பதை சூசகமாக வெளிப்படுத்தியதாகவே தெரிய வருகிறது. 

ஒருக்கால் அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக இன்னும் பிற கட்சிகள் என்று கூட்டணி அமைத்தால் அது திமுகவிற்கு தேர்தல் களத்தில் கடும் சவாலாகவே அமையும். மேலும் இந்த கூட்டணிக்கு மோடி பிரதமர் என்ற கோஷம் புதிய ஓட்டுக்களை கவர்ந்து இழுக்கும். ஆனால் திமுக அணிக்கோ தைரியமாக ராகுல் பிரதமர் என்று கூற முடியாது. அவர்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் என்பதே தெருவில் பாம்பாட்டி, பாம்பு கூடையை மூடிக் கொண்டே வித்தை காட்டி ஏமாற்றி காசு பிடுங்குவதை போல பிரதமர் வேட்பாளரை மூடி வைத்துக் கொண்டே மக்கள் ஓட்டை ஏமாற்ற பிடுங்க வேண்டிய நிலை. 

இன்னாரு புறம் அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டால் தினகரன் மீது ஏதாவது ஒரு வழக்கு தூசி தட்டப்படலாம். அவர் கட்சி லோக்சபா தேர்தலில் தீவிரமாக ஈடுபடுவது முடக்கப்படும். இது திமுகவிற்கு பாதகமாகவே அமையும். 

கடந்த தேர்தல்களில் திமுகவைவிட அதிமுக ஓட்டு சில சதவீதங்கள் அதிகமாகவே இருந்தது. அதை தினகரன் குறைத்தார் என்று வைத்துக் கொண்டால் கூட இருகட்சிகளின் ஓட்டு சதவீதம் இணையாக அல்லது சில புள்ளிகள் திமுக அதிகமாக இருக்கலாம். ஆனால் தினகரன் முடக்கப்பட்டு, அதிமுகவில் பாஜக உட்பட பல கட்சிகள் இணைந்தால் இவர்களின் ஓட்டு சதவீதம் இன்னும் அதிகரிக்கும். அந்த சூழ்நிலையில் அதிமுகவின் வெற்றி அதிகரிக்கும். எந்த விதத்தில் பார்க்க போனாலும் திமுகவின் வெற்றி பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழாது என்பது மட்டும் நிச்சயம். 

அதே நேரத்தில் அதிமுக, பாஜக கூட்டணியை அவர்கள் உருவாக்க மாட்டார்கள் என்று அந்த இரு கட்சி  தலைவர்களை நம்பி திமுகவினர் கூறும் கருத்து கூட உண்மையாக அமையலாம். அப்படி அமைய வேண்டும் என்பது தான் மெரினா கடற்கரையில் சந்தனப்பேழையில் உறங்குபவர்களை நோக்கி திமுக கார்கள் நித்தம் செய்யும் பிரார்த்தனை. அது பலிக்குமா என்பது நம் பகுத்தறிவுக்கு எட்டாதது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close