இசைப்பயணம்-3... ”கர்நாடக இசை”

  டேவிட்   | Last Modified : 08 Feb, 2019 12:54 pm
music-3

தமிழகத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது கர்நாடக இசை. செம்மொழியில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என அழைக்கப்பட்டதையே ‘சுரம்’ என்றனர்.

தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் ஆவர். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. 

கர்நாடக இசை ராகம், தாளம் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுவரங்களே ச – ரி – க – ம – ப – த – நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் கொண்டன. இந்த ஏழு சுரங்களிலும், முன்னதாக சொல்லப்பட்ட வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெற முடிகிறது. 

இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா ராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா ராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான ராகங்கள் பெறப்படுகின்றன.

சங்கீதத்தில் மூலாதாரமாக விளங்குவது நாதம் ஆகும். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஒலி இரைச்சல் எனப்படுகிறது. நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து ராகமும் உண்டாகிறது. நாதத்தில் இரு வகை உண்டு அவையாவன.

ஆகதநாதம் – மனிதனால் உருவாக்கப்படும் நாதம் ஆகத நாதம் 
அநாகதநாதம் – இயற்கையாக உண்டாகும் நாதம் அநாகத நாதம் 

பாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேஷ ஒலியே சுருதி. இதுவே இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும், அலகு என்றும் அழைக்கப்படும். நாதத்திலிருந்து ஸ்ருதி உற்பத்தியாகிறது. சுத்தமாக இசைக்கப்படும் சுருதி தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி இரண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவை: பஞ்சம ஸ்ருதி மற்றும் மத்திம ஸ்ருதி.

நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய ராகங்களில் அமைந்த பாடல்கள் மத்திம ஸ்ருதியில் பாடப்படுகின்றன. 

இயற்கையாக இனிமையைக் கொடுக்கும் தொனி ஸ்வரம். சங்கீதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் ஏழு. இவை சப்த ஸ்வரங்கள் எனப்படும். ஏழு ஸ்வரங்களும் அவற்றின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் பின்வருமாறு அமையும்.

கையினாலோ அல்லது கருவியினாலோ தட்டுதல் தாளம். இது பாட்டை ஒரே சீராக நடத்திச்செல்கிறது. பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். ஸ்ருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ அதே போல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை. லயம் மூன்று வகைப்படும். அவையாவன:  விளம்பித லயம், மத்திம லயம், துரித லயம் ஆகும். 

(தொடரும்)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close