கமல்ஹாசன் ஓர் ஹிந்துத்துவ தீவிரவாதி? - 4

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 15 May, 2019 08:51 pm
kamalhasan-a-hindu-terrorist-4

சவுத் இந்தியர்களை, குறிப்பாக தமிழ்நாட்டினரை, சுரணைகெட்ட இந்துக்கள் என்றளவிலேயே கமல் எடை போட்டிருக்கிறார். அது கிட்டத்தட்ட சரிதான். 

"பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதால் அதை ஒட்டியுள்ள பகுதியில் கலவரம் நடப்பது இயல்பு. இது வடநாட்டில் நடப்பதால், அதன் பாதிப்பு தென்னாட்டில் இருப்பவர்களுக்குத் தெரியாது" என்று லால்வானி கேரக்டர் பேசுவதாக வசனம் வைத்திருப்பார்.

மற்றபடி சௌத் நீங்கள் சொல்வது போல் கமல்ஹாசன் எனும் இயக்குநருக்கு அப்படியான எண்ணம் இருக்காது என்று நினைப்பவர்கள் "ஹேராம்" படத்தில் கொல்கத்தாவை விட்டு வெளியேறும் காட்சியை அவசியம் பார்க்க வேண்டும்.

மேற்கு வங்கம் முழுவதும் ரத்தக் களறியாக இருக்கிறது. அப்பொழுது ஒரு யானை மதம் பிடித்து, கடும் சீற்றத்துடன் பிளிறிக் கொண்டு ஓடி வரும். பின்னணி இசையில் நமக்கு அந்தச் சூழலின் கடுமையை பயமுறுத்திக் காட்டிக் கொண்டே, இந்தப் பாடல் தொடங்கும்.

பதம் கொண்டு நடத்தும் வாழ்க்கை
மாவுத்தன் அவனும் இன்றி
கதம் கொண்டு துளைக்கும் வெய்ய
அங்குசம் அதுவும் இன்றி... 

 

கொல்கத்தா கலவரத்தில் தொடங்கும் முதல் நான்கு வரிகள் தமிழகப் பெருமாள் கோவில் கோபுரத்தைக் காட்டியபடி மிருதங்க இசையுடன் மென்மையாக தொடர்கிறது.

மதங்கொண்ட வேழம் போல
திரிகின்றேன்... பண்டு நான்கு
விதம் கொண்ட மறைகள் போற்றும்
அரங்கமா நகருளானே

 

இங்கே இருப்பவர்கள் தூக்கம் களைவதுகூட உற்சவர் ஊர்வலத்தில் ஏழும் மங்கள இசையால் தான் இருக்கிறது. அத்தனை அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் சௌத் இந்தியனுக்கு எப்படி புரியும் நவகாளிக் கலவரமும், பாகிஸ்தானிலிருந்து உயிரை மட்டும் கொண்டு வந்த ஹிந்துக்களின் பரிதாப நிலையும்? 

பாஷ்யம் மாமா, (வாலி) ராமிடம் சொல்லுவார், "சவரம் பண்றதையும், உத்யோகத்தையும் விட்டுட்டா ஒன்னும் ஆகாது நோக்கு. மனச வுட்டுட்டா மஹா கஷ்டம்". இப்படி எளிமையான தத்துவம் சொல்லும்படியான இலகுவான வாழ்க்கையை வாழ்ந்து வரும் சவுத் இந்தியர்கள்.

அடுத்த வினாடி ராம் உற்றுக் கவனிப்பது கொல்கத்தாவில் மதம் பிடித்து உக்கிரமாக அலையும் அந்த ஹிந்து உணர்வு என்ற யானை, இங்கே பெருமாள் கோவில் வாசலில் ஒரு சங்கிலியால் பிணைக்கப்பட்டு அப்பிராணியாக நிற்கும். இவ்விடத்தில் கமல்ஹாசன் எனும் இயக்குநர் அந்தச் சங்கிலியாக, “சோற்றுக்கும் சொகுசுக்கும் மயங்கிக் கிடக்கும் சோற்றால் அடித்த பிண்டங்கள்”, “பாரம்பரியப் பெருமைகளை அழித்தொழித்த திராவிட மாயை” என்ற இரண்டில் எதை உருவகப்படுத்துகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். மேலே குறிப்பிட்ட பாடல், பன்னிரு ஆழ்வார்களில் எவரும் எழுதவில்லை. ஆழ்வார்ப்பேட்டை ஆழ்வார் வேண்டி யாரோ ஒருவர் எழுதியது. எனவே மிகவும் கவனமாக, தான் சொல்ல வந்த விசயமான சவுத் இந்தியர்களின் சுரணையின் அளவை, தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

சிலர் கேட்கலாம்... அது ஏன் ராமின் மனநிலையைக் காட்டுவதற்கான குறியீடாக இருக்கக்கூடாது? நிச்சயமாக இல்லை. முதல் நான்கு வரிகள் கொல்கத்தாவில் பாடியிருப்பார்கள்.  “பதம் கொண்டு நடத்தும் வாழ்க்கை மாவுத்தன் அவனும் இன்றி், கதம் கொண்டு துளைக்கும் வெய்ய அங்குசம் அதுவும் இன்றி” இப்படியொரு கொடூரமான வாழ்க்கையிலிருந்து காக்க நல்ல பாந்தவனும் இல்லாமல், வெறிகொண்டு நடக்கும் கலவரத்தைத் தடுக்க நல்ல நிர்வாகமும் இல்லாமல் போனதால்….

அடுத்த நான்கு வரிகள் தமிழகத்தில், மதங்கொண்ட
 வேழம் போல
திரிகின்றேன்... பண்டு நான்கு விதம் கொண்ட மறைகள் போற்றும்
அரங்கமா நகருளானே’. அதாவது, அந்தக் கோபம் கனலாய்க் கொதிக்க கடும் சீற்றத்துடன் திரிகிறேன் ரங்கா என்று தமிழகம் வந்த பின்னும் சொல்லிய சில வினாடிகளில், அந்த கட்டுண்ட யானையைப் பார்ப்பார். அங்கே கட்டவிழ்ந்து கிடக்கும் வன்முறை, இங்கே மட்டும் எப்படி கட்டுப்பட்டுக் கிடக்கிறது? 

இப்பவும் உங்களுக்கொரு சமாதானம் தோன்றலாம். ஐயா, வன்முறையால் பாதிக்கப்பட்ட ராம் இப்படி கோபப்படுவது நியாயம் தானே என்று? ஆனால், அதற்கு முன்னமே, முஸ்லீம்கள் நமக்கு முன்னால் கூழைக் கும்பிடு போட்டு விட்டு பின்னால் முதுகில் குத்துபவர்கள் என்று காட்சிப்படுத்தியதை என்னவென்று சொல்வீர்கள்?

ஹேராம் பார்த்தவர்கள் யூகித்திருக்கலாம். எனினும், அடுத்த கட்டுரையில் அந்தக் காட்சியை விவரித்து கமல்ஹாசன் அவர்களின் மனநிலையை விளக்குவோம்…
 

விரைவில்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close