திருப்பி அடிக்கும் திருமங்கலம் பாணி !

  பாரதி பித்தன்   | Last Modified : 12 Feb, 2019 05:35 pm
2019-election-thirumangalam-style-special-story

லோக்சபா தேர்தல் நெருங்கி வந்து விட்டது. இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பாரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலில் ராஜதந்திரி அல்ல அரசியல்வாதிகள் மட்டுமே வெற்றி பெறுவார்கள். 

அரசியல்வாதிகள் நாட்டின் வளர்ச்சி திட்டங்களை விட தங்கள் வாழ்க்கையை வளப்படுத்தும் திட்டத்தை பற்றியே கவலைப் படுவார்கள். அதன் அடிப்படையில் தான் அரசு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படும். ஓட்டு போடுவன் எவனும் வேட்பாளரையோ, அவர் சார்ந்த கட்சியையோ, அவர்கள் அறிவிக்கும் திட்டங்களையோ சிந்தித்து பார்த்து ஓட்டுப் போடுவதில்லை. இதை நன்கு அறிந்தவர்கள் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிவிடுகிறார்கள். 1962ம் ஆண்டு தேர்தலில் அண்ணாதுரை போட்டியிட்டார். அவருக்கு எதிராக பஸ் நிறுவன நடேசமுதலியார் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப் போடுவேன் என வெங்கடாஜபதி படத்தின் மீது சத்தியம் வாங்கி கொண்டு ரூ. 10 கொடுத்தார்கள். 

2003ம் ஆண்டில் சாத்தான்குளம் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்ட போது பணம், 2005ம் ஆண்டு போட்டியிட்ட போது மூக்குத்தி என்று ஏதோ ஒரு வகையில் வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். 

இதனால் போடுங்கம்மா ஓட்டு என்ற கோஷம் இந்தா பிடி நோட்டு என்று மாறிவிட்டது. தீபாவளி நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர் தீபாவளி காசு வாங்க வருகிறார் என்று பேசிய தமிழகத்தில்; தேர்தல் நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் கட்சிக்காரங்க காசு தர வரப்போறாங்க என்று பேசும் நிலை உருவானது. 

இதன் உச்சம் தான் திருமங்கலம் இடைத்தேர்தலில் நடந்தது. 1962ம் ஆண்டு தேர்தலில் இருந்து கருணாநிதி செய்த தேர்தல் பணியை பார்த்த அனுபவத்தில் தேர்தல் பணியாற்றிதான் திருமங்கலம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றேன் என்று அழகிரி கூறினாலும், பணம் தண்ணீராக பாய்ந்தது அனைவரும் அறிந்ததே. இதனால் தான் திருமணங்கலம் பாணி என்று தேர்தல் வரலாற்றில் உருவானது.

அதன் பின்னர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது; அதை தடுக்க முடியவில்லை என்ற காரணத்தால் மட்டுமே அரவாக்குறிச்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது.  அதையும் தாண்டி ஆர்கே நகர் இடைத் தேர்தலில் டோக்கன் வாங்கிக் கொண்டு கூட தினகரனை வெற்றி பெற வைத்தனர். 

இப்போதெல்லாம் அவுங்க 2000 கொடுத்தாங்க, நீங்க எவ்வளவு கொடுப்பீர்கள் என்று கேட்கும் அளவிற்கு அரசியல் மாறிவிட்டது. எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில் கொடுத்தாங்க, நாங்க வீட்டிலேயே தான் இருந்தோம் ஆனால் பணம் தர யாருமே இல்லை என்று வாக்காளர்கள் கேட்கும் நிலையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.  இதில்  காங்கிரஸ் கட்சியை விட ஆளும் கட்சியாக இருப்பதால் பாஜகவிற்கு, வெற்றி வாய்ப்பு சிறிது அதிகம் உள்ளது. ஆனால் ஜிஎஸ்டி, ரூபாய் மதிப்பிழப்பு பிரச்னை, என்று பல நடவடிக்கைகள் மூலம் பாஜக தன் வெற்றி வாய்ப்பை மங்க செய்து விட்டது. வளர்ச்சி திட்டங்கள் நல்லது தான் என்றாலும் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை எப்படி ஜெயிப்பார்கள் என்ற விமர்சனம் அதிகம் இருந்தது. 

ஆட்சியில் இல்லாத நிலையில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இரண்டு முறை வெற்றி. பெற்ற நிலையில், மக்கள் மனங்களை திருப்பி ஆட்சியை பிடித்த பாஜவினர் ஆட்சியில் இருக்கும் போது மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறியாமலா இருப்பார்கள். ஆனால் மற்றவர்கள் நினைப்பெல்லாம் காங்கிரஸ் கூட்டணி, நவக்கிரக எதிர்கட்சிகள் கூட்டணி  எப்படியும் ஆட்சியை பிடித்து விடும் என்று நம்பினார்கள். அவர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த ஊடகங்களும் ஒத்து ஊதின. 

ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் இலவச காஸ் இணைப்பு கொடுத்தது, பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் எவ்விதமான கமிஷனும் இல்லாமல் பல லட்சம் பேர் வீடுகள் பெற்று இருக்கிறார்கள்.இது தமிழகத்திலும் நடந்து உள்ளது. பல ஆயிரம் பயனாளாளிகள் தமிழகத்திலும் உள்ளனர். 

மத்திய பாஜ அரசின் ஆதார் அட்டை, ஜன்தன் கணக்கு, பான் கார்டு போன்றவைகள் தான் தேர்தலில் முக்கிய பங்காற்றப் போகின்றன. அதன் அடையாளம் தான் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவது. அதன் முதல் கட்டத் தொகை 2 ஆயிரம் இன்னும் சில மாதங்களுக்குள் வழங்க இருப்பது. 

மத்திய அரசின் இதே திட்டத்தை தான் தமிழக அரசும் கூட கடைபிடிக்கிறது. பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி ஆயிரம் ரூபாய் கொடுத்த கணக்கையே அதிகாரிகள் இன்னும் முடித்து இருக்க மாட்டார்கள். அதற்குள் அடுத்த அறிவிப்பு வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் அறிவிப்பு.

இது கமிஷன் அடிப்படையில் வழங்கினாலும் நம்மவர்கள் வாங்குவதில் இருக்கும் ஆர்வத்தில் அதனை கண்டு கொள்ள மாட்டார்கள். அதனால் விரைவில் இந்த தொகையை அவர்கள் கையி்ல கிடைக்கும். இந்த பணி முடியும் ஒரு சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வரும். அல்லது அப்படியே அறிவிப்பு வந்து விட்டால் அனைவருக்கும் டோக்கன் கொடுக்கப்பட்டு மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தொடருவோம் என்ற அறிவிப்பு வரலாம். 

பொங்கல் இனாம் கண்களை மூடிக் கொண்டு கொடுத்தால் எதிர்ப்பு குரல் எழுப்பவோ, நீதிமன்றம் தலையிடவோ முடிந்தது. இந்த முறை அந்த தவறு நேராமல் ஏழை எளிய வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் என்று வரையரை உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக நீதிமன்றமும் தலையிட முடியாது. எதிர்கட்சிகள் திட்டினால் அவர்கள் ஏழைகளின் எதிரிகள், வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களின் வாழ்க்கை சிதைக்க வந்த வல்லுாறுகள் என்று கூச்சல் இட்டே அவர்களுக்கு வரும் ஓட்டை கூட விழாமல் செய்துவிடுவார்கள். 

இது வரையில் கட்சிகள் தான் ஓட்டை விலை கொடுத்து வாங்கின. அதனால் வேட்பாளருக்கு, கட்சிக்கு காசு செலவு பிடிக்கும். உலக வரலாற்றிலேயே முதல்முறையாக அரசு பணத்தில் ஓட்டு வாங்கும் ஒரே கட்சி மாநிலத்தில் அதிமுக, மத்தியில் பாஜக தான். இவர்கள் கூட்டணி உடையாமல் இருந்தால் தான் தமிழக அரசு கொடுக்கும் ரூ. 2 ஆயிரம் நம் கைகளில் நிற்கும். இல்லாவிட்டால் விசாரணை , கமிஷன் என்று நிதி கொடுப்பதே நின்று விடும்.  

அப்படி எதுவும் நேராமல் தேர்தலில் அதிமுக, பாஜக வெற்றி பெற்றால் அது திருமங்கலம் பாணியை கடைபிடித்து வெற்றி பெற்ற திமுகவிற்கு தரும் பதிலடியாகத்தான் இருக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close