இசைப்பயணம்-7... செவிக்கு இனிய நாதஸ்வரம் !

  டேவிட்   | Last Modified : 14 Feb, 2019 06:05 pm
about-music-7-nadaswaram

இன்று நாம் பார்க்கப்போவது, நாதஸ்வரம் என்னும் துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது நாதஸ்வரம் , நாதசுரம், நாகசுரம், நாகஸ்வரம். நாயனம் என்று அழைக்கப்படுகிறது. இதுபற்றி சுருக்கமாக காண்போம்.  

தென்னிந்தியா, இலங்கை போன்ற இடங்களிலும், தென்னிந்திய இனத்தவர் வாழும் உலகின் பிற பகுதிகளிலும் நாதஸ்வரம் நடைமுறையில் உள்ளது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு மிகவும் ஏற்றது. வெகு தூரத்தில் இருந்து கேட்டாலும் செவிக்கு இன்பத்தைத் தரும் இயல்பினைக் கொண்டது நாதஸ்வரம்.

பொதுவாக எல்லாவகையான மங்களகரமான நிகழ்வுகளிலும் இதற்கு ஒரு தனி இடம் உண்டு. கோயில்களில் அன்றாடம் இது பல தடவைகள் இசைக்கப்படுவது வழக்கம். மேலும், திருமணம், பூப்புனித நீராட்டுப் போன்ற நிகழ்ச்சிகளிலும், சமய சார்பற்ற பல பொது நிகழ்வுகளிலும் நாதஸ்வரம் சிறப்பிடம் பெறுகின்றது.

நாகூர், நாகபட்டிணம் முதலிய ஊர்களில் உள்ளவர்களான, நாகசர்பத்தைத் தெய்வமாகப் பூசித்த நாகர் என்பவர்களால் நாதஸ்வரம் வாசிக்கப்பட்டு வந்தது. நாகத்தைப்  போன்று உருவத்தைக் கொண்டு நீண்டிருந்ததின் காரணமாகவும் நாதசுவரம் என்னும் பெயர் ஏற்பட்டது. இதனுடைய இனிமையான நாதம் காரணமாக பிற்காலத்தில் இது நாதஸ்வரம் எனப்பட்டது.

நாதஸ்வரம் ஒரு பண்டைத் தமிழ் இசைக்கருவியாகத் தெரியவில்லை. சங்ககாலத் தமிழ் இலக்கியங்களோ அல்லது இடைக்கால இலக்கியங்களோ நாதஸ்வரம் தொடர்பான தகவல் எதுவும் இல்லை என கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் வங்கியம் என்னும் இசைக்கருவியுடன் இதனைத் தொடர்புபடுத்தச் சிலர் முயற்சி செய்தபோதிலும், அது புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியே என்று பலர் கருதுகிறார்கள். இசைக் கலைஞர்கள் பற்றிக் குறிப்பிடுகின்ற கல்வெட்டுக்களிலும் கூட நாதஸ்வரம் பற்றிய குறிப்புக்களோ அல்லது அதனோடு தொடர்புடைய இசைக் கலைஞர் பற்றிய குறிப்புக்களோ இதுவரை கிடைக்கவில்லை. 

நாதஸ்வரம், வட இந்தியக் குழல் இசைக்கருவியான ஷெனாய் போன்றது ஆகும். எனினும் இது ஷெனாயை விட அளவில் பெரியது. இது வன்மரத்தினால் செய்யப்பட்ட உடலையும், மரத்தினால் அல்லது உலோகத்தினால் செய்யப்படும் விரிந்த அடிப் பகுதியையும் கொண்டது. நாதஸ்வரம், ஆச்சாமரம் என்னும் மரத்தால் செய்யப்படுகின்றது. வட்டவடிவமாக விரிந்து காணப்படும் அணைசு, உள் கூடான நீண்ட மரக்குழலால் ஆன உடல், உடலின் மேற் பொருத்தப்படும் கெண்டை, அவ்வப்போது வைத்து இசைக்கப்படும் சீவாளி ஆகிய பகுதிகளைக் கொண்டது நாதஸ்வரம்.
 

நாதஸ்வரத்தின் மேற்பாகத்தில் 12 துளைகள் உள்ளன. மேலிருந்து வரும் 7 துளைகளும் இசைப்பதற்கு ஏற்றவை. மற்றைய ஐந்தையும் அவ்வப்போது மெழுகால் அடைத்தும் திறந்தும் கொள்வார்கள். நாதசுவரத்தின் நீளம் சுமார் இரண்டரை அடியாகும்.  நாதஸ்வரத்திற்கு, ஸ்ருதி கருவியாக விளங்குவது ஒத்து என்ற நாதசுவரத்தைப் போன்றவடிவமுள்ள ஒரு கருவி. இதிலிருந்து ஆதார ஸ்ருதி மட்டும் தான் வெளிவரும். இதனை ஒருவர் வாயில் வைத்து, தொடர்ச்சியான ஒலியை எழுப்பி வருவார். 

நாதஸ்வரத்தில் இசை உருவாதற்கு சீவாளி மற்றும் குழலில் அமைந்திருக்கும் துளைகள் காரணமாகின்றன. சீவாளியில் அமைந்திருக்கும் மெல்லிய இடைவெளியில் வாயிலிருந்து காற்று அனுப்பப்படுகிறது. இதனால் சீவாளியினால் அடிப்படை ஸ்வரம் உருவாக்கப்படுகிறது.  நாதஸ்வரக் குழலில் இருக்கும் துளைகளைப் பயன்படுத்தி, நாதஸ்வர குழலினுள் இருக்கும் காற்றின் அளவு மாற்றியமைக்கப்படுகிறது.  இதன் விளைவாக காற்று பலவித ஸ்வர, நாத வேறுபாடுகளைக் கொண்ட இசையாக மாறுகிறது.

(தொடரும்...)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close