இசைப்பயணம்-9... கம்பி இசைக்கருவி வீணை !

  டேவிட்   | Last Modified : 18 Feb, 2019 07:41 am
about-music-9-veena-special-story

தினமும் ஒவ்வொரு இசைக்கருவியைக் குறித்து சுருக்கமாக பார்த்து வருகிறோம். இன்று நாம் தெரிந்துகொள்ளப்போவது கம்பி இசைக்கருவியான வீணை குறித்து தான்.  

கி.பி. 17ஆம் நூற்றாண்டில், தஞ்சையை ஆண்ட ரகுநாதர் மன்னரின் காலத்தில்  தான் வீணை தற்போதைய உருவத்தை அடைந்தது.  குடம், மேற்பலகை, தண்டி, மாடச்சட்டம், சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் ஆகிய பாகங்களைக் கொண்டது. வீணை. 

வீணை மீட்டு கருவிகள் மற்றும் கம்பி வகையைச் சேர்ந்தது. இதில், மூன்றரை ஸ்தாயிகள் வாசிக்கலாம். 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் ஸ்ருதிக்காகவும் தாளத்திற்காகவும் அமைந்துள்ளன. வீணை பலா மரத்தினால் வீணை செய்யப்படுகிறது.

வீணையில் தண்டியின் ஒரு புறம் குடமும், மற்றொரு புறத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டிருக்கும். தண்டி, குடப்பக்கத்தில் சற்றுப் பெரியதாகவும், யாளி முனைப் பக்கத்தில் சற்றுச் சிறியதாயும் இருக்கும். தண்டியின் இரு புறங்களிலும், மெழுகுச் சட்டங்கள் உண்டு. அவைகளின் மேல் 2 ஸ்தாயிகளைத் தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினால் செய்யப்பட்டிருக்கும்.

நாகபாசத்தில் சுற்றப்பட்டிருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியைச் செம்மையாக சேர்ப்பதற்குப் பயன்படுகின்றன. வளையங்களில் நாகபாசப் பக்கமாகத் தள்ளினால் ஸ்ருதி அதிகரிக்கும். யாளியின் பக்கம் தள்ளினால் ஸ்ருதி குறையும். பிரடைகளை யாளி முகப்பக்கம் தள்ளினாலும் ஸ்ருதி குறையும். யாளி முகத்திற்கு அருகிலிருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும் பயன்படுகின்றது. 4 வாசிப்புத் தந்திகள் லங்கர்களின் நுனியிலுள்ள வளையங்களில் முடியப்பட்டு, குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டிருக்கும்.

ஒரே மரத்துண்டிலிருந்து தண்டியும் குடமும் குடைந்து செய்யப்படும் வீணைக்கு ஏகாந்த வீணை'என்று பெயர் உண்டு. வீணை குடத்தின் மேல் பலவகைகளில் பல ஒலித்துளைகள் வட்டவடிவமாகப் உருவாக்கப்பட்டிருக்கும்.

வலது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள ஸ்ருதித் தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப்படுகிறது. தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல்களில் நெளி எனும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொண்டு மீட்டுவர். சிலர் நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன்னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி, கீழ் தண்டிலுள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவர். தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது தொடையால் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.

உருத்திரவீணை,  சித்திரவீணை, நவசித்திரவீணை, மோகன் வீணை, சாத்வீக வீணை, அன்சவீணை என வீணைகளில் பல வகைகள் உள்ளன. 

(தொடரும்...)

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close