தொகுதி ஒதுக்கீடு - சறுக்கலா, சாணக்கியத்தனமா?

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 20 Feb, 2019 10:34 am
special-article-about-bjp-admk-alliance

ஒரு தேசிய கட்சி, அதும் நாட்டை ஆளும் கட்சி, அடுத்ததாகவும் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ள கட்சியாக இருந்து கொண்டு, சரியான தலைமை இல்லாத ஒரு மாநிலக் கட்சியிடம், இப்படி வெறும் ஐந்து சீட்டிற்கு மடங்கி விட்டதே?
இது பெரிய வீழ்ச்சி இல்லையா? மத்திய பா.ஜ.க.,வும் அத்தனை பலவீனமாகி விட்டதா? இல்லை... இங்கே தான், அ.தி.மு.க., அதிகம் வளர்ந்து விட்டதா?

சில விசயங்களை மனதிற்கொண்டு, கணக்கிட்டுப் பார்ப்போம்.

1, பா.ஜ.க.,வுக்கு, மக்கள் மத்தியில் முன்பு இருந்ததை விட, தற்போது ஓரளவு ஆதரவு பெருகியுள்ளது. முதற் காரணம் பிரதமர் மோடி தலைமையிலான வெளிபடையான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சி; மற்றொன்று, ஸ்டாலின் உட்பட தொடர்ந்து இந்துமதத்தை துவேஷித்து, இரட்டை வேடம் போடும் தலைவர்கள் மற்றும்  சீமான், திருமுருகன் காந்தி போன்ற பிரிவினைவாத கருத்துக்களை பரப்பும் தலைவர்கள். 

2, பா.ஜ.க.,வினைச் சரியாக ஒருங்கிணைத்துப் போகக் கூடிய அளவிற்கு மாநிலத் தலைமையும் இல்லை. திராவிடத் தாக்கம், தமிழக மக்களின் மனப் போக்கினை உணர்ந்து சரியாக கட்சியின் தலைமைக்கு உணர்த்தவும் இங்கே ஆளில்லை.

3, தமிழகத்தில் பிற கட்சிகளைப் போல் பாஜகவுக்கு மாவட்ட/மண்டல வாரியாக சாதி மற்றும் களப்பணியாற்றிய ஆளுமைகள் கட்சியில் இல்லை. ( ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இறந்த பின்பும், திராவிடக் கட்சிகளின் பலம் பொருந்தி நிற்பதற்குக் காரணம் பகுதிவாரியாக ஒரு ஆளுமையை உருவாக்கி வைத்திருப்பது தான். அதே சமயம், அவர்களை அந்தப் பகுதிக்கு மேல் வளரவிடாமலும் பார்த்துக் கொள்வர்)

4, இந்த மாநிலத்தில், பாஜகவுக்கு சித்தாந்த ரீதியாக இருக்கும் தொண்டர்கள் பலம், களத்தில் பாதி கூட கிடையாது. அதாவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற அடி மட்ட வேலைகள் செய்ய / தெருவில் இறங்கி கோஷம் போடக் கூட ஆட்கள் கிடையாது.

5, பாஜகவுக்கு ஓட்டுப் போடும் மனநிலையில் இருக்கும் வாக்காளர்களும் தமிழகமெங்கும் பரவித்தான் இருக்கிறார்களேயொழிய தொகுதிவாரியாக வெற்றியை முடிவு செய்யும் அளவிற்கு குவிந்து இல்லை. கொங்கு மண்டலம், நாஞ்சில் மண்டலம் தவிர்த்து.

 இந்தச் சூழலில் தான்,  பாஜக ஆதரவாளர்கள், இந்த ஐந்து சீட்கள் ஒதுக்கப்பட்டதற்கு ஆதங்கப்படுகிறார்கள். இத்தனை காலம் மற்ற கட்சிகள் சொல்லி வந்த “அதிமுகவைக் கட்டுப்படுத்தும் பாஜக” என்ற  வதந்தியை மறைமுகமாக பாஜகவினரே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  

நிஜம் என்னவென்றால், ஒரு மாநில அரசின் மீதான ஆளுமையைத் தான் மத்திய அரசு செலுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது,  நிர்வாகரீதியாக சில நிர்பந்தங்களை வைத்து வருகிறது. பெரிய ஆளுமை இல்லாத காரணத்தாலும், நிர்வாகத் துணையாகவும், தூண்டலாகவும் இருப்பதாலும் தான், மாநில அரசு ஏற்று நடந்து வருகிறது. மற்றபடி ஒரு நாளும் தன் கட்சி நிர்வாகத்திற்குள் அதிமுக யாரையும் உள்ளே விடவில்லை.

சரி ஒருவேளை, அதிமுக, பாஜகவுக்கு 15 தொகுதிகள் ஒதுக்கி இருந்தால், வெற்றி வாய்ப்புள்ள பதினைந்து வேட்பாளர்களை பாஜக அபிமானிகள் அடையாளம் காட்ட முடியுமா? 

ஒருவேளை, இருக்கும் பாஜக பிரமுகர்கள் அனைவரையும் நிறுத்தி 15 தொகுதியும் ஜெயித்து விட்டால், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிரபலமான வேட்பாளர்கள் எத்தனை பேர் வைத்திருக்கிறார்கள்? சும்மா வாய் புளித்ததோ, புளி புளித்ததோவென்று பேசக் கூடாது.

ஆனால், பாஜக தலைமை, இங்கே எத்தனை சாமர்த்தியமாகக் காய் நகர்த்தியிருக்கிறது என்று கவனியுங்கள்.

தேர்தல் வேலைகளுக்கு தொண்டர்கள் பிரச்சினை இல்லை. ஒருவேளை பத்து தொகுதி ஒதுக்கியிருந்தாலும், அதில், பாரிவேந்தர், ஏசி சண்முகம், கிருஷ்ண சாமி, தேவநாதன் என்று பிரித்துக் கொடுக்க நேர்ந்திருக்கும். அதற்குப் பதிலாக, பா.ம.க., அதிமுக, தமிழகத்தைப் பொருத்தவரை எனக்குக் கொடுத்த ஐந்து தொகுதி வெற்றிக்கும் நீயே பொறுப்பு. 

என்னைச் சார்ந்துள்ளவர்களுக்கு நீ தனியா சீட் ஒதுக்குவதும், சமாதானப்படுத்திக் கொள்வதும் உன் பொறுப்பு. ஆனால், எனக்கு, 40 தொகுதியிலும் உத்தரவாதம் கொடுத்திடு. 

அதாவது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில்” இணைந்து விடு. தமிழகக் கூட்டணியில் ஜெயிக்கும் அத்தனை தொகுதியும் பாஜகவின் பலம் என்று உறுதிபடுத்திக்கொண்டு விட்டது. ஜெயலலிதா, கருணாநிதி இருந்தால் தான், நடுவில் காலை வாருவது, கோரிக்கை என்ற பெயரில் குறுக்குசால் ஓட்டுவது போன்ற சிரமங்கள் இருக்கும். இப்பொழுது அவ்வளவு சிரமம் இல்லை. 


தேசிய பாஜகவைப் பொருத்தவரை, தமிழகம் என்பது சுமை இல்லாத சுகமாகி விட்டது. இது, நிச்சியம் ஒரு சாணக்கியத்தனமான நகர்வு தான்.

newstm.in

இந்த கட்டுரையில் வரும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close