குழப்பும் கூட்டணி கணக்கு: சமாளிப்பாரா ஸ்டாலின்?

  பாரதி பித்தன்   | Last Modified : 20 Feb, 2019 12:33 pm
article-about-loksabha-election-alliance

லோக்சபா தேர்தலுக்கான களம், வெளிச்சத்திற்கு வரத் தொடங்கி உள்ளது. தமிழத்தில், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் இடையே தான் போட்டி என்றாலும், சிறியதாக கடை நடத்துபவர்கள்... சாரி.... கட்சி நடத்துபவர்கள், யார், யார் பக்கம் இணைவார்கள் என்ற திரைமறைவு பேச்சுவார்த்தைகள் ஆர்வத்தை துாண்டியது. 

ஜெயலலிதாவின் பிறந்த நாளான, மாசி மகம் அன்று, அதிமுக தன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. பாமக, 7 இடங்கள், பாஜக 5 இடங்கள் என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், அதிமுகவின் வாக்கு வங்கி நிலைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறலாம்.

கடந்த ஆர்கே நகர் .தேர்தலில், சுயேட்சையாக போட்டியிட் தினகரன், 50.32 சதவீதமான, 89 ஆயிரத்து 13 ஓட்டுகளை பெற்றார். இதில், அதிமுக, 27.31 சதவீதமான, 48 ஆயிரத்து 306 ஓட்டுகளும், திமுக, 13.94 சதவீதமான, 24,651 ஓட்டுகளும் மட்டுமே பெற்றுள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக பெற்ற ஓட்டு,ஆயிரத்து 368 மட்டுமே.

இதுதான் தமிழகத்தில் மிக சமீபத்தில் நடந்த தேர்தல், இதில், அதிமுக, தினகரன் ஓட்டு சதவீதத்தை கூட்டினால், 77.63 சதவீதம் வருகிறது. இப்போது வரை கூட்டணியில் மாற்றம் இல்லாத, திமுக பெற்ற சதவீதம், 13.94. இதை திமுக, 77.64 சதவீதமாக உயர்த்தினால் தான் வெற்றி பெற முடியும். 

 

இந்த கணக்கு கண்ணை மூடிக் கொண்டு சொல்லுவது என்றால் கூட, திமுக பின்தங்கியே இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள தான் வேண்டும்.
கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக, 44.30 சதவீதம், திமுக, 23.60 சதவீதம், பாஜக, 5.5 சதவீதம், பாட்டாளி மக்கள் கட்சி, 4.4 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளன. இதில், அதற்கு முந்தைய தேர்தலை விட அதிமுக, 21.42 சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளது. திமுகவோ, 1.49 சதவீதம் ஓட்டுகள் குறைவாக பெற்றுள்ளது. 

வர இருக்கும் லோக்சபா தேர்தலில், கடந்த தேர்தலை விட, 21.42 சதவீதம் ஓட்டுகள் அதிமுக குறைவாகவும், திமுக 1.49 சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றாலும் கூட அதிமுக,  22.88 சதவீதம் ஓட்டு பெறும். திமுக 25.09 சதவீதம் ஓட்டு பெறும். 
அதிமுக தன் வாக்கு வங்கியை அதிகரிக்க, தற்போது பாமக, பாஜக.,வை சேர்த்துள்ளது. விரைவில், தேமுதிகவையும் சேர்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.   கடந்த தேர்தலில், கூட்டணியில் இல்லாத காங்கிரஸ் இந்த முறை திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. 

இந்த சூழ்நிலையில், அதிமுக கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளர் கிடைத்துள்ளார். திமுகவிற்கு ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என்று தமிழகத்தில் கூறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆனால், அகில இந்திய அரசியலை படிக்கும் தமிழர்கள், ராகுல் பிரதமர் என்பதை அவர்கள் கூட்டணியே ஏற்கவில்லை என்பதை அறிவார்கள்.

இது போன்ற சூழ்நிலையை, திமுக தலைவர் ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகீறார் என்பது மிகப் பெரிய கேள்வி.     காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், ‛திருமண நிச்சயதார்த்தம்’ அதாவது கூட்டணி உடன்பாடு நடக்கவே இன்னும், இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என்கிறார். 

தாலி கட்டாமல் வெளிப்படையாக காங்கிரஸ் குடும்பம் நடத்தினால் கூட, அந்த கட்சி யாருடனாவது ரகசிய தொடர்பு என்ற சந்தேகம் திமுக.,விற்கு இருந்ததால் தான், நிச்சயதார்த்தம் இவ்வளவு நாள் தள்ளிப் போக காரணமாம். ஒரு வழியாக எதிர்த்த வீட்டில் திருமணம் முடிந்துவிட்டது. 

இனி இந்த வீட்டில் கல்யாணம் எப்படி நடக்கிறது என்று பார்க்க வேண்டும். ஏற்கனவே, கூட்டணி கட்சி தோழமை கட்சி என்ற விளையாட்டு வேறு இருக்கிறது. 

மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் சேருமா, அல்லது கடைசி நேரத்தில் கொள்கை பேசுவார்களா என்பது தெரியவில்லை. இன்று வரை, திமுக தரப்பிலிருந்து, அவர்களும் கூட்டணி கட்சிதான் என்று வெளிப்படையாக அறிவிக்க வில்லை. 

இருதரப்பும் தப்புக் கணக்கு போடாமல் அமைதியான முறையில் சீட்டுகளை பிரித்துக் கொண்டால், வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். அவ்வாறு இல்லாவிட்டால், ஆர்கே நகர் அளவிற்கு கேவலமான தோல்வியை திமுக தவிர்க்கலாமே தவிர்த்து, வெற்றி சற்று தள்ளித்தான் நிற்கிறது. ஸ்டாலின் சமாளிப்பாரா என்பது போகப் போகத்தான் தெரியும். 

newstm.in

இந்த கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close