'மக்களால் நான்...மக்களுக்காக நான்..!' - ஜெயலலிதா பிறந்ததின சிறப்பு பகிர்வு!

  முத்துமாரி   | Last Modified : 24 Feb, 2019 08:28 am
jayalalitha-s-life-history

கல்வியில் புலமை, திரையுலக நடிப்பில் ஜாம்பவான், அரசியல் ஆளுமை, தமிழகத்தின் இரும்புப்பெண்மணி, அதிமுக தொண்டர்களின் அம்மா என பல புகழுக்கு சொந்தக்காரர் தான் செல்வி ஜெ.ஜெயலலிதா. அவரது நீண்ட வாழ்க்கை வரலாறு மிக சுருக்கமாக....

►  ஜெயராமன் - சந்தியா தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக 1948 பிப்ரவரி 24ம் தேதி மைசூரில் பிறந்தார் ஜெயலலிதா. தனது 2வது வயதில் தந்தையை இழந்த ஜெயலலிதா தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். 

►  பெங்களூருவில் உள்ள 'பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர், தாயார் சந்தியா திரையுலகிற்கு வந்தமையால் ஜெயலலிதாவும் சென்னை வந்தார். சென்னையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்டில் சேர்க்கப்பட்டார். 1964ல் அங்கு தனது 10ம் வகுப்பை முடித்தார். பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் இடம்பெற்றார். 

►  படிக்கும்போதே, பரத நாட்டியம் பயின்று தனது 12வது வயதில் நடன அரங்கேற்றம் செய்தார். கர்நாடக சங்கீதத்தையும் முறையாக கற்றுக்கொண்டார். இசை கருவிகளை மீட்டுவதிலும், பாடுவதிலும் தேர்ச்சி பெற்றவர். சிறுவயதிலேயே தமிழ் தவிர ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்டபிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார். 

►  மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்த சமயத்தில் அவருக்கு திரையுலகில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் 1965ல் வெளியான "வெண்ணிற ஆடை" தான் அவர் கதாநாயகியாக நடித்த முதல் தமிழ்ப்படம்.

►  எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 120 க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தனது நடிப்பு முத்திரையை பதித்துள்ளார். தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகள் என்று புகழ்பெற்ற எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இணைந்து மொத்தம் 26 படங்களில் நடித்துள்ளனர். 

►  பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்ட அவர், 1981ல் எம்.ஜி.ஆர் அழைக்கவே, அதிமுக அடிப்படை உறுப்பினரானார். 1983ல் கொள்கை பரப்புச் செயலாளர், 1984ல் முதன்முறையாக ராஜ்யசபா எம்.பி ஆனார். 

►  1987ல்  எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, அவரது அரசியல் வாரிசாக கருதப்பட்டவர் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதா மற்றும் ஜானகியின் கீழ் அ.தி.மு.க இரண்டு கட்சிகளாக உடைந்தது. பின்னர், கட்சியை ஒருங்கிணைத்து, 1989ம் ஆண்டில் அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார். 1989-1991 வரை முதல் பெண் எதிர்கட்சித் தலைவராக தமிழக சட்டசபையில் இருந்தார். 

►  தொடர்ந்து 1991ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத்தேர்தலில் அமோக வெற்றிபெற்று, ஜானகி இராமச்சந்திரனுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

►  1995ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி அவருடைய வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை தமிழக மக்கள் அனைவரும் வாய் பிளக்கும் அளவுக்கு ஆடம்பரமாக நடத்தினார். மின்கம்பங்களில் கரண்ட் எடுப்பது, சாலை முழுவதும் பள்ளம் தோண்டி அலங்கார வளைவு அமைப்பது, நிதி வசூல், காவல்துறை குவிப்பு என அதிமுக தனது அதிகாரத்தை அனைத்திலும் பயன்படுத்தியதை எவராலும் மறக்க முடியாது.

►  1991- 1996ம் ஆண்டு கால கட்டத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி, பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். 

►  1996ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்தது. சுதாகரன் திருமணமும், சொத்துகுவிப்பு வழக்கும்  தோல்விக்கு காரணமாக பேசப்பட்டது. 

►  பின்னர் 2001ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில், 196 இடங்களில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. அதே ஆண்டு டான்சி நில முறைகேடு வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அந்த சமயத்தில் தான் முதல் முறையாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 2002-2006ல் தமிழக முதல்வராக இருந்தார். 

►  அடுத்ததாக 2011, 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றார் ஜெயலலிதா.  

►  இதற்கிடையே தான் 2014, செப்டம்பர் 27 அன்று சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய், மற்ற 3 பேருக்கும் 10 கோடி ரூபாய் அபராதம் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவாளி அதை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை பெற நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

►  பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா அளித்த மேல்முறையீட்டு மனுவில்,  2014, அக்டோபர் 17 அன்று ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நடைமுறைகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. 

►  2016ம் ஆண்டு மே மாதம் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்ற அவர், உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 22,2016ல் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு, இதய செயலிழப்பு காரணமாக  டிசம்பர் 5, 2016 அன்று இயற்கை எய்தினார். 

►  ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் பல புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்தார். அம்மா உணவகம், மழைநீர்  சேகரிப்பு திட்டம், மாணவர்களுக்கு இலவச சைக்கிள், மடிக்கணிணி திட்டம் என பல திட்டங்களை கொண்டு வந்தார்.  பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு, தொட்டில் குழந்தை திட்டம், பாலூட்டும் தாய்மார் அறைகள் என பல நல்ல திட்டங்களை செயல்படுத்தினார். தமிழகத்தை ஆட்சி செய்த இரும்பு பெண்மணி என்ற பெயரை பெற்றார். 

►  தொடர்ந்து, உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 22,2016ல் அப்போலோ மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டார். 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்ற அவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5, 2016 அன்று இயற்கை எய்தினார். அவரது மரணம் இன்றும் தமிழக மக்கள் மத்தியில் ஒரு மர்மமாகவே பார்க்கப்படுகிறது.  

►  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 வருட சிறைத்தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது மூவரும் பெங்களூரு சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். 

►  ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அவரது கட்சியினர் இன்றும், 'அம்மாவின் வழியில்' என்று கூறி ஆட்சி புரிந்து வருகின்றனர். எந்த ஒரு கூட்டத்திலும், எந்த ஒரு செய்தியாளர் சந்திப்பிலும் அவரது பெயரை உபயோகிக்க தவறியதில்லை. மறைந்தாலும், தமிழக மக்கள் மனதிலும் அவர் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்... 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close