அம்மா.. எம்ஜிஆர்.. சசிகலா!! ஜெயலலிதாவின் நினைவுகள்!!

  சாரா   | Last Modified : 24 Feb, 2020 07:05 pm
j-about-her-mother-mgr-sasikala

மிக சிறந்த ஆளுமையாக, இரும்பு பெண்மணியாக நாம் பார்த்த ஜெயலலிதா, முற்றிலும் வேறாக புதிய மனிதராக ஒரு பேட்டிக்  கொடுத்திருந்தார். பிரபல பத்திரிகையாளர் சிமி கார்வேலுக்கு அவர் அளித்த பேட்டி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இணையத்தில் அதிகமாக பரப்பப்பட்டது.  

அந்த பேட்டியில் தனது சொந்த வாழ்க்கை குறித்து அவர் பேசியிருந்தது, அதற்கு முன் யாரும் பார்த்திராத பக்கம். குறிப்பாக தன் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த மூன்று நபர்களை பற்றி ஜெயலலிதா  அந்த பேட்டியில் பேசியிருப்பார். 

ஜெயலலிதா சினிமாவுக்கு வர காரணமாக இருந்த அவரது தாய் சந்தியா, அவர் அரசியலுக்கு வர காரணமாக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தான் அவரது வாழ்க்கையின் முக்கிய மூன்று நபர்கள். 

சிமி கார்வேலுக்கு அவர் அளித்த பேட்டியில் சிறு வயது பிள்ளையாக தனது தாய் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்ட போது, குழந்தை பருவத்திலேயே தாத்தா, பாட்டியிடம் தன்னை விட்டுவிட்டு தனது தாய் வேலையில் பிசியாக இருந்ததாக கூறியிருக்கிறார். ஜெயலலிதாவின் தாயான சந்தியாவும் சினிமா நடிகை. அவர் குணசித்தர வேடங்களில் நடித்து வந்திருந்தார். கணவரை வெறும் 22 வயதிலேயே இழந்த சந்தியா தான் தனது இரண்டு குழந்தைகளையும் தனி ஆளாக வளர்த்தெடுத்திருக்கிறார். 

மேலும் தனது தாய் குறித்து ஜெயலலிதா கூறும்போது, "அம்மாவுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னை பார்க்க வருவார்கள். ஆனால், அடிக்கடி என்று சொல்ல முடியாது. எனக்கு ஐந்து வயதிருக்கும். அப்போது பெங்களூரு வரும் என் அம்மா , சென்னை திரும்ப நேர்கையில், அவரை விடக்கூடாது என்பதற்காக , நான் தொடர்ந்து அழுவேன். இதன் காரணமாக, என்னை தூங்க வைத்துவிட்டுத்தான், அம்மா சென்னைக்கு கிளம்புவார்கள். ஆனால், அவர் சென்னை கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக தூங்கும்போது, அவரது சேலைத் தலைப்பை என்னுடைய கைகளில் சுருட்டி வைத்துக் கொள்வேன்.

காலையில் எழுந்திருக்கும்போது,என் சித்தியின் சேலை தலைப்புத்தான் என் கையில் இருக்கும்.காலையில் எழுந்து அம்மாவை பார்க்க வேண்டும் என, ஒரு மூன்று நாட்களுக்காவது சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அழுதிருக்கிறேன். உண்மையில் பெங்களூரில் இருந்த நாட்களில் எல்லாம் என் தாயாருக்காக ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

தனது அம்மா தன்னை எப்படி பார்த்துக்கொண்டாரோ, எப்படி தவறுகளை சுட்டிக்காட்டினாரோ அது போல தான் எம்.ஜி.ஆர் தனது வாழ்கையில் இருந்தார் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். எம்.ஜி.ஆரை பார்க்கும் எவருக்கும் அவர் மீது காதல் வந்துவிடும் என்றும், சிறு வயதில் அவரை போல தனது சகோதரருடன் கத்திச்சண்டை போடுவேன் என்றும்  ஜெ. அந்த பேட்டியில் நினைவுக்கூர்ந்துள்ளார்.

அவர் எனக்கு தந்தையாக, தாயாக, நண்பராக, குருவாக என அனைத்துமாக இருந்தார். எனது வாழ்க்கையை முழுக்க முழுக்க அவர் தான் அப்போது பார்த்துக்கொண்டார், என்று கூறிய ஜெயலலிதா, தனது தாய்க்கு இருந்த குணங்கள் எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக கூறினார். 

பின்னர் தனது நெருங்கிய தோழி சசிகலா பற்றி அவர் பேசும் போது, "எனது தோழி என்ற ஒரே காரணத்திற்காக பலரது கோபத்துக்கு ஆளானவர் அவர். அவரை பற்றி பலரும் தவறாக புரிந்து கொண்டு இருக்கின்றனர். எனது அம்மா எனக்கு எதையும் கற்றுத்தரவில்லை. நடிப்பும் நடனமும் மட்டுமே எனக்கு தெரிந்தது. நான் சினிமாவில் நடிக்கும் போது, எனக்காக சில வேலைகளை யாராவது செய்யவேண்டும். எனக்காக கடைக்கு செல்லவேண்டும், எனக்கு தேவையானதை நினைவுப்படுத்த வேண்டும்... இதையெல்லாம் சசிகலா தான் செய்தார். 

நான் தவறு செய்யும் போது அதனை எடுத்துக் கூற அவர் எப்போதும் மறுத்ததே இல்லை" என்று கூறியிருந்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close