எல்.கே.ஜி., தான் படிக்கிறீர்கள் என்பது நினைவிருக்கட்டும் பிரேமலதா அவர்களே...

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Mar, 2019 04:16 pm
political-article-about-admk-dmdk-alliance

லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளும் அ.தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சியான தி.மு.க., தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தேசிய, மாநில கட்சிகள் மட்டுமின்றி, லெட்டர் பேடு கட்சிகள் வரை அனைவரும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். 

இந்நிலையில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விற்கு மாற்றாக தன்னை அறிவித்து, அரசியல் கட்சி துவங்கிய விஜயகாந்த்தின் தே.மு.தி.க., அந்த கட்சி போட்டியிட்ட முதல் தேர்தலில், தனித்து களம் கண்டது. அதில் பெற்ற வாக்கு வங்கியால், அடுத்த தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்து, தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்த்தை பெற்றது. 

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் இந்த வெற்றி கிடைத்தது என்பதைக் கூட அறியாமல், சட்டசபையில், அந்த கட்சியை பகிரங்கமாக எதிர்த்தார் விஜயகாந்த். எனினும், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் செய்த விதம், மக்கள் மத்தியில், விஜயகாந்த்தின் செல்வாக்கை மேலும் அதிகரித்தது. 

இதையடுத்து, அதற்கு அடுத்து நடந்த தேர்தலில், விஜயகாந்த்தை தங்கள் பக்கம் வளைத்துப் போட முயன்றது தி.மு.க., ஆனால், அவர்களின் முயற்சி தோல்வி அடைந்ததால், அந்த கட்சியை உடைத்து, கடலில் கரைத்த பெருங்காயமாய் மாற்றும் முயற்சிகளை வெற்றிகராமாக செயல்படுத்தியது தி.மு.க.,

இதை தொடர்ந்து, ம.தி.மு.க., தலைவர் வைகோவின் பேச்சைக் கேட்டு, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தார் விஜயகாந்த். அப்போது பார்த்து, அவரின் உடல் நலம் வேறு படுத்தி எடுத்தது. அடிக்கடி உணர்ச்சி வசப்படும் எந்த தலைவரையும் மக்கள் மதிப்பதில்லை என்பது தெரியாமல், பத்திரிக்கையாளர்களை அவமதிப்பதும், தன் சொந்த கட்சி வேட்பாளரையே மக்கள் முன்னிலையில் அடிப்பதுமாக இருந்தார் ‛மதிப்பிற்குரிய’ கேப்டன்.

ஏற்கனவே, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்துகொண்டே அவர்களை கடுமையாக விமர்சித்து, அவர்களிடமிருந்து வெளியேறியது; தி.மு.க.,விடம் பேரம் பேசி படியதாததால், அவர்களுக்கும் பெப்பே காட்டியது உள்ளிட்ட நடவடிக்கைகளால், இரு தரப்பிலும் பகையை சம்பாதித்துக்கொண்டார் விஜயகாந்த். 

மேலும், அவரின் அடாவடி நடவடிக்கைகள், மக்களை முகம் சுழிக்க வைத்தன. பத்திரிக்கையாளர்களை கேவலப்படுத்துவதாக எண்ணி, அவர்களின் பகையையும் சம்பாதித்ததால், ஊடகங்களே அவரை, ஒரு ஜோக்கராக சித்தரிக்க துவங்கின. 

இத்தனைக்கும் மேல், அவர் செய்த மாபெரும் தவறு, வைகோ பேச்சை கேட்டு அவர் பின்னாள் சென்றது, அவரது மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷுக்கு கட்சியில் முக்கியத்துவம் அளித்தது உள்ளிட்டவை, விஜயகாந்த்தின் அரசியல் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களாக விளங்கின. 

இவையெல்லாம், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் அரசியல் ஜாம்பவான்கள் உயிரோடு இருந்த காலத்தில் நடந்தவை. சரி, அவர்கள் இருவரும் இல்லாமல், தமிழகம் சந்திக்க உள்ள முதல் மாபெரும் தேர்தல் இது.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்த நண்பனும் இல்லை என்ற வாசகத்திற்கு ஏற்றார் போல், தி.மு.க, மற்றும் அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் தே.மு.தி.க.,வை தங்கள் கூட்டணிக்குள் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டன. 

அதிலும், தி.மு.க., தரப்பில் சற்று அதிகமாகவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடந்த தேர்தலில் ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க., தோல்வி அடைந்தது போல, இப்போதும் நடந்துவிடக் கூடாது என்று எண்ணிய ஸ்டாலின், முதலில் திருநாவுக்கரசரை விட்டு பேச்சுவார்த்தைக்கு நுால் விட்டார். 

திருநாவுக்கரசருக்கு கைமாறு செய்ய வேண்டிய நிலையில், ரஜினியும் போய் விஜயகாந்தை பார்த்துவிட்டு வந்தார். இதைத் தொடர்ந்து ஸ்டாலினே நேரில் களம் இறங்கினார். கடைசியாக தனித்து விடப்பட்ட நடிகர் சரத்குமார் கூட போய் பார்த்துவிட்டார். ஆனால், யாருக்கம் விஜயகாந்த் பிடி கொடுத்ததாக தெரியவில்லை. 


விஜயகாந்த் என்றால், அவர் அல்ல, அவர் பெயரை சொல்லி, அந்த கட்சியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பிரேமலதா, சுதீஷ் தான். அரசியல் பள்ளியில், விஜயகாந்த்தாவது, எஸ்.எஸ்.எல்.சி., முடித்தவர் என்றால், இவர்கள் இருவரும், இப்போது தான், பாலபாடமான, எல்.கே.ஜி., படிக்கின்றனர் எனலாம். 

அப்படிப்பட்ட எல்.கே.ஜி., குழந்தைகளின் இழுத்தடிப்பால் விரக்தி அடைந்த ஸ்டாலின், ஒரு வழியாக, நேற்று தி.மு.க., கூட்டணி நிறைவு பெற்றதாகக் கூறி, தே.மு.தி.க.,விற்கு கதவைடத்துவிட்டார். 

இனி, அவர்களிடம் இருக்கும் ஒரே ஆப்ஷன் அ.தி.மு.க., தான். அவர்களையும், தே.மு.தி.க., இதுவரை கவுரவமாகவா நடத்தியுள்ளது. மூன்று முறை முதல்வர் பதவி வகித்தவர், தற்போது துணை முதல்வராக இருப்பவர், தமிழகத்தில் ஆளும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என பல முக்கிய பொறுப்பு வகிக்கும் ஓ.பி.எஸ்.,  விஜயகாந்த்தின் இல்லத்திற்கே சென்று, கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். 

ஆனால், பிரேமலதா, சுதீஷ் வகையறா, தங்கள் தகுதிக்கு மேல் ஆசைப்பட்டதால், கூட்டணியை வேண்டாம் எனக் கூறாமல், பழனிசாமியுடன் கலந்தாலோசித்துவிட்டு முடிவை கூறுவதாக அங்கிருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது. 

கூட்டணி பேச்சு வார்த்தையில் நிலவும் இழுபறியை, பட்டவர்த்தனமாக போட்டு உடைக்க கூடாது என்ற அரசியல் நாகரிகத்திற்காக, பத்திரிக்கையாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம், விஜயகாந்த்தின் உடல் நலம் குறித்து விசாரித்ததாக கூறினார். 

ஆனால், அதற்குள், தே.மு.தி.க., சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு, கூட்டணி குறித்து பேசிதாக அதில் குறிப்பிட்டு, அதையே, ஒரு நிருபர் மூலம் கேள்வியும் கேட்க வைத்துள்ளது, பிரேமலதா தரப்பு. 

தொடர்ந்து, 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கும் ஓ.பி.எஸ்.,சுக்கு, இந்த நடவடிக்கை பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. பின் அவரும் கூட்டணி பேச்சு நடந்ததை ஒப்புக்கொண்டு, விரைவில் முடிவு தெரியும் எனக் கூறி, அங்கிருந்து  விடைபெற்றார். 

இந்த சம்பவம் குறித்து, முதல்வர் எடப்பாடியிடமும் அவர் விவாதித்திருக்க வாய்ப்புள்ளது. அவரும், ஓ.பி.எஸ்., போலவே அரசியல் அனுபவம் மிக்கவர். சசிகலா, தினகரன் தரப்பையே சமாளித்து ஆட்சிக் கட்டிலை தக்கவைத்துக் கொண்டவர். அவருக்கா தெரியாது, தே.மு.தி.க.,வை சமாளிக்க.

கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை ஆதரித்த வைகோ தற்போது, தி.மு.க., பக்கம் சென்றுவிட்டார். இடதுசாரிகளும், அந்தப் பக்கம் சென்றுவிட்டனர். மூன்றவாது அணியில் இருந்த பா.ம.க.,வும், பா.ஜ.,வும்,  அ.தி.மு.க., பக்கம் சென்றுவிட்டன. 

தற்போது, தி.மு.க., தரப்பிலும் கதவடைக்கப்பட்டுவிட்டது. இனி, அந்த பக்கமும் செல்ல முடியாது. மூன்றாவது அணி அமைக்க வேறு கட்சிகளே கிடையாது. எப்படி பார்த்தாலும், அ.தி.மு.க., தரும் தொகுதிகளை பெற்றுக் கொண்டு, அவர்கள் பக்கம் செல்வதைத் தவிர, தே.மு.தி.க.,விற்கு வேறு வழியில்லை. 

பா.ம.க.,வை தங்களுடன் ஒப்பிட்டு, ஏழு லோக்சபா சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட், இரண்டு மேயர் பதவிகள் என, இப்போது வரை, பல நிபந்தனைகளை விதித்துவரும் பிரேமலதா அண்டு கோவுக்கு, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., தரப்பு சரியான பாடம் புகட்டுவர். 
அல்லது, வரும் தேர்தலில், வாக்காள பெருமக்கள் தங்கள் ஒரு விரல் புரட்சியால், கேப்டன் பெயரை சொல்லி, அந்த கட்சியை தவறாக வழி நடத்தும் நபர்களுக்கு புத்தி புகட்டுவர். 

அரசியலில் பல ஆண்டு அனுபவம் பெற்ற, பல தலைவர்களும் சிந்தித்து செயல்படும் இந்த நேரத்தில், இப்போது தான், எல்.கே.ஜி.,யில் சேர்ந்துள்ள பிரேமலதா அண்டு கோ, எம்.ஏ., பட்டதாரி போல தங்களை நினைத்துக் கொண்டு செயல்படுவது தான் ஆகச் சிறந்த காமெடியாக உள்ளது. 

newstm.in

இந்த கட்டுரையில் இடம் பெறும் அனைத்து கருத்துக்களும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close