பாவம் ஸ்டாலினுக்கு இதுவெல்லாம் தெரியாது போலும்... ஆய்வாளர் நாகசாமி சவுக்கடி!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 02:49 pm
special-article-about-stalin-vs-archaeologist-nagasamy

தொல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று, தான் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், பல அரிய வரலாற்று தகவல்களை வெளி உலக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர், நாகசாமி, 89. தமிழகத்தை சேர்ந்த இவரின் அயராத உழைப்பால், அரசு இவரை அடையாளம் கண்டது. 

1959ல், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பொறுப்பாளராக பணியில் சேர்ந்த இவர், இளம் தலைமுறையினருக்கு அருங்காட்சியகத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து, தொல்லியல் ஆய்வு பணியிலும் ஈடுபட்டு வந்தார். 

1966ல் புதிதாக உதயமான, தமிழக தொல்லியல் துறையின் தலைவராக பொறுப்பேற்று, 1988 வரை அந்த துறையை சிறப்பாக வழி நடத்தியவர் முனைவர் நாகசாமி. தமிழகத்தில் உள்ள நுாற்றுக்கணக்கான புராதன கோவில்களில் துாய்மை பணிகளும், புனரமைப்பு பணிகளும் நடக்க முக்கிய காரணமாக இருந்தவர். 

‛முத்தமிழ் அறிஞர்’ என தி.மு.க.,வினரால் அன்போடு அழைக்கப்பட்ட, மறைந்த தலைவர் கருணாநிதியின் சிறந்த நண்பராகவும் விளங்கியவர். நாகசாமியின் தமிழ் அறிவும், தமிழ் பற்றுமே இதற்கு காரணம். 

அப்படிப்பட்ட ஒருவருக்குத்தான், மத்திய அரசு சமீபத்தில், பத்ம பூஷண் விருது அளித்து கவுரவப்படுத்தியது.  

இந்நிலையில், சென்னையில் இயங்கி வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், விருது தேர்வு குழுவின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளர். மத்திய அரசின் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டானின் குரல் எழுப்பியுள்ளார். 

இதற்கு காரணம் வேறொன்றும் இல்லை. திருக்குறளையும், வேதம், சாஸ்திரங்களையும் தொடர்புபடுத்தி, நாகசாமி எழுதிய புத்தகம் தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு உருத்தலை ஏற்படுத்தியுள்ளது. ‛Tirukkural - An Abridgement of Shaastras’ என்ற பெயில் அவர் எழுதியுள்ள புத்தகத்தில், திருக்குறளுக்கும், வேத, சாஸ்திரங்களுக்கும் பல தொடர்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். 
பல இடங்களில் இதற்கான உவமைகளை காட்டி விளக்கம் அளித்துள்ளார்.

நாகசாமி எழுதிய இந்த புத்தகத்திற்கு, ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தமிழ் மொழியின் பெருமையை அழிக்க முயற்சிக்கும் நாகசாமியை, விருது தேர்வு குழு உறுப்பினராக நியமிக்க கூடாது என்றும் கூறியுள்ளார். 

தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு, ஆய்வாளர் முனைவர் நாகசாமி அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:


"தமிழ் மாெழியின் பெருமையை அழிக்க முயல்வதாக என் மீது குற்றம் சாட்டுவோர், பல நுாறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் அறிஞர்களின் கருத்துக்களையும் படிக்க வேண்டும். திருக்குறளுக்கு, சாஸ்த்திர நுால்களோடு தொடர்பு இருப்பதாக கூறுவது என் சொந்த கருத்தல்ல. 

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேளழகர், வீரமாமுனிவர் என அழைக்கப்பட்ட ஜோசப் பெஸ்கி, ஜி.யு.போப், உ.வே.சாமிநாத ஐயர், பாரதியார் போன்றோர் கூட, திருக்குறளையும், வேத, சாஸ்த்திர நுால்களையும் ஒப்பிட்டுள்ளனர்.
ஜி.யு.போப், ஓரிடத்தில் குறிப்பிடுகையில், திருக்குறள், பகவத் கீதையை பின்பற்றுவதாக கூறியுள்ளார். 

மேற்குறிப்பிட்ட மூத்தவர்களின் கருத்தை தான் நானும் பின்பற்றியுள்ளேன். அதைத் தான் என் நுாலிலும் தெரிவித்துள்ளேன். இது ஏதோ நானாக கூறிய கருத்துக்கள் அல்ல. 

ஸ்டாலினின் தந்தை கருணாநிதியின் வாயால் பாராட்டு பெற்றவன் நான். பூம்புகார் உள்ளிட்ட பல நினைவிடங்கள் அமைக்கும் போது, அதற்கு தமிழில் கவிதை எழுதித் தரச் சொல்லி கேட்டவர் அவர். தமிழ் மீது நான் கொண்டிருந்த பற்று, காதலை அவர் நன்கு அறிவார். 

பல நுாறாண்டு பழமை மிக்க தமிழ் மொழியின் வரலாற்றை, ஸ்டாலின் அறிந்திருப்பார் என நான் கருதவில்லை. சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசுவதற்கு முன், தமிழ் அறிஞர்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். திருக்குறள் பற்றிய தன் கருத்துக்களின் மூலம், உலக தமிழர்கள் மத்தியில், ஸ்டாலின்,  தமிழ் மாெழி குறித்த தன் அறியாமையை வெளிப்படுத்திவிட்டார்" 

இவ்வாறு, நாகசாமி தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருணாநிதி உயிருடன் இருந்த காலத்திலேயே, 2012ம் ஆண்டு, நாகசாமி எழுதிய, ‛மிரர் ஆப் தமிழ் அண்டு சான்ஸ்கிரிட்’ என்ற புத்தகம் வெளியானது. அதில், தமிழ் மாெழிக்கும், வட மொழிக்குமான தொடர்பு மட்டுமின்றி, தொல்காப்பியர், அவர் இயற்றிய இலக்கணம், வட மாெழி இலக்கணம், சாஸ்திரங்கள், ஆகியவற்றின் தொடர்பு குறித்தும் விளக்கப்பட்டிருக்கும். 

பல ஆண்டுகளாக தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வரும் ஸ்டாலின், பழம் நழுவி பாலில் விழும் நேரம் பார்த்து, தேவையில்லாமல், தமிழ் அறிஞர்களை வம்புக்கு இழுத்து, அவரின் மரியாதையை அவரே குறைத்துக்கொள்ள வேண்டுமா என, அவரது ஆதரவாளர்கள் குமுற துவங்கியுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close