‛த்துா...ஏய்...நீ...வா...போ...’ இதுதான் தே.மு.தி.க.,வின் நாகரிகமா? 

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 05:54 pm
article-about-premalatha-s-indecent-speech


இதற்கு முன், இந்திய அரசியல் தலைவர்கள் எவரும் செய்திராத உச்சபட்ச கேவலத்தை அரங்கேற்றினார், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த். பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க திணறிய அவர், தங்கள் கடமையை செய்ய வந்த பத்திரிக்கையாளர்களை பார்த்து, ‛த்துா’ என துப்பியதோடு, அவர்களை மிகக் கேவலமாக திட்டினார். 

நாட்டு நடப்புகளை, பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவிலலாளர்களுக்கு, விஜயகாந்த்தின் அத்துமீறிய பேச்சு, எரிச்சலை ஏற்படுத்தினாலும், அவர்கள் அதை பெரிதுபடுத்தவில்லை. கண்டனத்தை மட்டும் பதிவு செய்துவிட்டு, மீண்டும் தங்கள் பணியை துவங்கிவிட்டனர். 

ஆனால், மக்கள் இதை மறக்கவில்லை. பத்திரிக்கையாளருக்கே இந்த கதி என்றால், இவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலோ அல்லது, ஆட்சியாளர்களின் கூட்டணியில் இருந்தாலோ என்ன ஆட்டம் போடுவர் என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள் போலும். 

அதனால் தான், ஆரம்பத்தில் அந்த கட்சிக்கு அளித்த ஆதரவை, அடுத்தடுத்த தேர்தல்களில் மக்கள் அவர்களுக்கு அளிக்கவில்லை. குறிப்பாக, பத்திரிக்கையாளர்களை கேவலமாக திட்டுவது, சொந்த கட்சி வேட்பாளரையே பொதுமக்கள் முன்னிலையில் தலையில் கொட்டுவது, ‛துாக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க’ என, ஒருமையில் பேசுவது போன்ற தொடர் கேவலங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தார் விஜயகாந்த். 

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து தான், தமிகழக சட்டசபையில் எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்து பெற்றார் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்திருக்கும் நிலையில், தன்னால் தான் அந்த கட்சியே ஆட்சிக்கு வந்தது என்ற வகையில் பேசினார். 

தமிழகத்தை தொடர்ந்து ஆட்சி செய்யும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தன்னை பிரகடனப்படுத்திய விஜயகாந்த், மீண்டும் அதே திராவிட கட்சியுடனே கூட்டணி அமைத்த போதே, மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு குறைந்துவிட்டது. 

இத்தனைக்கும் மேல், மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில், வைகோவுடன் கை கோர்த்து அரசியல் செய்த தே.மு.தி.க., டெபாசிட் கூட பெற முடியாத அளவுக்கு படுதோல்வி அடைந்தது. அதன் பின், விஜயகாந்த், வெறும் காட்சிப் பொருளானார். உடல் நலக்குறைவால், அவரால் தீவிரமாக செயல்பட முடியாத நிலையில், அவரின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர், ஆக்டோபஸ் போல் கட்சியை கைப்பற்றினர். 

இதுவரை, எந்த அரசியல் கட்சியும் செய்திராத கேவலமான பேரத்தை, வெளிப்படையாக நடத்தியது தே.மு.தி.க.,  அதுவும், ஆளும் கட்சி, எதிர்க் கட்சி ஆகிய இரு தரப்பிலும் ஒரே நேரத்தில். எவ்வளவு சாமார்த்தியமான செயல். தாங்கள் மட்டுமே அறிவாளிகள், பிற கட்சி நடத்துபவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரையுமே, முட்டாளாகத்தான் நினைத்திருந்தனர். 

ஒரு புறம், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் சேர விரும்பி, பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சரிடம் பேச்சு, அதே நேரத்தில், கட்சியின் பிற நிர்வாகிகள், தி.மு.க., பொருளாளர் துரைமுருகனை சந்தித்து கூட்டணி பேச்சு. சரி அரசியலில் இதுவெல்லாம் சகஜம். 

ஆனால், மாட்டிக்கொண்டால் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டியது தானே. அப்படி செய்யாமல், உண்மையை உலகறியச் செய்த, ஊடகவியலாளர்களை கேவலமாக பேசுவதில் என்ன நியாயம் இருக்கிறது. 

சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பிரேமலதா, பெண் பத்திரிக்கையாளர்களுக்கு முதலில் மகளிர் தின வாழ்த்து கூறி, தன் பேச்சை துவக்கினார். சரி, முறையாக மிக நாகரிகமாக பேசத்துவங்குகிறார் எனப் பார்த்தால், சற்று நேரத்தில் கொதிப்படைந்த அவர், பத்திரக்கையாளர்களை ஏக வசனத்தில் அழைக்கத் துவங்கினார். 

அவர் கூறும் பத்திரிக்கையாளர் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளையும் விதித்தார். சிறிதும் நாகரிகம் இல்லாமல், பத்திரிக்கையாளர்களை பார்த்து, ஏய்... நீ... வா... போ...அப்புறம் கேள்... என ஒருமையில் பேசி அழைத்தார். 

கடும் கோபத்திலும், நாவடக்கம் தேவை என்பதை சற்றும் சிந்திக்காத அவர், தொடர்ந்து இப்படியே பேசிக் கொண்டிருந்தார். ஆனால், தங்கள் கவுரவத்தை பற்றி சிறிதும் யாேசிக்காத பத்திரிக்கையாளர்கள், செய்தியை, மக்களுக்கு கொண்டு செல்வதே பிரதானம் என தங்கள் கடமை தவறாது செயலாற்றினர். 

சில நாட்களுக்கு முன், பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசை பத்திரிக்கையாளர்கள் குடைந்து குடைந்து கேள்வி கேட்ட போது கூட, அவர் கோபப்பட்டாரே தவிர, தரம் தாழ்ந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒருமையில் ஒரு வார்த்தை கூட வெளிவரவில்லை.

பத்திரிக்கையாளரை கூட மதிக்கத் தெரியாத இவர்கள் எல்லாம், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்களின் நிலை என்ன என்பதை சற்று சிந்தித்து பார்த்தால் புரியும். இத்தனைக்கும், தே.மு.தி.க.,வும் ஓர் ஊடகத்தை நடத்தி வருகிறது. அதில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை எப்படி நடத்தும் என்பது பிரேமலதாவின் இந்த பேட்டியிலேயே தெரிந்துவிட்டது. 

ஊடகவியலாளர்களும், சராரி பொதுமக்களே. மழை, வெள்ளம், வெயில், குளிர், கூட்டம், நெரிசல் என எதைப்பற்றியும் கவலைப்படாமல், நாட்டு நடப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் பணியாற்றி வருகின்றனர்.

அப்படித்தான், பிரேமலதா அளித்த பேட்டியை செய்தியாக்கவும் சென்றிருந்தனர். அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாதவர், ஒரு கட்சியின் பாெருளாளர் அல்ல, சாதாரண பெண்மணியாக் கூட இருக்க தகுதியற்றவர்.

அரசியல் கட்சி நடத்தி விட்டால், அகில உலகத்தையும் ஆள்பவர் என்ற எண்ணம் தோன்றிவிடுமா என்ன? உலகையே ஆட்டிப்படைத்த எத்தனையோ தலைவர்களை கண்டிருக்கிறார்கள் ஊடகவியலாளர்கள். நேற்று கட்சி துவங்கி விட்டு, நாளை ஆட்சியை பிடிக்கப்போகும் கனவில் மிதக்கும் நீங்கள் எம்மாத்திரம்.

விஜயகாந்த்தின் பெயரை சொல்லி கட்சி நடத்தும் பினாமியான உங்களுக்கே இவ்வளவு துணிவிருந்தால், யாரையும் சாராமல், தங்கள் சொந்த உழைப்பில் வாழ்க்கை நடத்தும் ஊடகவியலாளர்களுக்கு எவ்வளவு துணிவிருக்கும். இருந்தும் அவர்களில் ஒருவர் கூட, உங்களை தரம் தாழ்த்து விமர்சிக்கவில்லை. அது தான் அவர்கள் அறிந்த நாகரிகம்; நீ...வா...போ... என பேசுவது தான் உங்கள் நாகரிகம். 

த்துா.. என்றதற்கே மக்கள் உங்களை எவ்வளவு கீழே தள்ளிவிட்டனர் என்பதை அறிந்தும், மீண்டும் ஒருமையில் பேசியிருக்கிறீர்கள். தொடர்ந்து இப்படி  நடந்து கொண்டால், நீங்களும் உங்கள் கட்சியும், மிக விரைவில் அதள பாதாளத்திற்கு செல்வீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. 

பிரேமலதாவின் அநாகரிக பேச்சுக்கு, தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச்சங்கம் உள்ளிட்டவை கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும், பிரேமலதாவின் அநாகரிக பேச்சுக்கு கண்டனக்குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close