தேர்தல் கமிஷனுக்கு ஒரு சபாஷ்... உங்களிடம் இன்னும் எதிபார்க்கிறோம்!

  பாரதி பித்தன்   | Last Modified : 16 Mar, 2019 03:33 pm
special-article-about-election-commission

கல்வி அறிவில்லாதவர்கள், தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கே சரியாக ஓட்டுப் போட வேண்டும் என்று தான்,  தேர்தலில் சின்னங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில், இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் சதவீதம் மிகவும் குறைவாக இருந்தது. 

இதனால், அப்போது நடந்த தேர்தல்களில் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டன. நாளடைவில், வேட்பாளர் செல்வாக்கை தாண்டி, சின்னங்களின் மதிப்பு கூடியது. குறிப்பிட்ட சின்னத்தில் யார் போட்டியிட்டாலும், அவருக்கு ஓட்டு கிடைக்கும் என்ற நிலை உருவானது. 

தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் அதிபுத்திசாலிகள். மக்கள் மத்தியில் பிரபலமான சின்னத்திற்கு விழும் ஓட்டுகளை சிதறடிக்க, அதே சின்னத்தை ஒத்த வேறொரு சின்னத்தை கேட்டு பெற்று, அவற்றில் சுயேட்சை வேட்பாளர்கள் களம் இறங்குவர். 

அந்த வகையில் தான், கடந்த தேர்தலில் முரசு சின்னத்திற்கு போட்டியாக களம் கண்ட கூடை சின்னம், குறிப்பிட்ட அளவிலான ஓட்டுகளை பிரித்தது. எனினும், சின்னத்தையும் தாண்டி, வெற்றி பெற முடியும் என்பது போல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர், முதலில் தொப்பி சின்னத்தை தேர்ந்தெடுத்து பிரசாரம் செய்தார். 

அறிவிக்கப்பட்ட தேர்தல் ரத்தாகி, மீண்டும் தேர்தல் நடந்த போது, அவர் குக்கர் சின்னத்தில் களம் கண்டார். இத்தனைக்கும் அவரின் பெயரிலேயே பல வேட்பாளர்கள் களம் இறங்கினர். ஆனால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றார். இது, சின்னத்தையும் தாண்டி வெற்றிக்கு வேறு ஏதோ தேவைப்படுகிறது என்பதை குறிக்கிறது. 

அதே போல், தேர்தல் சமயங்களில் வெறும் சின்னங்களை மறைப்பது, தலைவர்களின் படங்கள், சிலைகளை மறைப்பதால் மட்டுமே, நியாயமான தேர்தலை நடத்திவிட முடியாது. சரி, தேர்தல் நடத்தை விதிமுறையில் அவ்வாறு இருக்கட்டும். அதை தேர்தல் அதிகாரிகளும் செயல்படுத்தட்டும் . 

அதற்காக, இயற்கையின் சின்னங்களாக இருப்பதையெல்லாம் அழிக்க முற்பட்டால், அது எங்கு சென்று விடும் என தெரியவில்லை. ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் கோவிலில், காேலங்களில் வரையப்பட்டிருந்த தாமரைகளை அழித்திருக்கிறார்கள் மாண்புமிகு அதிகாரிகள். 

என்ன ஒரு அதிபுத்திசாலித்தனம்! கோலங்களில் தாமரை இடம் பெறுவது நேற்றோ, இன்றோ வரையப்பட்டதல்ல. ஆண்டாண்டு காலமாக ஹிந்துக்கள் வழிபாட்டில் இடம் பெறுவது. தாமரை மலிரில் வீற்றிருப்பவள் தான், லட்சுமியும், சரஸ்வதியும். 

மஹாவிஷ்ணுவில் தொப்புள் கொடியிலிருந்து மலரும் தாமரை மீது அமர்ந்திருப்பவர் தான் பிரம்மன். தாமரை மலரின் மீது தான், வெங்கடேச பெருமாள், முருகன் உள்ளிட்டோர் நின்ற கோலத்தில் காட்சி தருவர். 

இவை அனைத்தும், பன்நெடுங்காலமாக ஹிந்துக்களால் பின்பற்றப்படும் வேதங்களிலும், இதிகாச புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. 

அதுமட்டுமின்றி, ஆண்டாள் கோவிலில் வரையப்பட்டிருந்த கோலத்தில், தொன்று தொட்டு பன்நெடுங்காலமாகவே தாமரை வரையப்பட்டு வந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், அந்த கோவிலில் பல ஆண்டுகளாக வரையப்பட்டிருந்த தாமரை கோலத்தை அழித்துள்ளனர் தேர்தல் அதிகாரிகள். 

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள எவையும், வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட கட்சி சின்னத்தை நினைவுபடுத்தக் கூடாது என்பதற்காக, சின்னங்களை துணி போட்டு மூடும் நிலைக்கு தேர்தல் கமிஷன் தள்ளப்பட்டுள்ளது. 

கடந்த தேர்தலில், உ.பி.,யில் மாயாவதியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை, துணி போட்டு மூடினர். இப்போது ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில், கோலங்களில் இருந்த தாமரையை மட்டும் பார்த்து பார்த்து அழித்துள்ளனர். 

நல்லவேளை, இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரின் கைகளையும், தேர்தல் கமிஷன் கொடுக்கும் துணியை, தேர்தல் முடியும் வரை சுற்றிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடவில்லை. உதயசூரியனையோ, மரங்களின் இலைகளையோ மூட புறப்படவில்லை. மத்திய அரச மவுனமாக இருந்தால் , கைகளை மறைக்க துணி வாங்கிய செலவு என்று கூட கணக்கு எழுதி காசு பார்ப்பார்கள். 

சின்னத்திற்கு மட்டும் அல்லாமல், தலைவர்கள் சிலைகளின் நிலையும் இது தான். சின்னமும் சரி, சிலைகளும் சரி ஓட்டுப் போடப் போகிறவனுக்கு என்றுமே மறக்கப் போவதில்லை. குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஓட்டு போடாதவருக்கு,  கண்ணில் கண்ணாடிக்கு பதிலாக சின்னத்தை கட்டிவிட்டாலும் ஓட்டுப்போடப் போவதில்லை.

 இதனால் இது போன்ற  வேளைகளில தங்களின் சக்தியை வீணடிக்காமல், வேறு ஆரோக்கியமான விஷயங்களில் திருப்ப தேர்தல் கமிஷன் முன் வர வேண்டும். அப்போதுதான் தேர்தல் நியாயமாக நடக்குமே தவிர்த்து, வெறுமனே துணியை போட்டு மூடிவிட்டால் தேர்தல் நியாயமாக நடக்கிறது என்று தோள் தட்டிக் கொள்ள முடியாது.


 இதை நினைக்கையில் ‛சீப்பை மறைத்து விட்டால், கல்யாணம் நின்று போய்விடாது’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. 

newstm.in


இந்த கட்டுரையில் இடம் பெறும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close