‛நீட்’ அரசியலில் நீதி கிடைக்கப்போவது யாருக்கு? 

  பாரதி பித்தன்   | Last Modified : 20 Mar, 2019 03:49 pm
special-article-about-neet-exam


தொழில் கல்வியில் எப்போதும் தனக்கு என தனி மரியாதை கொண்டது மருத்துக்கல்வி. ஆனால், ஏழைகளுக்கு இது எட்டாத கனியாகவே இருந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்ட போது, வெறும் 2 மதிப்பெண் இடைவெளியிலேயே, அனைத்து இடங்களும் நிறைவு பெற்றன.

 நிர்வாக இட ஒதுக்கீடு என்ற பெயரில், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், மருத்து படிப்பிற்கான இடங்கள் கோடிகளில் விற்பனை செய்யப்பட்டன. இதன் காரணமாக, டாக்டர் மகன்கள் மட்டுமே மீண்டும் அந்த தொழிலுக்கு வர முடிந்தது. 

பிளஸ் 2 பொதுத் தேர்வு என்பதே, பல கோல்மால்களுடன் கூடியதாக மாறிவிட்டது. அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பொதுத் தேர்வை நியாயமாக எழுதினார்கள். தனியார் பள்ளிகள், எந்தளவிற்கு தேர்வை சாதகமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சாதகமாக மாற்றின. 

முன்கூட்டியே தேர்வு வினாத்தாளை லீ்க் செய்தல், கல்வித்துறை உயர் அதிகாரிகளை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு, தங்கள் பள்ளி மாணவர்களை காப்பி அடிக்க விடுதல், பிட் அடிக்க விடுதல் போன்ற பித்தளாட்டங்களில், தனியார் பள்ளிகள் ஈடுபட்டன. 

அது போன்ற பள்ளிகள் லட்சக்கணகில் கட்டணம் வசூலித்தன. வீட்டின் அருகே பள்ளி இருந்தால் கூட விடுதியில் தங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. மகனை டாக்டராக்க வேணடும் என்ற பெற்றோரின் கனவு பள்ளிகளின் காசு பார்க்கும் முறையாகிவிட்டது. 

தனியார் பள்ளி தாளாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, நிர்வாக ஒதுக்கீட்டில் மருத்து கல்விக்கு சீட்டு வாங்கவே ஒரு கோடியாகும். ஆனால் எங்கள் மாணவர்கள், அரசு ஒதுக்கீட்டில் இடம் பிடிப்பார்கள். அதனால் மிச்சமாகும் தொகையில் சிறு பகுதிதான் நாங்கள் கட்டணமாக வசூலிக்கிறோம் என்று கூறினார். அந்த அளவிற்கு கல்வி வியாபார மயமாகிவிட்டது. 

இந்த காலகட்டத்தில் தான், ‛நீட்’ தேர்வு அறிமுகமானது. இந்த தேர்வில், பாஸ் செய்தால் மருத்துக்கல்லுாரியில் இடம் பெறலாம் என்று சூழ்நிலை மாறிவிட்டடது.

இந்த நிலையை போக்கும் விதமாக, கடந்த முறை மத்தியில் ஆட்சிப் பொறுப்பு வகித்த காங்கிரஸ் கட்சி, 2013 ஆண்டில் நீட் தேர்வை அறிமுகம் செய்தது. தமிழ் உட்பட,11 மொழிகளில் இந்த தேர்வு எழுத முடியும்.2018ம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களில், 80 சதவீதம் பேர் ஆங்கிலத்திலும், 11 சதவீதம் பேர் இந்தியிலும்,  4.31 சதவீதம் பேர் குஜராத்தியிலும், 3 சதவீதம் பேர் பெங்காலியிலும், 1.86 சதவீதம் பேர் தமிழிலும் தேர்வு எழுதினர்.  

கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள், இந்த தேர்வு எழுதுவதற்கு துணை நிற்க வேண்டிய மாநில அரசு, இந்த தேர்வே வேண்டாம் என்று கொடி பிடித்தது. சுப்ரீம் கோர்ட் கூட, 2013ம் ஆண்டு ஜூலை மாதம், 18ம் தேதி தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட, 115 மனுக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி, நீட் தேர்வை ரத்து செய்தது. 

அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் இந்த தேர்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதன் பாடத்திட்டம் தமிழகத்திற்கு ஒவ்வாததாக இருந்ததாக ஜெயலலிதா காரணம் கூறினார். 

மேலும், 2016ம் ஆண்டு இந்தி, ஆங்கிலம் மட்டுமே தேர்வு மொழியாக இருந்த நிலை, பின்னர் தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் எழுதலாம் என மாற்றப்பட்டது. இதன் மூலம், நாடு முழுவதும், 60 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்கள் நிரப்பபட்டன. 

காசு போட்டு கல்லுாரி நடத்தும் கல்வி காவலர்கள், தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை சமூக பிரச்னையாக மாற்றவிட்டனர். ஏதோ இவர்கள் மாணவர்கள் நலனுக்காக இலவசமாக அல்லது ஒரு சில ஆயிரங்கள் மட்டுமே கல்விகட்டணம் பெற்றுக் கொண்டு மாணவர்களை, சேர்ப்பதைப் போல ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்காக கண்ணீர் வடித்தனர். 

நீட் தேர்வு தவிர்த்த நிர்வாக இடம் என்பதில், இவர்களுக்கு விட்டுக் கொடுக்கலாம் என்பது மறைக்கப்பட்டது. 2017ம் ஆண்டில் நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அவர் வழக்கு தொடர்வதற்கு முன்பு, பல கட்சித் தலைவர்களை அவர் பார்த்தார், அப்போது ஏதேனும் ஒரு கல்வி காவலர் தன் கல்லுாரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் அவருக்கு இடம் கொடுத்திருக்கலாம். ஆனால் அதற்கு யாரும் முன்வரவில்லை என்பது வேதனையான விஷயம். 

2018ம் ஆண்டும் மற்றொரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த ஆண்டிலும் பல ஆயிரம் பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு புறம் எதிர்ப்பு இருந்தாலும், தமிழக அரசு, திமுக உட்பட நாட்டின் நலன் விரும்பும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி வியாபாரிகள் என்று அனைத்து தரப்பினரும், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கி நடத்தினர். 

இதன் பலனாக நீட் தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. கடந்த 2018ம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களில் 41 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதை விட  பக்கத்து மாநிலங்களில் எண்ணிக்கை அதிகம் என்றால் கூட அதற்கு முந்தைய ஆண்டை விட தமிழகத்தில் இது அதிகம் தான்.
 
இன்னும் சில மாதங்களில் நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், தற்போது அதிமுக, திமுக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 


இவர்கள் தீவிர முயற்சியால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் மீண்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் இடங்களை கூவிக் கூவி விற்பனை செய்யும். தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கல்விக் காவலர் ஒருவர் மீது மருத்துக்கல்லுாரியில் இடம் தருவதாக ஒவ்வொரு மாணவரிடம் ஒரு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு ஏப்பம் விட்ட வழக்கு நிலுவையில் உள்ளனது. 

இந்த வழக்கில், அவர் ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில் சிக்கியவர், அவர் ஒருவர் தான்  என்றாலும், பெற்றோர் ஊமையன் கனவு கண்டது போல மவுனமாக இருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி செய்பவர்களில் கஞ்சாவியாபாரிகள், கல்வி, மருத்துவ வியாபாரிகள், சாராயவியாபாரிகள், 24 மணி நேரம் பார் நடத்துபவர்கள் பங்கு அதிகம். 

இதனால் அவர்களுக்கு ஆதாரவாகத்தான் அரசியல் கட்சிகள் நடவடிக்கைகள் இருக்கும். அதற்கு மக்கள், மாணவர்கள் காரணம். இது தான் நீட் தேர்வு ரத்துக்கும் காரணம். அதை நம்பி ஏழை எளிய மாணவர்கள் ஓட்டுப் போட்டால், மருத்துக்கல்வியை மீண்டும் மறந்துவிட வேண்டியது தான். 

ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என இரு தரப்புமே, நீட் தேர்வு ரத்துக்கான நடவடிக்கை என தேர்தல் அறிவிக்கை வெளியிட்டுள்ளதால், இது மிகப் பெரிய அரசியல் விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது. 

ரேஷன் பொருட்கள், இலவசங்கள், டாஸ்மாக், ஓட்டுக்கு பணம் என பல வகைகளில் அரசியல் ஆதாயம் தேடிய அரசியல்வா(வி)யாதிகள், தற்போது, முதல் முறை ஓட்டளிக்க உள்ள, இளைய தலைமுறையினரின் நெஞ்சில் நஞ்சை விதைக்க முயற்சித்துள்ளனர்.

நீட் அரசியலில் நீதி கிடைக்கப்போவது யாருக்கு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
 

newstm.in

இந்த கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close