கர்ம காரியங்கள் செய்யப்படும் திருத்தலம்...!

  இளங்கோ   | Last Modified : 04 Apr, 2019 11:17 am
bhavani-sangameswarar-temple

ஈரோடு மாவட்டம் பவானி என்னும் ஊரில் உள்ளது பவானி சங்கமேசுவரர் கோவில். கூடுதுறையின் கரையில் அமைந்துள்ள பவானி சங்கமேசுவரர் கோயில் முகவும் பிரசித்தி பெற்றது விளங்குகிறது. இந்த ஆற்றின் பெயரானது தமிழில் 'கூடு' என்ற சொல்லிலிருந்தும் 'துறை' என்ற சொல்லிலிருந்தும் உருவாகியுள்ளது கூடுதுறை. இக்கோவிலின் பின்புறமுள்ள இரட்டை விநாயகர் கோவில் பகுதியில், காவிரி, பவானி, அமுதநதி போன்ற மூன்று நதிகள் சங்கமிப்பதால், முக்கூடல் சங்கமம், கூடுதுறை, என அழைக்கப்படுகிறது. 

மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோவிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனும் நாமத்தில் சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இங்கு உள்ள இறைவி வேதநாயகி அல்லது வேதாம்பிகை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இங்கு கோபுரமே லிங்கமாக வழிபடப்படுவதால், கோபுரத்திற்கு வெளியே நந்தி உள்ளது.  இந்த அம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது.  மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் அருகில் காவிரியாற்றின் ஓரத்தில் தனித்து நின்று பக்தர்களுக்கு அருள்புரிகிறார் காயத்ரி லிங்கேஸ்வரர். இங்கு வேண்டிக்கொண்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது மக்களின் நம்பிக்கை. 

இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி, தினமும் இறைவனை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சங்மேஸ்வரரை வணங்குவதற்கு முன், சற்று தூரத்திலுள்ள காவிரியாற்று ஓரம் சென்று தினமும் நித்யகர்ம அனுஷ்டானத்தை தொடர்ந்து செய்து வந்தாராம். அதுபோல் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து 12 ஆயிரம் கோடி முறை உச்சரித்த காரணத்தால், “காயத்ரி லிங்கேஸ்வரர்” அங்கே தானாகவே தோன்றியதாக பழங்கால தகவல் கூறுகிறது.  இந்தக் கோவிலில் சங்கமேஸ்வரர், வேதநாயகி சந்நிதிகள் மற்றுமன்றி ஆதிகேசவப் பெருமாளுக்கும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளது. இவை சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது.  

இலந்தை மரம் இக்கோவிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. நாக தோஷம் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இக்கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு செவ்வாய் தோஷம் உள்ள ஆண்கள், வாழை மரத்திற்கு தாலி கட்டி அதை ஆற்றில் விடுகிறார்கள். பெண்கள், அரசங்கொத்திற்கு பூஜை செய்து அதை ஆற்றில் விடுகிறார்கள். இதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இக்கோவிலில் உள்ள அமுதலிங்கத்தை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். 

இக்கோவிலில் உள்ள சனீஸ்வர பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவர். மாந்தி கிரகத்தின் ரூபத்தில் இச்சனி பகவான் அருளுவதால் மாந்தி தோஷம், குளிக சாந்தி தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.  அம்பிகை வேதநாயகியின் பெருமைக்கு வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் அளித்த தந்தக் கட்டில் ஒன்று சான்றாய்த் திகழ்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டுவந்த காலத்தில் வில்லியம் காரோ என்பவர்தான் பவானி பகுதிக்கு கலெக்டராக இருந்தார். அம்பிகை வேதநாயகியின் பெருமையையும், இங்கு வந்து பார்ப்பதால் பல நன்மைகள் நடக்கிறது என்று மக்கள் வியந்து பேசுவது கண்ட காரோ தாமும் அம்பிகையைக் காண விரும்பினார். 

அப்போதெல்லாம் இந்துக்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்லலாம் என்ற கட்டுபாடு இருந்தது. இதனால் காரோ  மதில் சுவரில் சாளரம் பொன்று மூன்று துளைகளைச் செய்து, அதன் மூலம் அம்பிகையைக் காண வழி செய்தார். காரோவும் அம்பிகையை அச்சாளரத்தின் மூலம் தினந்தோறும் கண்டு வழிபட்டு வந்தார். அந்தத் துளைகள் இன்றும் உள்ளது. ஒருமுறை காரோ தனது இல்லத்தின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அம்பிகை வேதநாயகியைப் போன்று வடிவுடைய பெண் ஒருத்தி அவரைத் தட்டி எழுப்பி கையைப் பற்றி விரைவாக வெளியே அழைத்துச் சென்றதாம். அப்போது கையில் உணர்வு ஏற்பட்டு விழித்து எழுந்த காரோ பரபரப்புடன் மாடியிலிருந்து கீழே ஓடினார். 

அடுத்த நிமிடமே காரோ குடியிருந்த மாடி வீடு இடிந்து கீழே விழுந்தது தாம். அம்பிகையின் அருளால் தான் பிழத்ததாக நினைத்தாராம். பிறகு 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் அம்பிகைக்கு தந்தத்தால் ஆன கட்டில் செய்து காணிக்கையாக அம்பிகைக்கு அளித்தார். அதில் தனது கையொப்பமும் இட்டார். பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் கோயில், பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. பரிகார ஸ்தலமாக சிறப்பு பெற்று விளங்கும் கூடுதுறையில், ஆண்டு தோறும் பக்தர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்பணம், கரும காரியம் போன்றவைகளை செய்து செல்கின்றனர். 

இங்கு செல்வதால் கூடுதுறை மட்டும்மல்ல இத்தலத்தை சுற்றி ஏராளமான சுற்றுல்லா தலங்களும் உள்ளன. அனைவரும் ஒருமுறை சென்று பார்க்கும் இடமாக உள்ளது  பவானி    கூடுதுறை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close