ஆசிரியர் மாற்றத்தை அறிய வேண்டிய நேரம் இது!

  பாரதி பித்தன்   | Last Modified : 05 Apr, 2019 11:01 pm
veeramani-speaks-against-hindus-and-dmk-reaction

தமிழகத்தில் ராமானுஜர், ஐயா வைகுண்டர், சித்தர்கள், கேரளாவில் நாராயணகுரு, கர்நாடகாவில் பசவர் போன்றவர்கள் பகுத்தறிவுவாதிகள் தான். நாம் யாருக்கும் அடிமை இல்லை என்பதை காட்ட  ஐயா வைகுண்டர் அறிமுகம் செய்த தலைபாகை கட்டும் முறை இன்றவுளவும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

அவர்கள் பேசிய பகுத்தறிவு எல்லாம் மூடநம்பிக்கையை அகற்றி நம்பிக்கையை ஏற்படுத்துவது. அவர்களை இன்றும் பின்பற்றுபவர்களின் மூலம் அந்த பெரியவர்களின் கொள்கையில் இருந்த நேர்மையை புரிந்துகொள்ள முடிகிறது. 

அதேநேரத்தில் கடந்த அரை நுாற்றாண்டிற்கும் மேலாக தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். கருணாநிதி மறைந்த பின்னர் நடக்கும் முதல் தேர்தலில் அவர் மகன் கூட அவ்வளவாக அவரின் பெயரை உச்சரிக்காத நிலையில், பெரியார் பெயரை சொன்னால் இன்றவும் ஓட்டு விழுகிறது என்றால், மக்கள் மனதில் அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பது தெரியும். 

ஈவேரா வாழ்ந்த காலத்தில் சமுதாயம் இருந்த நிலை, காசியில் அவர் பெற்ற அனுபவங்கள் போன்றவை அவரை பகுத்தறிவு வாதியாக வெளிக்காட்டியது. கொள்கையில் அவருக்கு இருந்த நேர்மை சமுதாயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காஞ்சி மகான் ஏற்றுக்கொண்ட தலைவர்களின் சிறப்பான இடத்தை பெற்றவர் ஈவேரா என்றால் அவரின் பண்புகளை உணர்ந்து கொள்ளலாம். 

அதே நேரத்தில் அண்ணாதுரை எப்போது "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று கொள்கை முடிவெடுத்து அரசியலில் நுழைந்தாரோ, அன்றே பகுத்தறிவு பாசறையில் விரிசல் விழுந்துவிட்டது. 

ஆசிரியர் வீரமணி, ஜெயலலிதாவை அழைத்து விழா வைத்து அவருக்கு பட்டம் கொடுத்தாரோ அப்போதே பகுத்தறிவு அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது. இதை அனைவரும் புரிந்து கொண்டார்கள் ஆசிரியர் வீரமணியை தவிர்த்து. 

ஆன்மீகத்திற்கும், அரசியலுக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் உணர்ந்து விட்டார்கள். அதனால் தான் இஸ்லாமியர்கள் கூட பாஜகவிற்கு ஓட்டுப் போடுகிறார்கள்.திமுக தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா வெளிப்படையாக கோயிலுக்கு சென்று வழிபடுகிறார். தற்போது தேர்தல் சுற்றுப்பயணங்களில் இருக்கும் கனிமொழி, வீதிகள்தோறும் வெற்றித் திலகத்தை மகிழ்ச்சியோடு அணிந்து வலம் வருகிறார். இப்போது நேர்மை தான் அவசியம் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

அதற்கேற்ப பகுத்தறிவால் ஒரு ஓட்டு கூட விழாது என்று அரசியல்வாதிகள் குறிப்பாக திமுகவினர் புரிந்து கொண்டுவிட்டார். இதனால் தான் ஆசிரியர் பிரச்சாரத்திற்கு வராவிட்டால் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் உச்சமாக, சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில், திமுக எப்படி இந்து விரோத கட்சி இல்லை என்று திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் விலாவாரியாக  விளக்கினார். திமுக ஆட்சியில் எத்தனை கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது,  தினமலர் கோபால்ஜி வேண்டுகோளின்படி, பூசாரிகளுக்கு என்ன என்ன உதவிகள் செய்யப்பட்டன என்று பட்டியலே வாசித்து, பகுத்தறிவுக்கு தேசியகீதமே பாடினார் அந்த அமைச்சர்.

திமுக இந்து எதிர்ப்பாளர்கள் இல்லை என்று காட்ட முனையும் இந்த வேளையில், அதற்கு ஆப்புவைப்பதில் திராவிட கழகம்( தி.க.) முழுமுயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை திமுகவினரே விரும்பாத நிலையில், ஆசிரியர் வீரமணி ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று புரியவில்லை.

இத்தனைக்கும் திக அரசியல் கட்சியல்ல. நாளைக்கு யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களின் ஆதரவு திகவிற்கு வேண்டும். இந்த உண்மையை புரிந்து கொண்டு தி.க. அரசியல் பொதுக்கூட்டங்களை தற்போது நடத்தாமல் இருக்கலாம். 

இதையெல்லாம் மீறி, திருச்சியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 4) பொதுக்கூட்டம் நடத்தி, அதில் கிருஷ்ணரை இழிவுப்படுத்தி பேசியதால் தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேர் காயம் அடைந்தனர். மேலும் 12 இந்து முன்னணியினரும், 8 திகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி தேவையில்லா சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்துவது யாருக்கும் நல்லது இல்லை. ஆசிரியர் வீரமணி இதை அறிந்து கொள்வது நல்லது.   

கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் யாவும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களே.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close