கருத்துக்கணிப்புகள் ஏன் பொய்க்கின்றன?

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 11 Apr, 2019 11:28 pm
opinion-polls-and-its-fails

கருத்துக்கணிப்புகள் செய்யும் முறை ஒரு அறிவியல் தொழில்நுட்பம் தான். புள்ளி விபரங்களைச் சேகரித்து, அதை வைத்து டேட்டா அனலிசிஸ் செய்து, அதில்வரும் விடையை வழங்குவது தான் சரியான முறை. இது நிஜமாகவே ஓர் அருமையான தொழில்நுட்பம். 

ஒரு கருத்துக்கணிப்பை எடுக்கும் முன், எத்தனை பேரிடம் தகவல்களை எடுக்க வேண்டும்? எந்தெந்த ஊர்கள்? எந்தெந்த வயது நபர்கள்? எந்தெந்த பொருளாதார அடுக்குகளில் எத்தனை ஆட்கள்? உடலுழைப்பு, ப்ளூ காலர், வொய்ட் காலர் வேலை ஆட்கள், குடும்பத் தலைவிகள் மற்றும் பணிக்குப் போகும் பெண்கள் என பல்வேறு பிரிவுகளில் எத்தனை பேர்? என தேவைக்கேற்ப தொகுத்து வைத்துக் கொள்வார்கள். அதன்படி ஆட்களுக்கு வேலையைக் கொடுத்து தகவல் திரட்டி வரச் செய்வார்கள்.

ஆனால், நம்ம ஊரில் கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பொய்த்துப் போகின்றன. ஏன்? எனக்குத் தெரிந்து மூன்று காரணங்கள் இருக்கின்றன. 

முதல் காரணம் : தகவல் திரட்டச் செல்லும் வேலை ஆட்கள். கொடுத்தனுப்பிய திட்டப்படி செய்து முடிக்க முடியவில்லை என்றால், தானே சொந்தமாக தோராயமாக ஒரு கருத்தைப் பதிந்து கொள்வார்கள். அதாவது குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட செக்டார் ஆளிடம் கருத்துகளைப் பெற முடியாவிட்டால் , வேலைப் பளு காரணமாக இந்த கோல்மாலை செய்வது. அதன் காரணமாக சரியான புள்ளிவிபரம் கிடைக்காமல் போய்விடும்.

இரண்டாவது காரணம் : ஊடகங்களை வைத்துக் கொண்டு மக்கள் மனநிலையை மாற்ற அரசியல் கட்சிகள் போடும் திட்டம். பெரும்பான்மை மக்களின் மனநிலையைத் திசைதிருப்பும் வேலை (HERD MENTALITY). அது சில சமயம் வேலை செய்திருக்கிறது.

மூன்றாவது காரணம் : இது மிக முக்கியமான சமூகக் காரணம். இவர்கள் கருத்துக் கணிப்பில் பெண்கள் என்பதற்கு ஒதுக்கும் அளவில் நம் இல்லத்தரசிகளுக்குச் சரியான முக்கியத்துவம் தருவதில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் மற்றும் படிக்கும் பெண்கள் மனநிலைக்கும், இல்லத்தரசிகளின் மனநிலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. 

ஓர் இல்லத்தரசியின் நிதி நிர்வாகம் என்பது மற்ற எந்தப் பெண் வகையறாவையும் விடவும் நுணுக்கமானது மற்றும் சிறப்பானது. அப்படியானவர்கள் அதிகம் கொண்ட சமூகம் நம் இந்தியச் சமூகம். கருத்துக்கணிப்பில் அவர்களின் பங்களிப்பு கிட்டத்தட்ட பூஜியம் தான். காரணம், ஏற்கெனவே இவர்களுக்கு சரியான முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், கருத்து கேட்கப் போகும் நபர்கள் இல்லத்தரசிகளிடம் விளக்கமாகக் கேட்கமாட்டார்கள். கேட்டாலும் இல்லத்தரசிகள் தெளிவாகச் சொல்லமாட்டார்கள். 

 “எங்க வீட்டுக்காரர் வரட்டும்ங்க கேட்டுச் சொல்றேன்”. 

”எங்க வீட்டுக்காரர் எதைச் சொல்றாரோ அதைத் தான்ங்க செய்வேன்”. 

 “ அதைப் பத்தியெல்லாம் எனக்கு அவ்வளவா தெரியாதுங்க”

இப்படியான பதில்கள் தான் அவர்களில் பெரும்பாலானவர்களிடமிருந்து கிடைக்கும். அவர்களுக்கென்று பிரத்யேகக் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். நம் இல்லத்தரசிகள் அவ்வளவு சீக்கிரம் இது போன்ற கருத்துக்கணிப்புகளில் கலந்து கொள்வதில்லை. 

கருத்து சொல்லும்போது அடுத்த ஆண்களிடம் பேசுகிறோம் என்ற அதீத எச்சரிக்கையுணர்வுடன் பாதுகாப்பான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கும். அப்படியாவது, இந்தப் பெண்களிடம் கருத்துக் கணிப்பு எடுத்தே ஆகணுமா என்று உங்களுக்குத் தோணலாம். இவர்கள் கருத்து தான் மிக மிக முக்கியம். இவர்கள் முடிவு செய்யும் கட்சி தான் ஆட்சிக்கு வரும். 

உதாரணம்: பாக்யராஜ், டி.ராஜேந்தர் காலப் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். காரணம், அவர்கள் படம் முழுவதும் பெண்களை ஈர்ப்பதாகக் காட்சிகள் வைத்திருப்பார்கள். நம்ம ஊர்ப் பெண்கள் திரைப்படத்திற்குச் செல்வதானால், கணவன்/அப்பா கூட்டிட்டுப் போகணும். அப்படியே குடும்பமே அந்தப் படத்திற்குப் போய்விடும். அதாவது ஒரு குடும்பத்தலைவிக்கு ஏற்றவாறு ஒரு பொருளோ, செயலோ இருந்தால் அது அந்தக் குடும்பம் முழுமையும் சென்றடையும். 

பத்து சதவீதம் ஓட்டு வைத்திருக்கும் சமூகம், 15 சதவீதம் ஓட்டு வைத்திருக்கும் இயக்கம் என்பதையெல்லாம் கவனித்து ஓட்டுச் சேகரிக்கும் கட்சிகள், இந்த இல்லத்தரசிகளின் மனநிலையைக் கவனிக்கத் தவறிவிடுகின்றன. இதனை உடைக்கும் வண்ணம் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தாலிக்கு தங்கம், ஃபேன், மிக்ஸர் என்று சரியாகக் காய் நகர்த்தி வெற்றியும் பெற்றார். 

இப்பொழுது வந்திருக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்ஸ அந்த 30% இல்லத்தரசிகளைச் சேர்க்காமல் தான் வந்திருக்கின்றன. கேம் சேஞ்சர்களான தாய்மார்களின் மனநிலை தான் ஆட்சியாளர்களை நிர்ணயிக்கும். இந்தியப் பெருநாட்டில் கிட்டத்தட்ட 30% இல்லத்தரசிகளை உண்மையான கருத்துக் கணிப்பிற்குள் கொண்டு வராமல், நீங்கள் என்ன கருத்துக்கணிப்பு நடத்தினாலும் அது ஆருடமே! அறிவியல் ஆகாது. 

கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் யாவரும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களே.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close