வாராரு வாராரு அழகர் வாராரூ....

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 19 Apr, 2019 12:06 pm
chithirai-festival-at-madurai

ஒவ்வொரு ஊரைப் போல மதுரைக்கும் ஒரு மணம் இருக்கிறது. தமிழர்களின் மிக முக்கியமான அடையாளங்களை இன்னும் சுமந்து திரியும் மக்கள் நிறைந்த கிராமங்களை உள்ளடக்கியது மதுரை!

எல்லா வகை உணர்வுகளிலும் சற்றே தூக்கலாக வெளிக்காட்டும் இயல்புள்ள குணமுடையவர்கள். அதனாலேயே சினிமாக்களில் அதிக பாடுபொருளாகிப் போனது மதுரையும், மதுரை மக்களின் குணங்களும். பல படங்களில் அது அதீதமாக்கப்பட்டு வெறும் கோப உணர்ச்சிகளுக்கு மட்டுமான மக்களாகத் திரிக்கப்பட்டுவிட்டது. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்… இப்ப சித்திரைத் திருவிழாவில் ஒரு முக்கிய நிகழ்வான “ஆற்றில் அழகர் இறங்கும்” வைபவத்தில் பக்தர்களின் பங்களிப்புகளை கொஞ்சம் பார்க்கலாம்.

அழகர் ஆற்றில் இறங்கும்போது இந்த ஐந்தினை அனுபவிக்காத பக்தர்கள் யாரும் இருக்க முடியாது.

1, நீர் மோர்/பானகம் உள்ளிட்ட தண்ணீர்ப் பந்தல்.

2,. சர்க்கரைச் சொம்பு கர்ப்பூர ஆரத்தி

3, பூச்சாண்டி, சேக்காளி, கோமாளி வேஷம் கட்டுதல்

4, திரி எடுத்து ஆடுதல்.

5, தண்ணீர்ப் பீச்சுதல்.

 விழாக் காலம் முழுவதும் ஆங்காங்கே, நீர் மோர், புளி -வெல்லம் -சுக்கு போட்டு கரைத்த பானகரம்(பானகம்) மற்றும் தண்ணீர் வழங்கும் பந்தல்கள் பக்தர்களுக்காக அன்புடன் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும்.

ஒரு சொம்பில், சர்க்கரை நிறைத்து அதை வாழை இலை கொண்டு மூடி அதன்மீது கற்பூரம் வைத்து ஏற்றி அழகருக்கு ஆராதனை செய்வது.

கிட்டத்தட்ட சர்க்கஸ் கோமாளிகள் போல வேடம் அணிந்து விழாக்களம் முழுக்க வலம் வருவார்கள். சோவிகள் (சோழி) கொண்டு வாய் மற்றும் பற்களை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

திரியெடுத்து ஆடுதல்: இது மதுரையின் சிறப்பு. அதாவது, இப்படி திரியெடுத்து ஆடி வருபவர்கள், அழகர் மலையின் காவல் தெய்வமான கருப்பசாமிகளின் பிம்பங்கள் எனலாம். அழகர் மதுரைக்குக் கிளம்பும்போது அவருக்குத் துணையாக கருப்பசாமியும் உடன் வருவார். ஒற்றை ஆளாக வராமல், பக்தர் மீது இறங்கி ஆயிரக்கணக்கான கருப்பசாமியாக துணை வருவார். 

இப்படி அருள் இறங்கிய பக்தர்களின் ஒரு கையில் பெரிய அரிவாளும், இன்னொரு கையில் எரிந்து கொண்டிருக்கும் திரியும் இருக்கும். இந்தத் திரியானது கிட்டத்தட்ட கூம்பு வடிவில், எண்ணெயில் பல நாட்களாக ஊற வைக்கப்பட்ட துணிகள் கொண்டு செய்யப்பட்டிருக்கும்.

அழகர் இரவில் பயணிக்கும்போது வெளிச்சத்திற்காக இந்த கொளுத்திய திரியும், பாதுகாப்புக்கு அரிவாளும் எடுத்து ஆடி வருவார்கள். கூட்டத்தில் இவர்களைக் கண்டால் பக்தகோடிகள் இவர்களிடம் ஆசி பெற்று, திரியில் இருக்கும் கருக்கலை (கரியை) நெற்றியில் பூசிக் கொள்வார்கள்.

தண்ணீர்ப் பீச்சுதல் : இதுவும் மதுரையில் அதுவும் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தில் மட்டும் நிகழக்கூடிய சேவை. அழகர் மதுரைக்குள் நுழையும்போது எதிர்சேவை செய்வதில் தொடங்கி அடுத்த நாள் இரவு ராமராயர் மண்டபம் அடையும் வரை தண்ணீர்ப்பீச்சுதல் சேவை இருக்கும்.

தண்ணீர்ப் பீச்சுதல் என்பது கள்ளழகருக்கான நேர்த்திக் கடனாக யாரும் செய்வதில்லை. அதாவது ஏதேனும் வேண்டிக் கொண்டு, அது நிகழ்ந்தால் இதைச் செய்வதாக யாரும் செய்வதில்லை. காரணம், இது அழகருக்கான சேவையாகவும், அவரை தரிசிக்க வரும் அடியவர்களுக்கான சேவையாகவும் செய்து வருகின்றனர். இது பெரும்பாலும் மதுரையைச் சுற்றியுள்ள கிராமத்து யாதவர்கள் செய்யும் சேவையாகவே இருந்து வருகிறது.

தோப்பறை (தோலினால் செய்யப்பட்ட அறை) பாடம் செய்யப்பட்ட ஆட்டுத் தோலினில் இரண்டு துளைகள் விட்டுத் தைத்திருப்பர். ஒரு துளை மிகக் குறுகலாகவும், இன்னொரு துளை சற்றே பெரியதாகவும் இருக்கும். குறுகலான துளையில் ஒரு குழாயினைச் செறுகி (குழாய்கள் பிற்பாடு பல வகைகளில் வந்துவிட்டன) அதனை இறுகக் கட்டி விடுவர். பெரிய துளையை அவ்வப்போது கட்டிக் கொள்ளவும் அவிழ்த்துக் கொள்ளும்படியும் இருக்கும்.

அதன் வழியே தண்ணீரினை ஊற்றி நிரப்பி கட்டி விடுவார்கள். இவ்வாறு கட்டப்பட்ட தோப்பறையை தன் தோளில் போட்டுக் கொண்டு அதிலிருக்கும் தண்ணீரை ஆகாயத்தில் பீச்சியடிப்பார்கள், சித்திரை வெயிலில் பெரும் கூட்டத்திலிருக்கும் மக்களின் வெப்பம் போக்க இது பெரிதும் உதவும். வெயிலின் தாக்கம் தெரியாமல் அழகரை தரிசிக்க அடியவர்களுக்கு சேவை செய்யும் அடியவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

தண்ணீர்ப் பீச்சுபவர்களின் இன்னொரு அற்புதமான ஒரு சேவை, இவர்கள் சும்மா தண்ணீரை மட்டும் பீச்சிக் கொண்டு செல்லமாட்டார்கள். கிராமத்தில் சந்ததி சந்ததியாக வாய்வழியாகப் பாடப்பட்டு வரும் அழகர் வர்ணனையைப் பாடிக் கொண்டே வருவார்கள். வர்ணனைகளில் அந்தந்த வட்டார வழக்குச் சொற்கள் எந்தளவுக்கு நம்மை ஆச்சர்யப்படுத்துமோ, அந்தளவிற்கு இலக்கியத் தமிழும் கலந்திருக்கும். சிலர் வர்ணித்துப் பாடும்போதே ஆனந்தத்தில் அழுது கொண்டே பாடுவார்கள். கள்ளழகர் மீதான அவர்களின் கட்டுக்கடங்காத பிரியம் அது.

அழகருக்கு இப்படி சேவை செய்பவர்கள் யாரும் அவரது பக்தர்கள் கிடையாது. பக்தர்கள் என்பவர்கள் வணங்கி எதையாவது வேண்டுபவர்களாகி விட்டனர். இந்த வெள்ளந்தி மக்கள் தன் வீட்டுப் பாட்டனோ, பூட்டனோ அவரது பூர்வீக கிராமத்திலிருந்து தன்னைப் பார்க்க வருகிறார். அவரைப் பிரியத்துடன் வரவேற்று, அவரைக் குளிர்வித்து, அவரைச் சிறப்பித்து வணங்கி ஆசி பெற்று திரும்பவும் பூர்வீகத்திற்கு பூப்பல்லக்கில் அனுப்பி வைக்கும் பிரியமான பேரக் குழந்தைகள் போலதான் நடந்து கொள்வார்கள். 
 

ஆம்! கள்ளழகர் ஆற்றில் இறங்கித் திரும்பிப் போகும்வரை தரிசித்துத் திரும்பும் எந்த மக்களிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்... எதுவும் வேண்டி விண்ணப்பித்திருக்கமாட்டார்கள். மற்ற எந்தத் திருவிழாவிற்கும், மதுரையின் சித்திரைத் திருவிழாவிற்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இதுவே! அதனாலேயே இந்தத் திருவிழா அவரவர வீட்டு விசேஷமாக மதுரை எங்கும் கொண்டாடப்படுகிறது.

newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close