இவர்களை யார் தண்டிப்பது?

  பாரதி பித்தன்   | Last Modified : 19 Apr, 2019 04:34 pm
special-article-about-polling

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒட்டுப் போட வேண்டும் என்பது ஜனநாயகம் நமக்கு கொடுத்துள்ள முக்கிய கடமை. கடந்த முறை தவறானவர்களை தேர்வு செய்ததை திருத்தி, சரியானவர்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு தான் தேர்தல். ஆட்சியாளர்கள், கடந்த காலத்தில் செய்த நல்லவைகளுக்கு அங்கீகாரமும் இது தான். இவற்றைத் தாண்டி அடுத்த 5 ஆண்டுகள் இந்த நாட்டை வழிநடத்த வேண்டியவர்களை தேர்வு செய்வதும் இது தான்.
 
கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு தொடங்கி, மீத்தேன், ஷெல் கேஸ் என்று எத்தனை போராட்டங்கள் நடந்தன. ரபேல் ஊழல் உட்பட பல்வேறு முறைகேடுகள் வெளிப்பட்டதே. இதற்கு நாம் என்ன மாதிரியான தண்டனை வழங்கி இருக்க வேண்டும். 

பிரதமரின் வீடு கட்டும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகள், போலி நிறுவனங்கள் மூடல், பொருள் விலை என்னவென்றே தெரியாமல் வாழ்ந்த வாழ்க்கை, ஜிஎஸ்டியால் முடிவு என்று மத்திய அரசின் பலவித நடவடிக்கைகளை நாம் ஏற்கிறோமா இல்லையா என்ற கேள்விக்கெல்லாம் தேர்தலில் தான் விடை கொடுத்திருக்க வேண்டும். 

ஆனால் நேற்று நடைபெற்ற தேர்தலில்,  70  சதவீதம் பேர் தான் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள். மீதி பேர் தங்களுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை போல ஓட்டு போடக் கூட செல்லவே இல்லை. பணம் வாங்கி கொண்டு ஓட்டுப் போடுகிறான் என்று கூக்குரல் இட்டு அலறுகிறோம். ஓட்டு போடாதவர்கள் அதைவிட மோசமானவர்கள்.

 பல தொகுதிகளின் முடிவுகளை ஆய்வு செய்தால் வெற்றி பெற்றவருக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஓட்டுப் போடாதவர்களை விட குறைவு . இவர்கள் மொத்தமும் ஓட்டு போட்டிருந்தால், தேர்தல் முடிவு தலைகீழாக மாறியிருக்கும்.  அல்லது வெற்றி பெற்ற கட்சி இன்னும் கூடுதல் ஓட்டு வாங்கி இருக்கும். யாருக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லை என்றால் கூட, நோட்டாவிற்கு ஓட்டு போட்டிருக்கலாம். 

இதனால் தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் சிக்கலை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுட்டு இருக்கும். 
கமல், சீமான், தினகரன் போன்றவர்களின் கட்சிகள் பெறும் ஓட்டு சதவீதத்தை பார்த்தால், ஓட்டு போடாதவர்களின் எண்ணிக்கையை உணர்ந்து கொள்ள முடியும். 

இவர்கள் இப்படி என்றால், ஓட்டு போடுவதற்காக ஆம்புலன்சில் வந்தவர்களும் இருக்கிறார்கள். திருச்சி கிராமப்பட்டி முதியோர் இல்லத்தில் வாழும் மூதாட்டி, பெரியகுளம் முபாரக் அலி ஆகியோர் ஜனநாயக கடமையாற்ற ஆம்புலன்சில் வந்தவர்களில் சிலர். 

கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன்(80), அய்யம்மாள்(85), சிவகிரி முருசேகன்(66).துரைச்சாமி புரம் முத்துப்பிள்ளை(90), வேடம்பட்டிவிவசாயி கிருஷ்ணன்(75), குருங்களூர் மல்லியா(60), ஜோலார்பேட்டை துளசிம்மாள்(80) ஆகியோர் ஓட்டுப் போட வந்து வெயில் கொடுமையால் உயிரை இழந்தவர்கள்.

இவர்களில் சென்னை புதுப்பேட்டை சிசிலி மாரல்(77) நிலை இன்னும் கொடுமையானது. விரலில் அடையாள மை வைத்தபோது மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இவர்கள் போன்றவர்களும், தமிழகத்தில் தான் உள்ளனர். இவர்கள் தான் ஜனநாயத்தின் பெருமைக்கு காரணமானவர்கள். 

அதே போல சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில், பஸ்சில் இடம் கிடைக்காத அளவிற்கு இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் விடிய விடிய காத்திருந்து சொந்த ஊருக்கு சென்று ஓட்டு அளித்துள்ளனர். இந்த தேர்தல் முடிவை அடையாளம் காட்டுபவர்கள் இவர்கள் தான். 

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி, ஸ்ரெர்லைட், மீத்தேன், காவிரி நீர் பிரச்னை, போன்ற தமிழகத்தின் அனைத்து பிரச்சனை ஆகியவற்றிக்கு வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய இளைஞர்கள், இன்று விரல் நீட்டி போராட்டம் நடத்த களம் இறங்கினர். 

கடந்த கால திமுக ஆட்சியில் தவறோ, சரியோ அதன் முடிவை போராட்டத்தால் மாற்ற முடியாது. போராட்டம் நடக்கும், அரசே ஸ்தம்பித்து போகும் நிலை உருவாகும், கடையில் சமாதனத்தின் மூலம் போராட்டம் முடிவுக்கு வரும், ஆனால் போராடியதற்கான காரணம் அப்படியே இருக்கும். 

கச்சத்தீவு பிரச்னை தொடங்கி, மீனவர்கள் பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்னை, காவிரி நீர் பிரச்சனை என்று எதை வேண்டுமானாலும் பரிசீலனை செய்து பார்க்கலாம். ஆனால் கடந்த ஜல்லிக்கட்டு பிரச்னையின் போது நடந்த மெரினா புரட்சி வெற்றிகரமாகத்தான் முடிந்தது. 

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கையாக இருந்தாலும், அதை .செயல்படுத்த முடியாது என்று உணர்ந்த தமிழக அரசு மாநிலம் முழுவதும், 400க்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களை நடத்தி மாணவர்கள் வெற்றி பெற உதவி வருகிறது. இதே போல தான், வேறு சில போராட்டங்களும் இவற்றை எல்லாம் இளைஞர்கள் பார்த்துள்ளனர். தற்போதும் கூட தமிழகத்தில் காவிரி பிரச்னையை பற்றி பேசாத காங்கிரஸ், கர்நாடகாவில் ஆணையத்தையே களைப்பேன் என்கிறது. 

ராகுல் பிரதமர் என்று ஏற்கும் தமிழக கம்யூனிஸ்ட்கள், கேரளாவில் அதற்கு மாறான நிலையை எடுக்கிறார்கள். 
அதிமுகவிலும் பாஜக அதிமுக தவிர்த்து இதர கடசிகள் பேரத்தின் அடிப்படையில் தான் அந்த கூட்டணியில் சேர்ந்துள்ளனர். 

அவர்கள் இதுவரை பேசிய பேச்சுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் அப்படி அப்படியே கிடைக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு தான் இளைஞர்கள் உள்ளூருக்கு கிளம்பி இருக்கிறார்கள். அவர்கள் யாரை நோக்கி விரல் நீட்டுவார்கள்; அப்படி அவர்கள் குறிப்பிடும் கட்சி வலுப்பெருமா என்பதெல்லாம் மே 23 அன்று தான் தெரியும். 

ஆனாலும் ஓட்டுப் போடாதவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது, ஓட்டுப் போடும் இளைஞர்கள் எண்ணிக்கை குறைவு தான் என்கிற போது, அவர்கள் கோரிக்கைகள் நிச்சயம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறி. 
அதனால் தான் ஒட்டு மொத்த மக்களின் பிரதியான அரசு அமைய வேண்டும் என்று, 100 சதவீத ஓட்டுப் பதிவுக்கு தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள், நடிகர்கள், தொண்டு நிறுவனங்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் காரணமாக 70.90 சதவீதம் ஓட்டுக்களை பெற்று இருக்கிறோம், மீதி உள்ளவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது எளிது. ஒவ்வொரு பூத் ஏஜெண்டிற்கும் இது தெரியும். அவர்கள் ஒத்துழைப்புடன் வாக்காளர் பட்டியலை வைத்து பார்த்தாலே, யார் யார் ஓட்டுப் போடவில்லை என்று தெரிந்துவிடும். 

அதன் அடிப்படையில் அரசு சார்ந்த திட்டங்களின் பலன்களை அவர்கள் அனுபவிக்க வரும் போது, குறைந்த பட்சம் ஏன் ஓட்டுப் போடவில்லை என்று கேள்வியாவது கேட்கலாம். இனி வரும் தேர்தலில் ஓட்டுப் போடுவேன் என்று எழுதி வாங்கிக் கொண்டாவது, அந்த சலுகை பெற அவர்களை அனுமதிக்கலாம். அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் உருவாகும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close