கனவாகிப் போனதா சசிகலாவின் அரசியல் பிரவேசம்?

  பாரதி பித்தன்   | Last Modified : 20 Apr, 2019 08:07 pm
special-article-about-sasikala


சினிமாவிற்கு இணையாக அரசியலிலும் இரட்டை தலைவர்கள் இருக்கும் போது, ஒருவரை நல்லவராகவும், மற்றொருவரை தீயவராகவும் அடையாளம் காட்டுவது வாடிக்கை. ஜெயலலிதாவும், சசிகலாவும் அப்படித்தான் அடையாளம் காட்டப்பட்டனர். 
ஆட்சியில் நல்லது நடந்தால் அம்மா பாரு எவ்வளவு நல்லவுங்க, எவ்வளவு திறமையானவங்க என்று பாராட்டுவதும், ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தால், அதே அம்மா அப்பாவியாக மாறி, எல்லாவற்றிக்கும் சசிகலா தான் காரணம் என்று கூறுவதும் வாடிக்கையாக இருந்தது. 

இதனால் தான் திரைமறைவில் சசிகலா காலில் விழுந்தவர்கள் கூட, வெளிப்படையாகவே அவருக்கு எதிராகவே காட்டிக் கொண்டனர். இந்நிலையில் ஜெயலலிதா என்ற பொன் முட்டையிடும் வாத்து, சசிகலாவே எதிர்பாரக்காத போது மரணம் அடைகிறார். மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட ஜெயலலிதா, எப்படி திடீர் என்று இறந்தார்;  

சசிகலாதான் இதற்கு காரணம் என்ற அளவிற்கு, மக்கள் கோபப்பட்டார்கள். இதன் காரணமாக, அன்று சசிகலாவால் முதல்வர் பதவி ஏற்க முடியாமல், பன்னீர் முதல்வராக மாறினார். மக்கள் ஆத்திரம் அடங்கிய பின்னர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் பன்னீருக்கு நெருக்கடி கொடுத்து வீட்டிற்கு அனுப்பபட்டார். 

அந்த சூழ்நிலையில் சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டு, முதல்வர் நாற்காலிக்கு துண்டு போட்ட நிலையில், அப்போதைய கவர்னர் வித்யாசாகர் ராவ், அதனை ஏற்கவில்லை. இதற்கு, வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றால், அவர் முதல்வராக இருக்கும் போது தேவையற்ற சட்டசிக்கல் ஏற்படும் என எண்ணி, அவர் மவுனம் காத்தார். 
அவர் எதிர்பார்த்தது போலவே, சசிகலாவும் சிறை சென்றார். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியில் அமர்ந்தார். ஆனாலும் சசிகலா பாசம் அவர்களை விட வில்லை. எதிர்பார்த்தது போலவே, சசிகலா சிறைக்கு சென்றதும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் நாடகம் நடத்தி சசிகலா குடும்பத்தையே வெளியேற்றினர். 

துரத்தும் வழக்குதுகள் காரணமாகவும், தன்னை ஆதரித்த எம்எல்ஏகளை தக்க வைப்பதற்காகவும், அமமுக என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் பொதுச் செயலாளராக சசிகலா, துணைப் பொதுச் செயலாளராக தினகரனும் அடையாளம் காட்டப்பட்டனர். அது இயக்கமாக இருந்த வரை எந்த பிரச்னையும் இல்லை. ஆர்.கே. நகரில் தினகரன் போட்டியிட்ட போதும் ஒரு தொகுதி என்பதால், அவர் சுயேட்சையாக வெற்றி பெற்றாலும், எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்த வில்லை. 

ஆனால் லோக்சபா தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம்,நிலை, ஆசை என்றும் வைத்துக் கொள்ளலாம். அப்போது தான் சிக்கல் உருவானது. பதிவு பெறாத கட்சிக்கு ஒரே சின்னம் வழங்க முடியாது. தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது. அப்போது கோர்ட்டில் நாங்கள் கட்சியாக பதிவு செய்கிறோம் என்ற உறுதிமொழியை கொடுத்து தான் பரிசு பெட்டக சின்னம் கிடைத்தது. 

ஆனால் இவர்கள் நேரம், உடனே 4 தொகுதிகளிலும். தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றால், மீண்டும் ஏன் இவ்வளவு நாள் கட்சியை பதிவு செய்ய வில்லை என்று கேள்வி எழும். அப்படி பதிவு செய்யும் போது, ஊழல் வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவை, பொதுச் செயலராக அறிவிப்பதா என்ற எண்ணம் தினகரனுக்கு எழுந்துள்ளதாகவே தாேன்றுகிறது. 

அப்படி நேரடியாக சசிகலாவை பொதுச் செயலராக நியமித்துவிட்டால், அதிமுக எங்களுடையது தான் எனக் கோரும் வழக்கு நீர்த்துப் போய்விட்டதாக ஆகிவிடும். இதன் காரணமாகவே, தினகரன் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இதை வேறு வகையிலும் பார்க்கலாம். பொதுச் சின்னம் வேண்டுமென்றால், கட்சியாக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாமல் போட்டியிட்டு வென்றால், அவர்கள் தரப்பு எம்எல்ஏ,க்கள் சுயேட்சையாகவே கருதப்படுவர். நாளை, அந்த எம்எல்ஏ.,க்கள் எந்தப் பக்கமும் விலை போகலாம். 

அப்படி எதுவும் நடக்காமல் இருக்கவும், அதிமுக தங்கள் வசம் வர வாய்ப்பே இல்லை என்பதை அறிந்த காரணத்தால், அதை தொண்டர்கள் மத்தியில் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல், புதிய கட்சி துவங்குவதாகவும், சசிகலா, அதிமுக.,வின் பொதுச் செயலராக நீடிப்பதாகவும் கூறுகின்றனர். 

அதிமுகவை மீட்கும் சட்டப்போராட்டத்தில் இனி தான் ஈடுபடப்போவதில்லை என்றும், அதை சசிகலா கவனித்துக்கொள்வார் என்றும் தினகரன் கூறியுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த சறுக்கல்கள். 

ஜெ., இருந்தவரை, திரைமறைவு வாழ்க்கை. அதாவது, மீடியா வெளிச்சத்தில் இல்லாமல், பின்புலத்தில் இருந்தே அதிகாரம் செலுத்தி வந்தார் சசிகலா. அவர் மறைந்த பிறகும் உடனடியாக பதவிக்கு வரமுடியவில்லை. 

முதல்வராகலாம் என நினைத்த போது சிறைவாசம். தற்போது, தங்கள் பக்கம் இருக்கும் நபர்களையாவது தக்க வைக்கவும், நிரந்தர சின்னம் பெறவும், தினகரன் தனிக்கட்சி துவங்குவதால், இதிலிருந்தும் கழற்றிவிடப்பட்டுள்ளார் சசிகலா. 

இதற்கு முன் வார்த்தைக்கு வார்த்தை சின்னம்மா சின்னம்மா என்ற அமமுகவினர், இனி டிடிவி டிடிவி எனத் தான் கூறுவர். மாெத்தத்தில் சசிகலாவின் அரசியல் பிரவேசம் வெறும் கனவாகவே முடிந்து போகும் போலுள்ளது. சிறையிலிருந்து அவர் வெளிவர இன்னும் 2 ஆண்டுகள். அதன் பின், சட்ட விதிகளின் படி, 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை.

தற்போதே, 60க்கு மேல் வயதாகிவிட்டது. 70க்கு மேலா அரசியலை துவங்கவிருக்கிறார்? பாவம்... விதி செய்த சதியோ, சுற்றி இருந்தவர்கள் செய்த சதியோ, சசிக்கு சரியில்லை விதி.  இந்த சூழ்நிலையில் சசிகலா மட்டுமின்றி, அவரின் பெயர், அவர் பெயரிலான அரசியல், அவரின் அரசியல் பிரவேச கனவு ஆகிய அனைத்தும், நான்கு சுவற்றுக்குள் முடக்கப்பட்டது தான் மிச்சம். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close