இழவு வீட்டிலும் இனவாதம் பேச வேண்டுமா சீமான் அவர்களே?

  விசேஷா   | Last Modified : 27 Apr, 2019 06:34 pm
seeman-controversial-speech-about-srilanka-bomb-blast

இலங்கையில் கடந்த ஞாயிறன்று அங்குள்ள தேவாலயங்கள், ஓட்டல்கள், வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் என பல இடங்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில், 369க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு, இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான, இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. 

பயங்கரவாதம் என்று வந்துவிட்டால், அதற்கு இனம், மாெழி, மதம் என எதுவும் கிடையாது என்பதே, உலக அளவில் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் உணர்த்துகின்றன. குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த ஒரு பிரிவினர், அதே மதத்தை சேர்ந்த மற்றொரு பிரிவினர் மீது தாக்குதல் நடத்தி அழித்ததையும், இந்த உலகம் கண்கூடாக கண்டுள்ளது. அதே போல், இனப்படுகொலை, ஜாதிய வன்முறைகள் என பல வகையிலும் பயங்கரவாதம் அவ்வப்போது தலைதுாக்கத்தான் செய்கிறது. 

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, சர்வதேச நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்நிலையில், இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தங்கள் சொந்தங்களை இழந்தவர்களின் குடும்பத்தாரிடம், அந்நாட்டு அரசு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. தவிர, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கையும், உயிரிழந்தாேர் குடும்பத்திற்கு உதவி செய்வதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 

உள்நாட்டு பிரச்னைகளிலேயே, முழு விபரங்களும் தெரியும் முன் அவசரப்பட்டு கருத்து தெரிவிப்பது அநாகரிகமாக கருதப்படும் நிலையில், வெளிநாட்டில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து, அந்நாட்டு அரசை விமர்சித்து பேசியுள்ளார், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான். 

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு, சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்., பொறுப்பேற்றுள்ள நிலையில், உள்நாட்டை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட மத அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக, அந்நாட்டு உளவுத்துறை சந்தேகிக்கிறது. நாம் ஏற்கனவே கூறியது போல், பயங்கரவாதிகள் என்றால், அவர்கள் எந்த மதத்தை, இனத்தை, மாெழியை சேர்ந்தவர்கள் என பிரித்து பார்க்க தேவையில்லை. 

ஏனென்றால், எந்த மதமும், இனமும், மாெழியும் பயங்கரவாதத்தை போதிப்பதில்லை. மேற்கண்ட அனைத்துமே, அன்பையும், சகோதரத்துவத்தையும் மட்டுமே வலியுறுத்துகின்றன. அப்படி எதைப் பற்றியும் சிந்திக்காமல் உயிர் பலி வாங்குவோர், மேற்கண்ட எந்த பிரிவிலும் வகைப்படுத்த முடியாதவர்களே. 

அதாவது, அவர்கள் தங்களை இன்ன மத்தை சார்ந்தவன், இன்ன இனத்தை, மாெழி பேசும் பிரிவை சேர்ந்தவன் என அடையாளப்படுத்திக்கொள்ளும் தகுதியை இழக்கிறான். 

அப்படியிருக்கையில், இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு, அந்நாட்டு அரசையும், சிங்கள மொழி பேசும் இனத்தினரையும், அந்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள புத்த மதத்தினரையும் காரணம் காட்டி பேசியிருக்கிறார் சீமான். 

அதாவது, அந்நாட்டில் உள்ள தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த, அந்நாட்டு அரசு வேண்டுமென்றே சதித்திட்டம் தீட்டி குறிப்பிட்ட மத்தினரை ஏவி, தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறுகிறார். இதில், அந்த குறிப்பிட்ட மதத்தினர் பலிகடா ஆகிவிடக்கூடாது என்ற வகையிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில், இலங்கையை சேர்ந்தோர், இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாடுகளை சேர்ந்தோர் உட்பட பல தரப்பினரும் பலியாகியுள்ளனர். ஆனால், சீமான் என்ன சொல்கிறார் என்றால், இது, அங்குள்ள தமிழர்களை குறி வைத்து, சிங்கள அரசு திட்டமிட்ட தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறுகிறார். 

மேலும், அந்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். 2009ம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற போரின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகினர். 

அங்கிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களை மீள்குடியமர்வு செய்யும் பணிகள் மெல்ல மெல்ல நடைபெற்று வருகின்றன. இந்திய அரசின் சார்பிலும், ஆயிரக் கணக்கில் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. சர்வதேச சமுதாயத்தின் அழுத்தம் காரணமாக, அங்குள்ள தமிழர்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அந்நாட்டில் மிகப் பெரிய அளவிாலான பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது, அந்நாட்டில் உள்நாட்டு அமைதியை சீர்குலைப்பதுடன், அந்நாட்டு சுற்றுலா, பொருளாதாரத்தில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதலில் அவர்கள் இதிலிருந்து மீண்டெழ வேண்டும். முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது தான் அந்நாட்டு மக்கள் இனம், மொழி, மதத்தால் பிரியாமல், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மக்களிடையே ஒற்றுமை ஓங்கினால், வெளியிலிருந்து பகைவன் வர முடியாது. 

பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள் ஆரம்பத்திலேயே முறியடிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், இது போன்ற கருத்துக்களை கூறுவதை விடுத்து, இலங்கையில் மீண்டும் ஓர் இனவாத, மதவாத, மாெழி அடிப்பையிலான போர் ஏற்படத் துாண்டும் வகையில் பேசியிருக்கிறார் சீமான். 

ஒரு வேளை, இதுவரை சிங்களர்கள் மீது, அங்குள்ள தமிழர்களுக்கு எந்த சந்தேமும் எழாமல் இருந்திருந்தால் கூட, சீமானின் இந்த பேச்சு, அவர்கள் மனதில் சந்தேகத்தை கிளப்பக்கூடும். அதே போல், அங்குள்ள இஸ்லாமியர்கள் பலரும் தமிழ் பேசுபவர்கள். அவர்களை, சிங்கள அரசு துாண்டி விட்டு, தமிழ் இனத்திற்கு எதிராக செயல்படுவதாக சீமான் பேசியுள்ளார். 

அப்படியானால், அங்குள்ள முஸ்லிம்கள் மீது, பிற மதங்களை பின்பற்றும் தமிழர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையிலான பேச்சாகத்தான் இதை பார்க்க முடிகிறது. இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு சந்தேகத்தை மூட்டி விட்டு, தமிழர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளும் நிலையை ஏற்படுத்துகிறாரா திரு.சீமான் என்ற ஐயப்பாடு இயற்கையாகவே எழுகிறது. 

தொடர்ந்து சிங்களர்கள் மீது குற்றம்சாட்டி வருவதால், அவர்கள் தேவையின்றி தமிழர்கள் மீது தங்கள் வெறுப்பை காண்பிக்க நேரிடலாம். இதற்கு முன், இந்தியாவுக்கு வந்து சென்ற இலங்கையை சேர்ந்த தமிழ் எம்.பி.,க்கள் மற்றும் அங்குள்ள அரசியல் தலைவர்கள் பலரும் ஒரே மாதிரியான கருத்தை பதிவு செய்துள்ளனர். 

அது என்னவென்றால், ‛‛நாங்கள் இலங்கையில் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம், 2009க்குப் பின் முழு சுதந்திரம் கிடைத்ததா என்றால் இல்லை எனலாம். ஆனாலும், எங்கள் மீது, சிங்கள அரசுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் ஒரு சந்தேகப்பார்வை இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலை மாற இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். 

ஆனாலும், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சுக்களால், சிங்களர்கள் எங்கள் மீது மேலும் வெறுப்படைகின்றனர். அதாவது, எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதாக எண்ணி, இவர்கள் பேசும் பேச்சுக்கள், இலங்கையில் வாழும் தமிழர்களாகிய எங்களுக்கு மேலும் சிக்கலை அதிகரிக்கத் தான் செய்கிறது’’ என்றனர். 

அவர்களின் ஆதங்கத்தை, இவ்வகையிலான கருத்துக்களில் இருந்தே புரிந்து கொள்ளலாம். அதாவது, ஒரு பிரச்னை நடக்கும் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக உதவ முடிகிறதோ இல்லையோ, அவர்களுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலாவது நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். 

சீமான் பாேன்றவர்களின் இது போன்ற பேச்சுகளால், தமிழர்களிடையே ஒற்றுமை ஓங்குவதை விட, தமிழர்களை ஒடுக்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை, சிங்களர்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கும் என்பதே நிதர்சனம். 

தமிழ் இனம், தமிழர் பண்பாடு, தமிழர் ஒற்றுமை என தொடர்ந்து மேடைகளில் பேசி வரும் சீமான், தமிழர்களின் நலனுக்காக இதுவரை என்ன செய்துவிட்டார். குறிப்பாக, இலங்கை தமிழர்களைப் பற்றி அதிகம் பேசும் அவர், எத்தனை இலங்கை தமிழ்களை வாழ வைத்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த முடியுமா? 

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, இங்கிருந்து கொண்டு அந்நாட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுத்துவிடுவதால் மட்டும், அங்கு நிலைமை சீராகிவிடப்போகிறதா? இல்லை, அந்நாட்டில் மீண்டும் விடுதலை புலிகள் போன்ற ஓர் அமைப்பு உருவாகி, மீண்டும் போர் பூமியாக மாற வேண்டும் என அவர் ஆசைப்படுகிறாரா என்பதை விளக்க வேண்டும். அதற்காக அப்பாவி தமிழர்களை தூண்டி விடிகிறாரா?

முதிர்ச்சியான எந்த அரசியல் தலைவரும், இப்படிப்பட்ட சம்பவங்களின் போது, இன, மத ரீதியிலான மோதல்களை ஏற்படுத்தும் அல்லது அதிகரிக்கச் செய்யும் வகையில் பேசமாட்டார்கள். ஒரு வேளை சீமான் பாேன்ற தலைவர்கள், எல்லா பின்விளைவுகளையும் உணர்ந்தே இப்படி பேசுகிறார்கள் என வைத்துக் கொண்டால், இதை விட மோசமான அரசியலை வேறெங்கும் காண முடியாது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close