இன்னும் எத்தனை அமுதா அக்காக்கள்: களையெடுக்குமா தமிழக அரசு? 

  பாரதி பித்தன்   | Last Modified : 27 Apr, 2019 08:05 pm
article-about-nurse-amutha-and-child-selling-business-in-tamilnadu

சமூக ஊடங்கள், கேமரா செல்போன் வருகை, சமூகத்தில் மறைந்து கிடக்கின்றன பல வித ஊழல்கள், குற்றங்களை வெளிப்படுத்துகிறது. அப்படி சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ, குழந்தைகள் விற்பனையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர், நர்ஸ் அமுதா. இவர், குழந்தைகள் விற்பனையில் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளார். இதில் நல்ல வருமானம் வரவே, தன் நர்ஸ் வேலையில் இருந்து கூட விருப்ப ஓய்வு பெற்று விட்டு, இந்த தொழிலை தொடர்கிறார். 

அவரும், வாடிக்கையாளரும் பேசியதாக வெளியான ஆடியோ அவரது 30 ஆண்டு தொழிலை முடக்கிப் போட்டுள்ளது. அவரையும், அவர் கணவர் ரவிச்சந்திரனையும், ராசிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகள் கழித்து, அவர் தண்டனை பெறும் வாய்ப்புகள் உள்ளன. 

நம்முடைய விசாரணை, கோர்ட் நடைமுறைகள் ஆகியவற்றை பார்க்கும் போது, அவர் தண்டனை பெறுவார் என்று கட்டாயமாக கூற முடியவில்லை. அப்படியே அவர் சிறை தண்டனை பெற்றால் கூட, குழந்தைகள் விற்பனையை முற்றிலும் அது தடுத்து விடுமா என்பது சந்தேகம் தான். 

குழந்தைகள் விற்பனைக்கு ஆதாரமாக இருக்கும் பல விஷயங்களை முடிவுக்கு கொண்டு வராமல், அமுதா போன்றவர்களுக்கு தண்டனை கொடுப்பது, அவரை வேண்டுமானால் தொழிலில் இருந்து அகற்றலாமே தவிர்த்து, வேறு ஒரு குமுதா, சுதா உருவாவதை தடுக்க முடியாது. 

இவர்கள் உருவாகும் காரணம் வினோதமானது.  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, எந்த எந்த தெருக்களில் எல்லாம் சுற்றி சுற்றி குடும்பக்கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடித்தார்களோ, அந்த தெருக்களில் எல்லாம் தற்போது செயற்கை கருவூட்டல் மையங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. 

அந்த அளவிற்கு மலட்டு தன்மை பெருகிவிட்டது. இதில் பெரும்பாலும் குறைபாடு இருப்பதாக அடையாளம் காட்டப்படுகிறவர்கள் பெண்கள் தான். ஆண்கள் குறைபாடு உடையவர்கள் என்று அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட பெண் மருத்துவமனைப் பக்கமா ஒதுங்குவாள். 

விருந்தாளிக்கு பொறந்தவான நீ என்று நம்ம ஊரில் வசவுகள் சாதாரணமானது. சரி பிள்ளை வேண்டும் என்று இவர்களிடம் சென்றால், முதலில் 40 ஆயிரம் ரூபாயில் தொடங்கி, சுமார் 8 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும், மருத்துவமனையிலேயே தங்கி இருக்க வேண்டும் என்றெல்லாம் மருத்துவ வியாபாரிகள் விதிக்கும் நிபந்தனை விநோதமானது. 

இவன் எவ்வளவு அடித்தால் தாங்குகிறான் என்று பார்க்கும் வகையில் சிகிச்சைகள் தொடர்கிறது. செயற்கை கருவூட்டலில், முதல் முறையிலேயே கரு உருவாகும் என்பதற்கு எவ்விதமான நிச்சயமும் கிடையாது. இரண்டு அல்லது 3 சிட்டிங் இருந்தால் தான் பிள்ளை கிடைக்கும். ஒவ்வொரு சிட்டிங்கிற்கும் தனித்தனி கட்டணம். 

இவ்வளவு செலவு செய்து பிள்ளை பெற்றதால், அதற்கு பால் வாங்கி கொடுக்க கூட வழியில்லாத அளவிற்கு கட்டணத்தை பிடுங்கிக் கொண்டு விரட்டிவிடுவார்கள். ஆனால் செயற்கை கருவூட்டல் சிகிச்சை அரசு ஆஸ்பத்திரிகளில் இல்லவே இல்லை என்று சொல்லிவிடலாம். இப்படி சுமார் 8 லட்சம் கொடுத்து இடுப்பு வலியுடன் பிள்ளை பெறுவதை விட, அமுதா அக்காவிடம் ரூ. 4 லட்சம் கொடுத்தால் பிள்ளை தயார் என்ற காரணத்தால் தான், 30 ஆண்டுகளாக தொழில் நடக்க காரணம். 

கருவில் இருக்கும் குழந்தை, ஆணா, பெண்ணா என்று அறிந்து கொள்வதே தவறு. அமுதா அக்காவிடம் ஆணா பெண்ணா என்பது மட்டும் அல்ல கருப்பா, சிவப்பா, குண்டா ஒல்லியா என்று கூட தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. 
குழந்தையை விலைக்கு வாங்குவது தவறு, தத்து எடுக்கலாம் என்றால், அரசு அதற்கு விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்றி தத்து எடுப்பதற்குள் பிள்ளை வளர்க்கும் ஆசையே விட்டுப் போய்விடும்.

 மகன் உள்ள பெற்றோர், தங்களுக்கு பெண் குழந்தை வேண்டும் என்று தத்து எடுக்க முடியாது. பெற்றோரின் வயது, திருமண நிலை, தத்து கொடுப்பவரின் நிலை என்று பெரிய பட்டியலே பிள்ளையே வேண்டாம் சார் என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. தற்போது ஒரு சில விதிமுறைகளை தளர்த்தி, குழந்தைகளை தத்தெடுக்க வழிவகை செய்கிறது. இதில் பெற்றொர் வயதுகளின் கூட்டுத் தொகை 90க்குள் இருக்க வேண்டும். 

55 ஆயிரம் ரூபாய் வரை செலவு பிடிக்கும். அதே போல பாஸ்டர்கேர் என்ற திட்டத்தையும் அரசு செயல்படுத்துகிறது. இதில் பிள்ளையை வளர்க்க ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படகிறது. இது போன்ற திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, முழுமையாக இல்லை. மேலும் என்ன தான் முறைப்படி தத்து எடுத்தாலும் அந்த குழந்தைக்கு வளர்ப்பு தாய், தந்தை, காப்பாளர் என்று தான் வர முடியும். 

ஆனால் அமுதா அக்கா, சம்பந்தப்பட்ட பெண்ணே பிரசவித்ததாக சான்றிதழே வாங்கி தருகிறார். என்ன ரூ. 70 ஆயிரம் கூடுதலாக செலவாகும். அதற்கு ஒரிஜனல் டாக்டர்களே தயாராக இருக்கிறார்கள். இந்த விவகாரத்தையெல்லாம் முடிவு கட்டினால் தான் குழந்தைகள் கடத்தல் விற்பனை போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும். 

வெறும் நர்ஸ் அமுதா, அவரது கணவர் கைதோடு, ஒட்டுமாெத்த குற்றவாளிகளும் கைதாகிவிட்டதாக, வழக்கை முடித்தால், அது, மிகப் பெரிய கேடாக முடிந்துவிடும். இந்த அமுதாவைப் போல், இன்னும் எத்தனை பேர் செயல்படுகின்றனர். அவர்களின் பின்னணியில் உள்ள டாக்டர்கள் யார்? அதற்கு துணை போகும், குழந்தையை விற்கும் பெற்றோர் யார்? அல்லது மாேசடி செய்து, பெற்றோருக்கே தெரியாமல் குழந்தைகள் விற்கப்படுகின்றனவா? என பல கேள்விகள் எழுகின்றன. 

இவற்றிற்கெல்லாம் விடை காண வேண்டும் என்றால், இந்த வழக்கை முறையாக விசாரித்து, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். இது போன்ற சம்பவங்களை தடுக்க, குழந்தை தத்தெடுப்பு குறித்த விதிமுறைகள், சாதாரண பாெதுமக்களையும் சென்றடையும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும். 

செயற்கை கருத்தரிப்பு மையங்களின் பணக் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்படி பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே, இனி வருங்காலங்களில் அமுதா அக்கா போன்ற நர்சுகள் உருவாவதை தடுக்க முடியும்.


newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close