தமிழக அரசியலில் மீண்டும் தொடங்கிய எண் விளையாட்டு! 

  பாரதி பித்தன்   | Last Modified : 29 Apr, 2019 03:33 pm
article-about-tamilnadu-politics-and-recommendation-of-disqualification-of-admk-mla-s

 
கடந்த சட்டசபை தேர்தலில், எம்ஜிஆருக்கு பின் தொடர்ந்து ஆட்சியை பிடித்தது; நேரடியாக கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடித்தது என பல சாதனைகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்திருந்தார். அதே நேரத்தில் ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்பது போல, யார் கண் பட்டதோ ஜெயலலிதா மரணம், தினகரனை ஆதரித்தது, எம்எல்ஏகள் மரணம், தகுதி இழப்பு என்று அதிமுக ஆட்சி, நித்திய கண்டமாகவும், ஸ்டாலின் தயவால் பூர்ண ஆயுசுடனும் திகழ்கிறது. 

இதைவிட பெரும் பேறு திமுக முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி, முதல்வர் பழனிசாமி ஆட்சியை தொடங்கிய போது தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தது. திமுக ஆட்சியை விட, அக்கட்சி எம்எல்ஏகள் அதிக சவுக்கியமாக இருப்பதால், அவர்கள் இந்த ஆட்சியே தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனாலும் விதி இடைத் தேர்தல் வடிவில் வந்துள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் அதிமுக தற்போது, 113 எம்எல்ஏகளையும், திமுக - காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களையும், தினகரன் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் காரணமாக, மெஜாரட்டிக்கு மிக நெருக்கமாக அதிமுக உள்ளது. மேலும் திமுகவிற்கு எந்த வகையிலும் மெஜாரட்டியை நிரூபிக்க தேவையான எம்எல்ஏகள் இல்லை. இதனால் மட்டுமே அதிமுக ஆட்சி செய்கிறது. 

இடைத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும், தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் திமுக, அதிமுக கட்சிகள் லோக்சபா தேர்தல் பற்றி கவலைப்படாமல் இடைத் தேர்தலை மட்டும் மனதில் கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களையே, 22 தொகுதிகளிலும் நிறுத்தி உள்ளன. 

தற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுக குறைந்தது 8 முதல் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும். அதற்கு மாறாக, திமுக மீதி உள்ள இடங்களில் அதாவது 12 முதல் 14 தொகுதி வரை வெற்றி பெற்றால் 110 முதல் 114 இடங்களை பிடிக்கும். 

அந்த சூழ்நிலையில் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏகள் திமுகவிற்கு ஆதரவு அளித்தால் அக்கட்சி ஆட்சிக்கட்டிலில் ஏறும் வாய்ப்பு அதிகம். இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கலாம், அல்லது தினகரன் ஆதரவு எம்எல்ஏகள் அமைச்சர் பதவி கேட்கலாம். இதையெல்லாம் விட தற்போது திமுக எம்எல்ஏகள் பெறும் சுகம் நின்று போய்விடும்.

ஆனாலும் திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ஆட்சிக்கு வராவிட்டால் எப்போதும் வர முடியாது என்ற கருத்தும் நிலவுவதால்; ஸ்டாலின் நிச்சயம் ஆட்சியைப் பிடிக்க முயல்வார். 
இதைத் தடுப்பதற்காகத் தான், தினகரன் ஆதரவு எம்எல்ஏகளை தகுதி இழப்பு செய்யும் முயற்சியில் அதிமுக இறங்கி உள்ளதாக பல தரப்பிலும் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் மீண்டும் 3 இடங்கள் காலியாகும். இது அதிமுக வெற்றி பெற வேண்டிய இடங்களின் எண்ணிக்கையை குறைக்கும். 

அப்போதும் கூட அதிமுக ஆட்சி ஆட்டம் காணும் என்றால், ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதா வேண்டுமா என்று முடிவு எடுத்து, பன்னீர் ஆதரவு எம்எல்ஏகள் தகுதி இழப்பார்கள். இதன் மூலம் மீண்டும் தற்போதுள்ள நிலையே ஏற்படும். மேலும் தினகரன் கோஷ்டியினர் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்கள் எப்படி அதிமுக எம்எல்ஏகளாக இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புவதையும் வாயை அடைக்க முடியும். 

மேலும் பதவி இழந்த எம்எல்ஏகள் வாரியத் தலைவர்களாக வலம் வருவதற்கும் வாய்ப்பு அதிகம். தினகரனை நம்பியே 18 எம்எல்ஏகள் பதவியை இழந்து இருக்கிறார்கள் என்றால் ஆட்சியை வைத்துக் கொண்டுள்ள பழனிசாமியை நம்பி ஒரு சிலர் பதவியை இழக்க முன்வரமாட்டார்ளாக என்ன?

எது எப்படியோ லோக்சபா தேர்தல் முடிவுகள், மத்தியில் நிலையான ஆட்சியை அமைக்க உதவுகிறதோ இல்லையோ, அதோடு சேர்த்து நடத்தப்பட்டுள்ள சட்டசபை இடைத்தேர்தல் தமிழக அரசியலில் பெரும் சூறாவளியை கிளப்பும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close