தமிழ் இனி மெல்ல சாகும்

  Newstm Desk   | Last Modified : 11 May, 2019 03:37 pm
special-article-about-tamil-language-in-tn-school-subject

தமிழகத்தில், 1950ம் ஆண்டிற்கு முன், அரசு பள்ளிகள் தான் அனைவருக்குமான ஒரே வாய்ப்பு. அங்கு, 6ம் வகுப்பில் தான் ஆங்கிலம் அறிமுகம் செய்யப்பட்டது. காலப் போக்கில் அது 3ம் வகுப்பாக மாறியது. தற்போது தமிழ்  அல்லது ஆங்கிலம் 11ம் வகுப்பில் விருப்ப மொழிப்பாடமாக மாற்ற கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இந்த தவறான பரிந்துரையால் தமிழகத்தை சேர்ந்த தமிழர்களுக்கும், தமிழ் வேற்று மொழியாகும் அபாயம் உள்ளது.

பக்கத்து நாடான இலங்கையில் கூட, எல்கேஜி முதல் தமிழ் ஒரு பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. ஒரு பாடம் மட்டும் தான் ஆங்கிலம், கனடாவில், மலேசியாவில் என்று உலக நாடுகள் எல்லாமல் தமிழ் படிக்க வாய்ப்பை உருவாக்கி கொடுத்து இருக்கும் போது, தமிழக கல்வித்துறை இப்படி ஒரு அறிவு ஜீவித்தனமான முடிவை எடுத்துள்ளது.

பொதுவாக, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, மாநில, மாவட்ட முதலிடம் என்று தேடி போய் சந்தித்து பேட்டி எடுக்கும் மாணவ, மாணவிகள், மருத்துவ படிப்பில் முதல் இடம் பிடிப்பவர்கள் பட்டியலில் இடம் பெற மாட்டார்கள். இதற்கு காரணம், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், மொழிப்பாடம் என்று தமிழ் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும் சேரும். 

ஆனால், மருத்துவ படிப்பில் இந்த 2 மொழிப்பாடங்களும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதனால், மொழிப்பாடங்கள் தவிர்த்து, மற்ற பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தி, 200க்கு 200 மதிப்பெண் பெறுவதில் மட்டுமே அவர்கள் அதிக கவனம் செலுத்துவர். 

பிள்ளை பிறந்த உடனேயே, மம்மி, டாடி அழைக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யும் பெற்றோர், பிளஸ் 1 , பிளஸ் 2வில், தமிழ் விருப்ப பாடம் என்றால் அதை ஏற்பார்களா?

மொழி, தாய் மொழி என்பது உயிருக்கு ஒப்பானது. எப்படி வாழ வேண்டும் என்று அறிந்து கொள்வதற்கு தாய் மொழி அவசியம். சிந்தனை கூட தாய் மொழியில் இருந்தால் தான், அது தெளிவாக இருக்கும். ஆனால், இனி வரும் காலங்களில், தமிழ் தெரியாமலே தமிழகத்தில் படித்து முடித்து வெளியேற முடியும்.

தமிழ் நீக்கப்படவில்லை, விருப்ப பாடமாகத் தானே அறிமுகம் செய்கிறார்கள் என்று கூறலாம். திருமலை திருப்பதி, பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்துடன் தான் இருந்தது. தேன் தமிழ் ஓசை, திருப்பதியின் வீதிகளில் ஒலித்துக் கொண்டு தான் இருந்தது. ஆனால் இன்றைக்கு அங்கே தமிழை தேடிக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. இதே நிலைதான் தமிழகத்திலும் தோன்றும்.

இன்றைக்கு கல்வி என்பது, அறிஞராக மாற்றுவதற்கான வழி என்பதற்கு பதிலாக, அது முதலீடு என்று மாறிவிட்ட காலத்தில், வேலைக்கு என்ன தேவை என்றுதான் யோசனை செல்லும். அந்த நிலையில், தமிழ் விட்டுப் போய்விடும்.

எனவே, கல்வித்துறையின் இந்த அபத்தமான யோசனையை அரசு ஒதுக்கி தள்ள வேண்டும். அந்த முடிவை எடுக்க தமிழ் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து போராட முன்வர வேண்டும். இல்லாவிட்டால், தமிழ் மெல்லச் சாவதை தடுக்க முடியாது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close