அணி மாறும் எண்ணத்தில் ஸ்டாலின்; தடுத்து நிறுத்த எடப்பாடி வியூகம்!

  விசேஷா   | Last Modified : 22 May, 2019 07:35 pm
dmk-is-planning-to-allay-with-bjp-eps-is-trying-to-drop-it-sources

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை முதல் எண்ணப்படுகின்றன. இதுவரை இல்லாத வகையில், விவிபாட் எனப்படும் ஒப்புகை சீட்டுகளும் எண்ணப்பட்டு, பதிவான வாக்குகளுடன் ஒப்பிடப்பட்ட பின்பே, முடிவுகள் வெளியாகும் என்பதால், வழக்கத்தை விட இம்முறை, தேர்தல் முடிவுகள் வெளியாக, காலதாமதம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகளில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியும், தேசிய அளவில், பாஜக தலைமையிலான கூட்டணியும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த கருத்து கணிப்பு முடிவுகளால், தமிழக அரசியல் தலைவர்கள் பெரும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர். மாநிலத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், மத்தியில் தங்களுக்கு எதிரான கூட்டணி வெற்றி பெற்றால், அதிக எம்பி.,க்களை வைத்திருந்தும் எந்த பலனும் இல்லாமல் போய்விடுமோ என, திமுக தலைமை கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தில் பாஜகவோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ வெற்றி பெறாமல் போனால், அது பற்றி, பாஜகவின் மத்திய தலைமை பெரிய அளவில் கவலைப்படப்போவதில்லை என்றே தெரிகிறது. ஏனென்றால், அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள், பிற மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் கிடைத்துவிடும் என நம்புவதே காரணம். 

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, இடைத்தேர்தல் முடிவுகள் வருமா என்பது சந்தேகமே. அப்படியே வந்தாலும், ஆட்சி மாற்றம் நிகழாமல் பார்த்துக் கொள்ள தேவையான அரசியல் நடவடிக்கைகளை, அதிமுக தலைமை மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஜெ., காலத்திற்குப் பின், ஓ.பி.எஸ்.,ஐ ஓரம் கட்டி முதல்வர் பதவியில் அமர்ந்த எடப்பாடியார்,  சசிகலா சிறை சென்ற பின், தினகரனை நேரடியாக எதிர்த்து, மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜவுடன் இணக்கமாக இருந்த ஓபிஎஸ்ஐ மீண்டும் தன்னுடன் அரவணைத்து, அவருக்கு துணை முதல்வர் பதவியும் கொடுத்து, மிகப் பெரிய சாணக்கியத்தனத்தை அரங்கேற்றியதை இந்த நாடறியும்.

அப்படிப்பட்டவர், அவ்வளவு எளிதாக ஆட்சியை பறிகொடுப்பாரா என்பதும் யாேசிக்க வேண்டிய விஷயமே. 

அதே சமயம், கடந்த முறை, 37 எம்.பி.,க்களை வைத்திருந்த அதிமுகவுக்கு, இம்முறை அந்த எண்ணிக்கை குறைய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அப்படி ஏதேனும் நிகழ்ந்தால், மத்திய அரசுடன் எவ்வளவுதான் இணக்கமான போக்கை கடைபிடித்தாலும், பிரியோனப்படாத நட்பு அரசியலில் எப்போதும் நீடிக்காது என்பதை நிரூபிக்கும் நிலை ஏற்படலாம். 

அந்த தருணத்தில், மத்திய பாஜக., அதிமுக.,அரசுக்கு காட்டி வந்த கரிசனத்தை குறைத்துக் கொள்ளலாம். அப்படியே ஏதேனும் நிகழ்ந்தால், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த, திமுக தலைமை முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

இதை மனதில் வைத்து தான், 23ம் தேதிக்குப் பின்னரே, தங்கள் நிலைப்பாடை விளக்க முடியும் என, திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கார் போலும். மாநிலத்திலும் ஆட்சி இல்லை; அதிக எம்.பி.,க்கள் வைத்திருந்தும் மத்திய அரசிலும் பங்கேற்கவில்லை என்றால், கட்சி கலகலத்துவிடுமாே என்ற அச்சம் ஸ்டாலிக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். 

அப்படி ஏதேனும் ஏற்பட்டால், அவர்கள் மத்திய பாஜக அரசை ஆதரிக்கும் நிலைப்பாட்டையும் எடுக்கலாம். ஆனால், அதை ஏற்கும் நிலை பாஜகவுக்கு ஏற்படுமா என்பது மிகப் பெரிய சந்தேகமே. ஏனென்றால், அவர்களுக்கு தனியாகவே பெரும்பான்மை கிடைக்கும் போது, திமுகவின் ஆதரவை பெற வேண்டிய அவசியம் இருக்காது. 

ஆனாலும், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஓட்டெடுப்பின் போது திமுக எம்பிக்களின் எண்ணிக்கை கை கொடுக்கும் என்பதால், பாஜக அவர்களை அரவணைக்கவும் செய்யலாம். திமுகவின் இந்த நகர்வை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதை தடுத்து நிறுத்தும் வியூகம் வகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அரசியலில் எதுவும் சாத்தியமே என்பதற்கேற்ப, எந்த நேரத்திலும், எந்த கூட்டணியும் மாறலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தமிழகத்தில் இயற்கையாகவே ஆட்சி மாற்றம் நிகழுமா? அல்லது மத்திய பலத்துடன் வலுக்கட்டாயமாக அகற்றப்படுமா? அல்லது அப்படிப்பட்ட கூட்டணியே ஏற்படாமல், திமுக மேலும் சோகத்தில் மூழ்குமா என்ற பல கேள்விகளுக்கு இன்னும் சில மணி நேரங்களில் பதில் கிடைத்து விடும். ஆம்... நாளை வெளியாகும் தேர்தல் முடிவுகளில், அகில இந்திய அளவில் மட்டுமின்றி தமிழக அரசியலிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், இந்த முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close