காவிரியை திசை திருப்பவா இந்தி எதிர்ப்பு?

  பாரதி பித்தன்   | Last Modified : 03 Jun, 2019 07:25 pm
kaveri-issue-vs-hindi-issue

கர்நாடக மாநிலத்தின் பிடிவாதத்தால், டெல்டா மாவட்டம் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்துள்ளது. நடப்பாண்டில், கஜா புயல் ஏற்படுத்திய இழப்பை ஈடுகட்டும் என்ற எதிர்பார்ப்பில் குறுவை, சம்பா சாகுபடிகளை விவசாயிகள் நம்பி இருக்கிறார்கள். மேட்டூர் அணை திறக்க வேண்டிய காலக்கெடுவிற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது.

மேட்டூர் நீர்மட்டம் தேவையான அளவிற்கு இல்லை. இதனால் ஜூன் 12-ஆம் தேதி இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறப்பு சந்தேகம் தான். டெல்டாவில் குறுவை கிடையாது என்பது நிச்சயம். ஆனாலும் அரசு இதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற எண்ணம் விவசாயிகள் மனதில் எழுந்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்ததும் தன் கடமை முடிந்துவிட்டதாக மத்திய அரசு கருதிவிட்டது. ஆணையம்  இதுவரையில் 3 முறையும், ஒழுங்காற்று குழு ஒரு முறையும் கூடியுள்ளது. அவற்றில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

மாநிலத்தில் மத்திய அரசுக்கு ஆதரவான அரசாக அமைந்திருப்பதால், அவர்களும் இதில் தீவிரமான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த மே 28 -ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடந்தது. இதில் தமிழக அரசு மே மாதம் 2 டிஎம்சி , ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.2 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தியது. ஆணையம் 9.19 டிஎம்சி தண்ணீரை விடுவிக்க உத்தரவிட்டது.

அங்கு அதனை ஏற்றுக் கொண்ட கர்நாடக அரசு, கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் மழை பெய்தால் தண்ணீர் திறப்பு இருக்கும் என்று கூறி ஆணையத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட மாட்டாது என்பதை வெளிப்படையாக தெரிவித்தது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய அனைவரும் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்கள். மாதம் தோறும் தண்ணீர் திறக்க வேண்டிய அளவு என்பது மழை பொழிவை அடிப்படையாக வைத்தது அல்ல. இது கட்டாயம். அதை கர்நாடகா அரசு ஏற்க மறுக்கிறது.

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை தவிர்த்து யாரும் இதுகுறித்து இதுவரை பேசவில்லை.

அதிலும் குறிப்பாக, லோக்சபாவில் 37 எம்பிக்களை பெற்ற திமுக, காங்கிரஸ் கட்சி காவிரி நீர் பற்றி அறிக்கைகூட விடவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் தயவில் தான் ஆட்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில் அந்த மாநிலத்தில் ஒரு இடத்திலும் தமிழகத்தில் 9 இடங்களிலும் வெற்றி அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை காங்கிரஸ் கட்சியில் தேர்வு பெற்ற எம்பிக்களில் 17 சதவீதம்.

இந்த நன்றி விஸ்வாசத்திற்காகவாவது தமிழக காங்கிரஸ் கட்சி காவிரி நீர் திறப்பு பற்றி பேசி இருக்க வேண்டும். திமுக கூட்டணி அல்லது காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் மட்டுமாவது ராகுல், சோனியா ஆகியோரை நேரில் சந்தித்து காவிரி நீர் திறப்பிற்கு வற்புறுத்தி இருக்க வேண்டும். அதனை அவர்கள் செய்ய தவறிவிட்டனர்.

இதை யாராவது விமர்சனம் செய்யப் போகிறார்கள் என்று கையில் எடுத்துக் கொண்ட விவகாரம் தான் இந்தி திணிப்பு பிரச்னை. இந்தி கட்டாயம் என்று கஸ்துாரி ரங்கன் பரிந்துரை செய்திருப்பதாக  விஷயத்தை திசை திருப்பி போராட்டத்திற்கான ஆயத்தப்பணிகளை திமுக கூட்டணி கட்சிகள் முன்னெடுக்க தொடங்கி உள்ளன. 
இந்த பரிந்துரையை அரசு ஏற்க வேண்டும், அது சட்டமாக்க ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும்.

இந்த நடவடிக்கைகள் முடிய சுமார் ஓராண்டு தேவை. தற்போதைய நிலையில் மத்திய அரசுக்கு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லை. எவ்விதமான போராட்டமும் இல்லாமல் அதனை முறியடிக்க முடியும். அதைவிடுத்து போராட்டம் என்பது மக்களை திசை திருப்பும் செயல்.அதனை திமுக தற்போது செய்கிறது.

அவசர சிகிச்சை பிரிவில் தவித்து வரும் குறுவைக்கு தண்ணீர் விடுவது தான் தற்போதைய தேவை. காவிரிக்கு போராட வேண்டிய திமுக கூட்டணிக் கட்சிகள் அதை திசை திருப்பவே இந்திக்கு குரல் கொடுப்பது வேதனை. இவர்களை தேர்வு செய்ய மக்களுக்கு நல்லமுறையில் நன்றி செலுத்துகிறார்கள்.

newstm.in

 

 

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close