கண்ணீரை தவிர்க்க தண்ணீரை சேமிப்போம்!

  பாரதி பித்தன்   | Last Modified : 03 Jun, 2019 09:57 pm
water-scarcity-and-need-to-save-drinking-water

கடந்த காலத்தில் தண்ணீரை சேமிப்பது, பாதுகாப்பது போன்றவை ஒவ்வொருவரின் கடமையாக இருந்தது. இதை சரியாக கடைபிடிக்க வேண்டி மதங்களும் அவற்றை வலியுறுத்தின. இந்த இந்த பாவங்களுக்கு நீர்நிலைகளை உருவாக்குவதை பரிகாரமாக கூறியிருக்கிறார்கள். "நீரை சீராடு" என்பது பழமொழி. குளத்தில் குளித்து முடித்துவிட்டு அதில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வந்து கரையில் போடுவது வழக்கம். இதனால் குளம் துார்ந்து போகாமல் இருக்கும் என்று நம்பிக்கை.

தண்ணீரை கொட்டினால் பொருளை, புகழை இழந்ததற்கு சமம் என்கிறார்கள் நமது முன்னோர்கள். நீர் இல்லாமல் உலகு அமையாது என்பதால் இப்படி பெண்ணைப்போல தண்ணீரையும் பாதுகாத்தார்கள். ஊர்கள் தோறும் சத்திரம், வீடுகள் தோறும் திண்ணை என்று வாழ்ந்த நாட்டில் இன்று தவித்த வாய்க்கு தண்ணீர் கூட காசு கொடுத்தால் தான் கிடைக்கும் என்ற நிலை.

முறையான நீர் மேலாண்மையை நாம் கடைபிடிக்காத காரணத்தால் தான் நாடு இப்படி மாறிவிட்டது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்கள் மழை நீரை சேமித்து முறையாக பயன்படுத்தினார்கள். செட்டிநாடு என்று அழைக்கப்படும் சிவகங்கை, காரைக்குடி, கோனபட்டு, கானாடுகாத்தான், தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகள் வானம் பார்த்த பூமிதான். இங்கு நகரத்தார்கள் வீடுகளில் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பாகவே மழைநீர் சேமிக்கும் அமைப்பை உருவாக்கி பாதுகாத்தார்கள். இதனால் மழை பெய்யும் காலங்களில் தேவைக்கு போதுமான தண்ணீரும், கூடுதல் நீர் உறைக்கிணறு போன்ற அமைப்பில் சேமிக்கப்பட்டது.

இதைத் தவிர, நகரத்தார் கட்டிய கோயில்களில் குளம் கூடுதலாக அமைக்கப்பட்டது. தமிழகத்தின் பாரம்பரிய கோயில்கள் எல்லாவற்றிலும் தெப்பகுளம் அமைக்கப்பட்டது. ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு முன்பு வரை, பல்லாயிரம் ஆண்டுகளாக நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டது.

மனிதர்களின் பேராசையால் நிலத்தின்மேல் பட்ட நீர் வற்றியதும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்க தொடங்கினோம். அதுவும் தற்போது வற்றி வருகிறது. இன்றைக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் காவிரி நீர்தான் குடிநீராக பயன்படுகிறது. ராமநாதபுரம்வாசிகள் கூட காவிரி நீரை குடிக்கிறார்கள். இப்படி செயற்கையாக தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்டாலும், மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தருவதில்லை .

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்பட்டன. இப்போது அவ்வாறு இல்லை. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. வீட்டில் நீரை சேமிக்க வாய்ப்பு இல்லாவிட்டால், தோட்டத்தில் நீர் பாய்ச்சுகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைளை உள்ளாட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. உள்ளூர் அரசியல்வாதிகள் தங்கள் குடிநீர் குழாயில் மோட்டார் இணைத்து தண்ணீரை உறிஞ்சி கொள்கிறார்கள்.

இப்படி நீர் மேலாண்மை என்பதை பற்றிய அறிவே இல்லாத மக்கள் இருப்பதால் ஓராண்டுக்கு தேவையான தண்ணீர் 8 மாதங்களிலேயே தீர்ந்துவிடுகிறது.
இன்னொருபுறம் மழையை வரவழைப்பதற்கான நடவடிக்கையும் இல்லை. சாலைகளை அகலப்படுத்தும் பணி தொடங்கி, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் மரங்கள் மாயமாகிவிட்டன. அவற்றை மீண்டும் நட்டு பராமரிக்க அனைவரும் முன்வருவதில்லை. மரக்கன்றுகள் நடுவதை மட்டுமே நினைக்கும் மக்கள் அதை பாராமரிக்க முன்வருவதில்லை. இது வரையில் நாம் நட்ட மரக்கன்றுகள் வளர்ந்திருந்தால் கால்வைக்கவே இடம் இருக்காது என்று திருச்சி மாவட்ட முன்னாள் கலெக்டர் ஒருவர் வருத்தத்துடன் கூறினார்.

நடிகர் விவேக் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். ஈஷா பசுமை கரங்கள் அமைப்பும் தன் பங்கிற்கு பசுமை தமிழகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் 7 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் சுமார் ஒரு கோடி மரங்கள் வளர்க்க இயலவில்லை என்பது வேதனைக்குறிய விஷயம்.

மரங்களை நட்டு பராமரித்தால் தான் மழை வரும். அதற்கு தேவையானதை வேளாண் துறை, சுற்றுச்சூழல், வனத் துறை இணைந்து திட்டங்களை உருவாக்க வேண்டும். அந்த திட்டத்தை மக்கள் ஒத்துழைப்புடன் வளர்க்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் மறைந்த "மரம் தங்கசாமி" என்ற தனி நபரால் ஒரு வனத்தையே உருவாக்க முடிந்தபோது, அனைவரும் ஒன்று சேர்ந்தால் நிச்சயம் வெற்றி காண முடியும்.

அடுத்த உலகப் போர் தண்ணீருக்காக தான் வரும் என்று ஒரு அறிஞன் கூறியது உண்மை என்ற நிலை விரைவில் வரும். அப்போது அனைவரும் கண்ணீர் சிந்தாமல் இருக்க இப்போதே மரங்களை பாதுகாப்பதும், தண்ணீரை சேமிப்பதும் அவசியம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close