உள்துறை அமைச்சர் மீது அவ்வளவு பயமா சிதம்பரம் சார்?

  பாரதி பித்தன்   | Last Modified : 02 Jul, 2019 07:03 pm
special-article-about-chidambaram-speech-on-neet

ஒரு தவறு, தவறா இல்லையா என்பதை முடிவு செய்ய, அதன் சூழ்நிலை, காலம் உட்பட பல விஷயங்களை பார்க்க வேண்டும். அடுத்தவர் மனைவியை நினைப்பது தவறு. ஆனால் விவாகரத்து ஆன பின் அந்த பெண்ணை மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். ஒருவரை கொலை செய்வது தவறு. அதுவே தற்காப்புக்கு செய்யும் போது தவறு இல்லை. 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து செல்வது தவறு. அவரை பிடிக்க 110 கிலோ மீட்டர் வேகத்தில் காவல்துறை விரைவது தவறு இல்லை. 

இது போல் எது தவறு எது தவறு இல்லை என்பதை நன்கு உணர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம். நீட் தேர்வு பற்றி அவர் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் இதனை உண்மை என்று காட்டும்.

அரசு, கல்வியாளர்கள், மக்கள் என்று அனைத்து தரப்பினரும் மாற்று மருத்துவத்தை வளர்ச்சி பெறாமல் முடக்கிவிட்டார்கள். இதில் மக்கள் பங்கு அதிகம். அரசு மருத்துவமனைகளில் அலோபதி சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட நம்நாட்டு மருத்துவமுறைகளில் சிகிச்சை பெற காத்திருக்கும் நோயாளகள் எண்ணிக்கை ஆகியவற்றை ஒப்பிடும் போது மக்கள் இந்த மருத்துவ முறைகளுக்கு எவ்வளவு வரவேற்பு அளிக்கிறார்கள் என்பது தெரியும்.

இந்தியாவில் மருத்துவம் இலவசமாகவும், அதை செய்பவர்கள் கடவுளாகவும் பார்க்கப்பட்டனர். அது இன்று உச்சகட்ட வியாபாரமாக மாறிவிட்டது. நேர்மை என்பது துளி கூட இல்லை. அறிமுக டாக்டர், மெடிக்கலில் வேலைக்கு சேர்கிறார். அனுபவ டாக்டர் மெடிக்கல் வைக்கிறார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, எம்பிபிஎஸ் டாக்டர் மட்டும் உடல் முழுவதும் சிகிச்சையளித்தார். இப்போதோ மாட்டு மடிக்கு ஒரு கையெழுத்தா என்று வடிவேல் கேட்பது போல விரலுக்கு ஒரு டாக்டர், விரல் நகத்துக்கு ஒரு டாக்டர் என்று சிறப்பு டாக்டர்கள் பட்டியல் நீண்டு விட்டது.

இப்படிப்பட்ட மருத்துவ வர்த்தக கடலில் மூழ்கி, சொத்து எடுக்க ஏதோ ஒரு வகையில் தகுதியை அறிய வேண்டும் என்று மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு நீட் தேர்வை அறிமுகம் செய்தது. பாஜகவின் கெட்ட நேரம் கோர்ட் உத்தரவின் கட்டாயத்தால் அதனை அமல்படுத்தியது. 

அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே, தமிழகம் அதை எதிர்த்தது. படிக்கும் மாணவர்களை விட, மருத்துவக் கல்லுாரிகள் நடத்தும் அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்தனர். பல கடவுள்களை கும்பிடும் இந்துக்கள் அல்லா, ஏசு ஆகியோரையும் ஏற்றது போல ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியரிடம் டியுஷன் போகும் மாணவர்கள், நீட் தேர்வுக்கும் ஒரு டியுஷன் வைக்க வேண்டும் என்பதை எளிதில் எடுத்துக் கொண்டார்கள். 

ஆனால் ஒரு கடவுள் வழிபாடு கொண்ட மாற்று மதத்தவர்கள் போல, ஒரே ஒரு மருத்துவக் கல்லுாரி வைத்துள்ள அரசியல்வாதிகளுக்கு அது நிரம்பி பணம் கொட்டினால் தான் எத்தனை சி கொடுத்து வேண்டுமானாலும் அரசியலில் ஜொலிக்க முடியும். இதற்காக அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷம் இடுகிறார்கள்.

தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பதை போல அரசியல்வாதிகளுக்கு ஒரு பிரச்னை என்றதும், 2013ம்  ஆண்டு அப்போதைய மத்திய அரசு, தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தது. அடுத்த ஆண்டு நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட போது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இதில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் ஆஜரானது, முன்னாள் நிதி அமைச்சரின் காதல் மனைவி நளினி சிதம்பரம். அப்போதே சிதம்பரம் தமிழக மக்களை, குறிப்பாக ஏழை மாணவர்களை நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வற்புறுத்தி இருந்தால், மனைவி என்பதற்காக அல்லது சிதம்பரம் மீது அந்த அம்மையாருக்கு இருக்கும் காதலுக்காகவாது, அந்த வழக்கில் இருந்து விலகி இருப்பார்கள். 

திறமை மிகுந்த அவர், வழக்கில் இருந்து விலகி இருந்தால், அது தோல்வியை சந்தித்து இருக்கும். அல்லது கவுரவம் சிவாஜியைப் போல மனைவி நளினியை எதிர்த்து, நீதிமன்றத்தில் சிதம்பரமே களம் இறங்கி வாதாடி இருக்கலாம்.

அது எதையும் சிதம்பரம் செய்யவில்லை. அப்போது அமைதிகாத்த அவர், இப்போது வரை நீட் தேர்வுக்கு எதிராக பொதுவெளியில் பேசுகிறார். சமீபத்தில் கூட நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு பலன் அளிக்காது என்று கருத்து சொல்லி இருக்கிறார் சிதம்பரம். 

கடந்த முறை இது போல அவர் கருத்து சொன்ன போது, நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அது தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் சகோதரர் சிதம்பரம் அவர்களே நீட் தேர்வு பற்றி மட்டும் நீங்கள் பேசாதீர்கள் என்று கண்டனம் தெரிவித்து இருந்தார். 

ஆனால் இந்த முறை சிதம்பரத்தின் கருத்துக்கு பதில் சொல்ல கூட ஆள் இல்லை. இனியாவது சிதம்பரம் பொதுவெளியில் நீட் பற்றி கருத்து சொல்வதை விட்டு விட்டு, வீட்டில் பேசலாம். விபரீதம் அங்கே இருந்து தான் தொடங்கியது. தன் வீட்டின் உள்துறை அமைச்சர் மீது பயம் கொண்ட முன்னாள் நிதி அமைச்சருக்கு மாணவர்களின் பணிவான வேண்டுகோள் இது தான்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close