மக்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகிறார்களோ, அதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு உதவி செய்ய முடியும். இந்தியாவில், ஜாதி அடிப்படையில் தான் பிரிவினை நடந்தது. விவசாயம், அது சார்ந்த தொழில்களில் மக்கள் ஈடுபட்டிருந்த போது, அவர் அவர் பணிகளை சரியாக செய்தார்கள். இதனால் சமூகம் அமைதியாக பல நுாற்றாண்டுகளாக இருந்தது.
அதன் பின்னர் ஒரு சில ஜாதிகள், தங்கள் குலத்தொழிலை விட்டு விலக தொடங்கினர். அதற்கு ஆட்சியாளர்களும் உதவி செய்தனர். குலத்தொழிலை விட்டால் கூட, அவர்களுக்கு எந்த விதமான பிரச்னையும் இல்லை. ஆனால் தங்கள் பாரம்பரிய தொழிலை அவர்கள் விட்டால் கூட, சமுதாயத்தில் தாங்கள் பெற்ற மரியாதை தொடர வேண்டும் என்று எண்ணிய போதுதான் சிக்கல் எழுந்தது.
அதே போல சமூக, பொருளாதார நிலையில் தாழ்ந்து கிடந்தவர்கள் தட்டு தடுமாறி உயர்நிலையை அடைந்தால் கூட, அதை சமுதாயம் ஏற்காத போது அது கோபமாக வெளிப்பட்டது. இதற்கு சிலர் துாபம் போடவே சமுதாய அமைதி கெட்டு குட்டிச்சுவராக மாறிவிட்டது.
ரயில்கள் தடம் மாறுவது போல, சமுதாய மாற்றம் இயல்பாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால் தான், காந்தி அரிஜன சேவையை வலியுறுத்தினார். உயர் ஜாதியினர் மனம் உவந்து காந்தியின் அறைகூவலுக்கு கட்டுப்பட்டு குடிசைப்பகுதிகளில் சென்று தொண்டு செய்தனர்.
சேவையாற்றியவர்கள் மதிக்க கூடியவர்கள் என்றாலும் சொன்னவர் காந்தி என்பது மனதில் நினைக்க வேண்டியது. அது போன்ற தலைவர்கள் இன்று இல்லாத காரணத்தால் தான், சமூக நல்லிணக்கம் என்பது கட்டாயத்தின் பேரில் இருப்பதாக ஒரு தோற்றம் இன்றைக்கு உலா வருகிறது.
அடித்தட்டு மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் சமூகத்தால் மதிக்கப்படுவார்கள் என இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதை அமல்படுத்தும் போதே, 10 ஆண்டுகள் இந்த இட ஒதுக்கீடு இருக்கும் என்று தான் கூறப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு, 10 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டு கொண்டே உள்ளது.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட அதிகமாக, 69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டோருக்கு, 30 சதவீதம் ஒதுக்கீடும். அதில் முஸ்லீம் பிற்படுத்தப்பட்டோருக்கு 3.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்படுத்தபவர்கள், சீர்மரபினருக்கு 20 சதவீதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவீதம், அருந்ததியினரருக்கு 3 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம் என 69 சதவீதம் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது.
மத்தியஅரசு வழங்கும் இட ஒதுக்கீடு இதில் இருந்து மாறுபட்டு பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் என்ற வகையில் மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த இட ஒதுக்கீடு தொடங்கப்பட்ட காலத்தில், அதன் தேவையை பூர்த்தி செய்தது. இதில், நகர்புறத்தில் வசதிப்பவர்கள், நகர்புறத்தில் வசிப்பவர்களை நாடியிருப்பவர்களும் இதன் பலனை அனுபவித்தார்கள். 1947ம் ஆண்டுக்கு பின்னர் என்றால், ஒரு சில குடும்பங்களில் 3 தலைமுறையாக சலுகை பெற்று வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டு விட்டனர். அதே நேரத்தில் இன்றும் கூட கிராமப்புறங்களில் வக்கற்று வழியற்று பல குடும்பங்கள் உள்ளன.
முதல் தலைமுறை பட்டதாரிகள் என்று தற்போதும் குறிப்பிடப்படுகிறது. காமராஜர் தனக்குரிய மருத்துவக்கல்லுாரி இடங்களை கைநாட்டு போட்டும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு வழங்கியதாக கூறுவார்கள். இப்போது அவர்களுக்கு கையெழுத்து போடத் தெரிந்து இருக்கிறதே தவிர்த்து அறிவில் அப்படியேதான் உள்ளனர்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் 143, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 41 ஜாதிகள், 71 சீர் மரபினர் ஜாதியினர், 2001 கணக்குப்படி 76 வகையான பட்டியல் இனத்தவர்கள் உள்ளனர். இதில் நுணுக்கமாக ஆய்வு செய்தால் ஒரு சில ஜாதிகள் மட்டுமே தங்களுக்கான சலுகைகளை பல தலைமுறையாக அனுபவித்து வருகிறார்கள். மற்றவர்கள் இன்றும் கூட கண்ணை கட்டி காட்டில் விட்ட கதைதான்.
மற்றவர்களை எப்போது எப்படி முன்னேற்றப் போகிறோம் என்பது தான் அனைவரின் முன் நிற்கும் கேள்வி. உதாரணமாக தாழ்த்தப்பட்டவர் பட்டியலில் இருந்தாலும், அருந்தியர் முன்னேறவில்லை என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினார். அதைப் போல மற்ற முன்னேறாத ஜாதியினரை கண்டு கொள்ளவே இல்லை.
இட ஒதுக்கீடு பெறுபவர்கள் நிலையே இப்படி இருக்கும் போது, பிறப்பால் கடந்த நுாற்றாண்டில் உயர்ஜாதி என்று அறியப்பட்டதில் பிறந்த ஒரே காரணத்திற்காக, எவ்விதமான முன்னேற்றமும் பெற முடியாமல் ஐயர், ஐயங்கார், ராயர், முதலியார், நகரத்தார் என்று பல இனங்கள் முன்னேற வழியில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 31 சதவீத பொதுப்போட்டியில் தான் இடம் பெற வேண்டும். இந்த பொதுப் போட்டியில், ஏற்கனவே இட ஒதுக்கீடு பெறுபவர்களும் இடம் பெறுவார்கள். அதனால், முற்பட்டவகுப்பினர் என்று அழைக்கப்படுபவர்களின் முன்னேற்றம் இன்னமும் முட்டுக்கட்டையாவே உள்ளது.
இதனால் தான், மத்திய அரசு வருமான அடிப்படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தது. மற்ற மாநிலங்களில் இட ஒதுக்கீடு சதவீதம் குறைவாக இருப்பால் அதனை அமல்படுத்துவது எளிது. ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீதம் இருப்பதால், மேலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடா, அல்லது 69 சதவீதத்தில் இது உள் ஒதுக்கீடா என்ற கேள்வி எழுகிறது.
அதனால் தமிழக அரசு உள்ளிட்ட அனைவரும், வருமானத்திதை அடிப்படையாக கொண்ட இடஒதுக்கீட்டை ஆதரிக்க வில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படும்; வருமானம் அடிப்படையிலான இட ஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என சட்டசபையிலேயே தெரிவித்துள்ளார்.
ஒட்டுகளை மட்டும் எண்ணத்தில் வைத்திருக்கும் அரசியல் கட்சிகள் வருமான அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை ஏற்காது. அது சமூகநீதியை அழித்து விடும் என்று கூச்சல் இடுவார்கள். இவர்களின் சமூக நீதி யாருக்கும் புரியாது.
இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு அவர்களே முன் வந்து இட ஒதுக்கீட்டை முடிவு கட்டுவதாகத்தான் இருக்கும். புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தேவேந்திரகுலத்தினரை பட்டியல் இனத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். அதைப் போலவே ஒன்று அல்லது 2 தலைமுறைகள் சலுகை பெற்றவர்கள் எங்கள் பிள்ளைகளுக்கு சலுவை தேவை இல்லை என்று விட்டுக் கொடுக்க வேண்டும்.
இவர்கள் அவ்வாறு செய்யும் போது அதே ஜாதியில் இடம் பெற்ற வசதியற்ற மற்றவர்கள் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த அளவிற்கு பொதுப் போட்டியில் சாதிக்க முடியாத குடும்பங்கள் எங்களுக்கு சலுகை வேண்டும் என்று மீண்டும் கோரினால் அவர்களுக்கு சலுகை தரலாம். தற்போது ரேஷன் கடைகளில் அரிசி கார்டு, சீனிகார்டு, பொருட்கள் வாங்காத கார்டு என்று 3 கார்டுகளை பாராமறிப்பது போல, ஜாதி சான்றிழ்களையும் பிரித்து கொடுக்கலாம்.
ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் போதே சலுவை வேண்டும், ஒரு தலைமுறைக்கு வேண்டாம் என்ற குறிப்புடன் வழங்கலாம். இந்த முடிவை அரசியல்வாதிகள் எதிர்காமல் விட்டால், பொதுமக்கள் எளிதில் ஏற்பார்கள். அதற்கு காஸ் மானியம் வேண்டாம் என்று கைவிட்ட மக்களே சாட்சி.
இப்படிப்பட்ட மக்கள் இட ஒதுக்கீட்டையும் கைவிட்டு மற்றவர்கள் முன்னேற வழிவகை செய்வார்கள். இவ்வாறு இன்றொரு 50 ஆண்டுகள் தொடர்ந்தால், அதன் பின்னர் இடஒதுக்கீட்டின் தேவையே இருக்காது. இதற்கு மக்கள் இதயங்களில் தற்போது இடம் ஒதுக்கி, இதை செய்ல்படுத்த முன் வர வேண்டும்.
newstm.in