நதி நீர் இணைப்பு அவசியமா, ஆபத்தா? - பகுதி 7

  ஆனந்தன் அமிர்தன்   | Last Modified : 03 Jul, 2019 05:47 pm
special-article-about-river-linking-project

பாரத தேசத்தில் ஓர் ஆச்சர்யமான முரண் நடந்து கொண்டிருக்கிறது. கம்யூனிச சித்தாந்தத்தை நிறுவ பிடிவாதமாக தேசிய ஜனநாயக கூட்டணி முயன்று கொண்டிருக்கிறது. கம்யூனிச சித்தாந்தத்தை செயல்படுத்தக் கூடாது என்று இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது. இது ஏதோ தலைமையில் மட்டுமல்ல, இந்த முரண் சராசரி மக்களிடமும் இருக்கிறது.

 மெக்காலே என்ற ஆங்கிலேயர் புகுத்திய கல்வி வேண்டாம். மீண்டும் குருகுலக் கல்வியை மீட்டெடுப்போம். ஆனால், “ஆர்தர் காட்டன்” என்ற ஆங்கிலேயர் கொண்டு வர நினைத்த, தேசிய நதி நீர் இணைப்பினை செயல்படுத்துவோம். பாரத மன்னர்கள் கையாண்ட நீர் மேலாண்மை வேண்டாம்.

இருப்பவர்களிடமிருந்து பிடுங்கியாவது, இல்லாதவர்களிடம் கொடுக்க வேண்டும் என்பதானது கம்யூனிசம். வலுத்தது வாழும் என்பது முதலாளித்துவம். அதிகமாக நீரோடுவதால் அதைப் பிரித்து வறண்ட பகுதிக்கு அனுப்ப நினைக்கிறது முதலாளித்துவம். இருக்கும் நீரினைப் பகுத்துத் தரக் கூடாது என்று போராடுகிறது கம்யூனிசம். சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

பாரதத்தின் ஆன்மாவை மீட்டெடுப்போம் என்று முழங்கி விட்டு, பாரததேசத்தின் புவியியலை மாற்றியமைப்பது எந்த வகையான சித்தாந்த முன்னெடுப்பு என்று தெரியவில்லை. இளைத்தவன் எழவேண்டும் என்பதற்காகக் கொண்டு வந்த இட ஒதுக்கீட்டினை, நிரந்தர உரிமையாக்கி வைத்திருக்கிறோமே, அதற்குச் சற்றும் சளைத்தது அல்ல இந்த தேசிய நதி நீர் இணைப்பு என்பது. தற்காலிக நிவாரணத்தையே நிரந்தரத் தீர்வாகக் கொண்டிருப்பது முற்றிலும் முரண். 

இயற்கையைக் காப்பாற்றுங்கள் என்று ஓலமிடுவது அல்ல என் நோக்கம். அடுத்து வரும் சந்ததிகளை அழித்து விடக் கூடிய மிகப் பெரிய தவறான திட்டம் இது.  எட்டு வழிச் சாலையோ, ஹைட்ரோ கார்பன் தொழிற்சாலையோ இயற்கையை பாதிக்காது. அது சின்னஞ்சிறு சிராய்ப்புகள் தான். 

அதாவது, இதுவரை நாம் குடியிருப்புகளுக்காக அழித்த விவசாய நிலங்களில், பத்து சதவீதம் கூட வராது எட்டுவழிச்சாலையும் பத்து வழிச் சாலையும். அதே போல், நாம் போர் போட்டு உறிந்த கணக்கினில் இரண்டு சதவீதம் கூட வராது, ஹைட்ரோகார்பனோ கச்சா எண்ணெய்க் கிணறுகளால் ஏற்படும் பாதிப்பு. இதெல்லாம் அதிகபட்சம் அந்தந்த பகுதியில் மிகச் சின்னஞ்சிறிய பாதிப்பினை உருவாக்கவல்லது. 

“வங்கத்தில் ஓடிவரும் நீர் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்னு” அதீத ஆசைப்பட்ட பாரதி கூட, விந்தியமலையைத் தாண்டி நீரினைக் கொண்டு வருவோம்னு பாடவில்லை. ஆனால், நாம் கங்கையை, மகாநதியில் கலந்து, மகாநதியை கோதாவரியில் கலந்து, அதை கிருஷ்ணாவில் கலந்து, அதை இழுத்துட்டு வந்து காவிரியிலும் காவிரியை வைகையிலும் கலந்து, பார்… இயற்கையே பார்….!!! மனிதகுலத்தின் மகத்துவத்தைப் பார். நான் நினைத்தால் உன்னை உன் வடிவத்திலிருந்து, உன் நோக்கத்திலிருந்து விலக்கி, வீழ்த்த முடியும் பார் என்று காட்டிக் கொள்வதற்கு உதவும்.

ஒற்றை மனித உயிர் போனால் அதன் ஆன்மா சாந்தியடைய திவசமும், தர்ப்பணமும் செய்கிற நாம் தான், புதிய வீடு கட்டி குடி புகுமுன், அங்கே வாழ்ந்த உயிரினங்களின் வாழ்வினைச் சிதைத்ததற்கு ஹோமம் செய்து பாபவிமோசனம் தேடும் நாம் தான், கோடான கோடி நதி வாழ் உயிரினங்களை, ஒட்டு மொத்தமாகக் கொல்வதற்கு, இத்தனை பெரிய திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தது மட்டுமன்றி, அதைப் பெருமையாகச் சொல்லி மார்தட்டிக் கொள்கிறோம்.

ஒடிஷாவில், உ.பி.,யில், பீகாரில் வசிப்பவன், தமிழகத்திற்குப் பிழைக்க வந்தால் என் வருமானம் போயிடும், கலாச்சாரம் சிதைந்து விடும் என்று கொடி தூக்கும் அதே ஆட்கள், அங்கேயிருந்து வரும் நீரினை மட்டும் ஆவென்று வாயைத் திறந்து கொண்டு வரவேற்கிறார்கள்.

ஒன்றினை மட்டும் மிகவும் கவனமாகக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை அணுக வேண்டும். கோடான கோடி ஆண்டுகளாக, இயற்கை தன் விதை பரப்புதலை மிக நேர்த்தியாகச் செய்து வருகிறது. கொஞ்சம் காற்றின் மூலம், கொஞ்சம் விலங்குகள் மூலம் அதிகமாக நதிகள் மூலம் விதைகளைப் பரப்பி வருகிறது. 

குறிப்பாக வேறெந்த ஊடகங்களையும் விட நதிகள் ஊடாகவே, விதைகளை வெகு தொலைவிற்கு பரப்பி வருகிறது. அதைத் தான், மடை மாற்றி விதைகளை ஒவ்வாத மண்ணிற்குப் பரப்பி, அழிக்கப் பார்க்கிறோம். ஒரு வகையில் தாவர இனங்களும், நீர் வாழ் சிற்றுயிரினம் அழிவதுமாக இருப்பினும், நமக்குக் கவலையில்லை என்று நினைக்கலாம். 

ஆனால், சில தாவர இனங்கள் புதிய மண்ணில், புதிய சீதோஷண நிலையில் அதீதமாக வளரத் தொடங்கினால் செத்தோம்… அந்தப் பகுதியில் விவசாயத்திற்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும். அப்படியாக பாரதத்திற்குள் புகுந்த களைச் செடிகளை அழிக்க, ஆண்டு தோறும் எத்தனை கோடிகள் செலவு செய்து வருகிறோம் தெரியுமா? 
அடுத்த பகுதியில் விளக்கமாகப் பார்ப்போம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close