காளான் தலைவர்களும்... வழக்குகளும்...

  பாரதி பித்தன்   | Last Modified : 14 Jul, 2019 09:04 pm
court-cases-against-leaders-and-activists

திராவிட முன்னேற்ற கழகத்தின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது, திராவிட நாடு முழக்கம். முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி மற்றும் நெடுஞ்செழியன், ஈவிகே சம்பத், அவ்வளவு ஏன் கணுகால் வரை வேட்டி கட்டி, வீதி கூட்டும் அளவிற்கு துண்டு போட்ட அனைத்து தலைவர்களும் இந்த முழக்கத்திற்கு வலுவூட்டினர். 

ஆனால், பிரிவினை பேசும் எந்தக் கட்சியும் தேர்தலில் நிற்க முடியாது என்று மத்திய அரசு  சட்டம் இயற்றியதும், கனத்த இதயத்தோடு அண்ணாதுரை கை கழுவியது இந்த கோஷத்தை தான். இந்த சட்டம் காரணமாகத்தான் இன்றளவும், ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பல மாநில மாநிலங்களில் பிரிவினை வாத கட்சிகள் போட்டியிட முடிவதில்லை.

கலர் பெட்டியை பார்த்து ஓட்டுப் போட்ட காலத்திலேயே இதுதான் நிலை. தற்போது மதிமுக, நாம் தமிழர் கட்சி அப்புறம் அ முதல் ஃ வரை பெயர் கொண்ட தமிழ் தேசியம் பேசுவர்கள் எந்த அளவிற்கு தங்கள் கொள்கையில் உறுதியாக இருப்பார்கள் என்பதும் கேள்விக்கு. அதிலும் வைகோ, சீமான் ஆகியோர் தேச பிரிவினையை தூண்டும் நோக்கில் பேசுவதையே தங்களின் அரசியல் வெற்றிக்கு உரிய பாதையாக தேர்வு செய்திருக்கிறார்கள்.

நெடுமாறன், மணியரசன் போன்றவர்கள் தேர்தல் பாதையில் இருந்து விலகிவிட்டதால், அவர்கள் பேசுவதோ, செயல்பாடுகளோ எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தே செய்கிறார்கள்.  ஆனால் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்ற தலைவர்கள், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றிக்கு பிறகு உருவான தலைவர்கள் ஏதோ நாட்டை காப்பாற்ற வந்த மெய்ப்பர்கள் போல பேசுகிறார்கள். இவர்கள் கட்சிகளில் தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் மட்டுமே அடையாளம் காட்டப்படுகிறார்கள். இதனால் இவர்களை முடக்கிவிட்டால் போதும்... கட்சி காணாமல் போய்விடும்.

இவர்கள் பேசுவதற்கு வழக்கு போடுவார்கள்; இல்லை ஏதோ சில நாட்கள் சிறையில் வைப்பார்கள்... பின்னர் ஜாமீனில் வெளியே வந்துவிடலாம் என்பது தான் காரணம். ஆனால் சில நேரங்களில் இது தவறாக போய்விடுகிறது. முகிலன் ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஓராண்டு சிறையில் இருந்தார். இதே போலவும் நடக்கலாம்.
இந்த களான் தலைவர்கள் மிகவும் பயந்தவர்கள் என்பதற்கு, இவர்களை போன்றவர்கள் மீது வழக்கு போடும் போதோ, அல்லது அவர்கள் கைது செய்யப்படும் போதோ இவர்கள் இடும் கூச்சலே சாட்சியாக அமைந்துவிடுகிறது.

ஜனநாயகத்தில் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் இல்லையா, மக்களுக்காக போராடுபவர்களை இப்படியா நடத்துவது என்று இவர்கள் இடும் கூச்சலே,நாளைக்கு நமக்கு வந்தால் யாராவது கேட்டார்கள், அதற்கு இப்போதே நாமும் கூச்சல் இடலாம் என்ற நினைப்பு தான் காரணம்.

ஆனால் ஓரு விஷயத்தை இவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு பல ஆண்டுகள் கழித்தே தண்டனையை பெற்றுத் தந்தது. இத்தனைக்கும் அவர் முதல்வர் பதவியில் இருந்தபோது கூட நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்திப் போட முடிந்ததே தவிர்த்து தீர்ப்பே அளிக்காமல் செய்ய முடியவில்லை.
வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவர் எம்.பி. பதவியை பெறுவதில் சிக்கல் ஏற்படுத்தியது. சரவணபவன் ராஜகோபால் வழக்கும் அப்படித்தான். இத்தனை ஆண்டுகள் கழித்து உண்மையோ, பொய்யோ அவர் உடல்நலம் குன்றிய நிலையில் கூட சிறையில் சரண் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது போலதான் காளான் தலைவர்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளும். இன்றைக்கு அது மூட்டை கட்டிப் போடப்படலாம். ஆனால், வாபஸ் வாங்காத வரை அதனால் எப்போதும் சிக்கல்தான். அதன் தீர்ப்பு வரும்போது அவர்கள் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். இதையெல்லாம் நன்கு உணர்ந்து கொண்டு பேசுவது அவர்களுக்கு நல்லது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் விடுதலைப் புலிகளின் கழுத்தில் தொங்கும் சயனைடு குப்பிகளுக்கு இந்த வழக்குகள் சமம். இதை காளான் தலைவர்கள் புரிந்து கொள்வது நல்லது.

இந்த பதிவில் காளான் தலைவர்கள் என்று குறிப்பிடுவதற்கு காரணம், பாரம்பரியம் இல்லாமல்  ஜெயலலிதா, கருணாநிதி மரணத்திற்கு பிறகு இவர்கள் உதயமாகி இருப்பதால் தான். இது காலத்தை குறிப்பிடவே அல்லாமல், அவர்களை இழிவுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல.

இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துக்களே...

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close