இதற்காகத்தான் இத்தனை பெரிய ஆர்ப்பாட்டமா?

  பாரதி பித்தன்   | Last Modified : 11 Aug, 2019 03:47 pm
sonia-gandhi-appointed-as-inc-president

எம்.ஜி.ஆர் நடிகராக இருந்த போதே நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் தன் முதுமை காலத்தில் தன் சொத்துக்களை அறக்கட்டளைக்கு மாற்றினார். அடடா இத்தனை பெரிய மனதா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. இதற்காக, அவரின் சொந்த ஊரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்கள் சார்பில் அந்த சொத்துக்களின் ஆவணங்ளை பெற்று அறக்கட்டளை தலைவரான அந்த முன்னாள் அமைச்சர் மனைவியிடம் ஒப்படைத்தார்.  இதுதான் அமைச்சர் பொதுமக்களுக்கு தன் சொத்துக்களை அர்பணித்த விதம். இதற்கு சற்றும் குறையாத விதத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தேர்வும் நடந்து முடிந்துள்ளது. 

சீதாராம் கேசரியை ஒரு நாளில் விரட்டிவிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவரான சோனியா. ஆனால் அவர் அதிர்ஷ்டம் பிரதமர் பதவிக்கு அமர சட்டம் இடம் கொடுக்கவில்லை. மன்மோகன் சிங்கை ஆட்சியில் அமர்த்தி தான் கட்சித் தலைவராக இருந்தால் கூட கூட்டணி கட்சிகளின் ஊழல்களை ஒடுக்கும் வலிமை இல்லாமல் இருந்தார். கட்சியின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. இந்த காலகட்டத்தில் அவர் உடல் நிலையும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. வேறு வழியில்லாமல் ராகுல் காங்கிரஸ் கட்சித் தலைவரானார். காங்கிரஸ் கட்சியில் ராகுல் காலம், ராகு காலமாக மாறிவிட்டதால், பாஜக அந்த கட்சியே நினைக்காத அளவிற்கு வெற்றியை வாரிக் குவித்தது. பாஜக மாநில அளவில் சிக்கலை சந்தித்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது ராகுலின் வெற்றியாக அடையாளம் காட்டப்பட்டது. 

ஆனால், ராகுலை அந்த கட்சியில் இருந்த மூத்த தலைவர்களே மதிக்கவில்லை. சிதம்பரம், கமல்நாத், அசோக் கெலாட் போன்ற முக்கிய தலைவர்கள் ராகுலை கட்டுப்படுத்தினார்கள். ஷீலா தீட்சித்தை மீறி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க முடியவில்லை.

விளைவு டில்லியில் தோல்வி, தமிழகத்தில் ஸ்டாலின் பிடிவாதத்தால் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. மற்ற மாநிலங்களில் சரியாக கூட்டணி அமைக்க முடியவில்லை. விளைவு மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியாததுடன், எதிர்கட்சி அந்தஸ்தையே பெற முடியவில்லை. 
இந்த காலகட்டத்தில் கட்சித் தலைவர் களம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், ராகுல் கட்சியை கைகழுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டார். அத்துடன் இனி நேரு குடும்பத்தை சேர்ந்த யாரும் தலைமைப் பதவிக்கு வர வேண்டாம், புதியவர்களை தேர்வு செய்யுங்கள் என்று சோனியா, பிரியங்கா வருகைக்கும் செக் வைத்து கதவை இழுத்து மூடிவிட்டார். 
அதன் பின்னரும் சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. 

இதற்கு இடையில் காங்கிரஸ் கட்சியில் யார் தலைவர் என்ற விவாதம் நாட்டில் கொடி கட்டி பறந்தது. மல்லிகார்ஜூனா கார்கே, முகுல் வாஸ்னிக், அசோக் கெலாட், மோதிலால் வோரா போன்ற மூத்த தலைவர்கள், ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் போன்ற இளம் தலைவர்கள் பெயர்களும் அடிப்பட்டன. இவர்களை விட பஞ்சாப் தேர்தல் நீங்கள் தலையிடவே வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று ராகுலை விலக்கி வெற்றிக் கனிபறித்த அமரிந்தர் சிங் தலைவர் பதவிக்கு சரியாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டது.

இவர்களில் ஒருவர் வந்தால் நிச்சயம் பாஜகவின் வளர்ச்சிக்கு சிறிது வேகத் தடையாக இருக்கும். அதிலும் ஜோதிராதிய சிந்தியா, சச்சின் பைலட், அமரிந்தர் சிங் ஆகியோரில் ஒருவர் என்றால் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அது பிரதிபலிக்கும். 

ஆனால் சோனியா குடும்பத்திற்கு அது எந்தவித்திலும் நல்லதாக அமையாது. நரசிம்ம ராவ் பிரதமராகவும், கட்சித் தலைவராகவும் இருந்த காலகட்டத்தில் சோனியா குடும்பத்தை அடக்கியே வைத்திருந்தார். அவர்கள் தலை நிமிரும் போதெல்லாம் போர்பாஸ் பீரங்கி ஊழலை இழுத்துவிட்டே அவர்களை அடக்கினார். சீதாராம் கேசரி கூட சோனியா குடும்பத்தை விட்டு விலகி நெடுந்துாரம் போய்விட்டார். அவரின் தன்னிச்சையான போக்கு பிடிக்காததால் தான் சோனியாவே தலைவர் பதவிக்கு வந்து அமர்ந்தார். 

இப்போது காங்கிரஸ் கட்சி கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. காங்கிரஸ் தலைவர்களே அக்கட்சிக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவு குரல் எழுப்புகிறார்கள். மேல்சபையில் மத்திய அரசின் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று ராகுல் உத்தரவிட்டார். ஆனால், மேல்சபை கொறடா புவனேஸ்வர் ஏற்கவில்லை. தன் பதவியையே ராஜினாமா செய்து விட்டார். காங்கிரஸ் மக்களவை  தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு பிரச்னையா என உலறி கொட்டி கட்சியின் முகத்தில் கரியை பூசினார். 

இவர்கள் தவிர ஜனார்ந்தன் திரிவேதி, ஜோதிர்ராவ் சிந்தியா, தீபேந்தர் கூடா, அனில் சாஸ்த்தி, சோனியா வெற்றி பெற்ற ரேபேரலி தொகுதிக்குட்பட்ட சதார் சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ அதிதி சிங் ஆகியோரும் காஷ்மீர் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாகவே இருந்தனர். அவர்களுக்கு எதிராக சோனியா, ராகுல் கண் அசைவைக் கூட காட்ட முடியவில்லை. 

இத்தகைய கட்டுப்பாடு கொண்ட நிலையில் தான் காங்கிரஸ் காரிய கட்டி கூட்டம் நடந்தது. இதில், தாங்கள் இருந்தால் கூட்டம் சரியான தலைவரை தேர்வு செய்யாது என்று எண்ணி சோனியா, ராகுல் வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் யார் தலைவர் என்பது மர்மமான முறையில் விவாதம் நடந்தது. கடைசியில் இனி நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தலைவராக தேர்வு செய்ய கூடாது என்ற ராகுலின் விருப்பம் காற்றில் பறக்கவிடப்பட்டு சோனியா மீண்டும் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த தேர்வை நினைக்கும் போது கிராமங்களில் சொல்லப்படும் கதை தான் நினைவுக்கு வருகிறது. வீட்டோடு மாப்பிள்ளையாகிவிட்ட ஒருவன் அடிக்கடி கோபித்துக் கொண்டு 'சம்சாரம் அது மின்சாரம்' விசு போல கோயிலில் சென்று அமர்ந்து விடுவானாம். வீ்ட்டில் இருந்து யாராவது போய் சமாதானம் செய்து அழைத்து வருகிறார்களாம். அவர்கள் கைபிடித்து இழுத்தபடி கெஞ்ச இவனே என்னை விடு அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று தெருவே அதிரும் படி கூச்சல் போட்டுக் கொண்டே வீடு திரும்புவானாம். 

அதே போல ஒரு நாள் காலை சண்டை நம்மவனும் கோபித்துக் கொண்டு கோயிலில் சென்று அமர்ந்துவிட்டானாம். அன்று யாரும் வந்து அவனை சமாதானம் செய்ய வில்லை. காலை மதியமாக மாறிவிட்டது. ஆனாலும் யாரும் வர வில்லை. மாலையாகிவிட்டது அப்போதும் யாரும் இல்லை. இவனுக்கு அதிர்ச்சி நம்மை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்களே அவ்வளவுதான் நம் கதி என்று வருந்தி ரொம்ப ரோசப்பட்டிருக்க கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தான். அப்போது மாமியார் வீட்டு எருமை மாடு மேச்சலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்ப சென்று கொண்டு இருந்தது. இவன் ஓடிப் போய் மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு என்னை விடு நான் அந்த வீட்டிற்கு வரமாட்டேன், என்னை மதிக்காதவர்கள் வீ்ட்டில் நான் இருக்கவே மாட்டானே என்று கத்திக்  கொண்டே வீ்ட்டிற்கு சென்று சேர்ந்தானாம்.  

இந்தக்கதைதான் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தேர்விலும் நடந்துள்ளது. மகன் பதவியை தாய் எடுத்துக்கொள்ள இத்தனை ஆர்ப்பாட்டம் ஏன்? சோனியா தலைவர் பதவியில் இருந்து வெளியேறிய போது இருந்த காரணங்கள் இம்மி அளவு கூட மாறாத போது மீண்டும் அவர் பொறுப்பு ஏற்பது ஏன் என்ற கேள்விகள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறது. 

சோனியா தேர்வு பெற்றதன் மூலம் பாஜகவின் நல்ல நேரம் தொடர்கிறது என்பது நிரூபணமாகிவிட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு? காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close