தமிழ்நாட்டை கவனிங்க தமிழர்களே...!

  பாரதி பித்தன்   | Last Modified : 12 Aug, 2019 05:23 pm
tamils-in-tamil-nadu-look

பாரதி பித்தன்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய பிறகு அந்த மாநிலத்தவரை விட நம்ம ஊர்காரர்கள் கண்ணீர் விட்டு கதறிவிட்டார்கள். ஆன்ட்ராய்டு போன் வைத்துள்ள அனைவரும் கருத்துப் புலிகளாக மாறி அழுது தீர்த்து விட்டார்கள். ஆனால் இவர்களில் கண்களில் தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னை கண்ணுக்கு தெரியாமல் போனது தான் வேதனை. 

கடந்த சில நாட்களாக கர்நாடகம், கேரளா, தமிழகத்தில் ஊட்டி போன்ற இடங்களில் மழை கொட்டோ கொடு என்று கொட்டுகிறது. கர்நாடகாவில் இருந்து ஒரு லட்சம் முதல் 3 லட்சம் கன அடிவரையில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணை நிரம்பி விடப் போகிறது. வேறு வழியில்லாமல் திறந்து விட வேண்டியது அவசியம். விவசாய சங்க பிரதிநிதிகள் தற்போதுள்ள தண்ணீரை மோட்டரில் இருந்து வெளியேற்றிவிட்டு வரும் நீரை தேக்கி வைக்க முடியும் என்று ஆலோசனை கேட்கிறார்கள். மாநில அரசு இது பற்றி சிந்திப்பதாக கூட தெரியவில்லை. 

இத்தனைக்கு பொதுப்பணித்துறை, நீர்பாசன மேலாண்மை துறை, வேளாண்துறை என்றெல்லாம் விதவிதமான அரசு துறைகள் உள்ளன. இவற்றில் இருக்கும் அதிகாரிகள் தற்போதைய நிலையை ஆய்வு செய்கிறார்களா? அவர்கள் வரும் தண்ணீரை எப்படி சேமிக்க, மேலாண்மை செய்யப் போகிறார்கள் என்ற எந்த விபரமும் இல்லை. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செம்பரப்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்து விட்டு சென்னையை நீரில் மிதக்க விட்டனர். அதே போல மேட்டூர் ஆற்றங்கரையில் உள்ள கிராமங்களுக்கு இதுவரையில் எவ்விதமான எச்சரிக்கையும் விடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் கரையில் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கி விடும் அபாயம் உள்ளது. 

மேலும் தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டால் அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் நேராக கடலைத் தான் அடையும். அதன் பின்னர் தண்ணீர் தேடி அலைய வேண்டியது தான். 

முக்கொம்பு அணை உடைந்து ஒரு ஆண்டிற்கும் மேலான பின்னரும் அது இப்போது வரை கட்டப்படவில்லை. தமிழக அரசு நீர்நிலைகளை துார்வார பல நுாறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. நுாறு நாள் வேலைத்திட்டத்தில் நீர்நிலைகளை துார்வார முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் யதார்த்தத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் துார்வாரவே இல்லை. இதை கண்காணிக்க வேண்டியவர்கள் தங்களுக்கு 20 சதவீதம் கமிஷன் கிடைத்ததும் கண்களை மூடிக் கொண்டு விட்டார்கள். இரண்டு மூன்று திட்டங்களில் ஒரே நீர் நிலை துார்வாரப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது. இப்படி நடந்த ஊழலை யாரும் தட்டிக் கேடகேவில்லை. 

வெளியூர் காரர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் பணி சரியாக நடக்காது என்று நூறுநாள் வேலை திட்டத்தில் ஒப்படைத்தனர். அவர்களே திருவிளையாடல் புராணத்தில் சிவன் பிட்டுக்கு மண்சுமந்த கதையாக தூர் வாரினர். இவை எல்லாவற்றையும் மீறி சில குளங்கள் துார்வாரி தண்ணீருக்காக காத்திருக்கின்றன. ஆனால் வரத்து வாரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி இருப்பதால் ஆற்றில் செல்லும் நீர் உள்ளே வராது. 

இதனால் துார்வாரப்பட்ட நீர்நிலைகள் மழை வந்தால் தான் நிரம்பும், மற்றபடி வறட்சி, அல்லது அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்து கடலுக்கு வீணாகத்தான் செல்லும். இதற்கு முழுமையான காரணம் அரசு, மக்கள், அதிகாரிகள் கூட்டணிதான். இதை உடைக்க யாரும் முன்வரப் போவதில்லை.  இதுதான் தமிழகத்தின் சாபக் கேடு.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close