வம்பு இழுக்கும் வரம்பு மீறல்கள்..!

  பாரதி பித்தன்   | Last Modified : 17 Aug, 2019 03:29 pm
useless-advice-from-the-authorities

அரசுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுப்பவர்களில் ஆளும் கட்சியினரை விட அதிகாரிகள் முக்கியமானவர்கள். அறிவு ஜீவித்தனம் என்று அவர்கள் செய்யும் நடவடிக்கைகள் அரசுக்கு அவப் பெயரைதான் ஏற்படுத்தும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கியிருப்பவரை பார்க்க வரும் பார்வையாளரிடம் ரூ. 5 வசூலித்தால் அந்த தொகையை வைத்தே மருத்துவமனைகளை சிறப்பாக பராமரிக்கலாம் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள். அது நடைமுறைக்கு வந்த ஒரே நாளில் பல் இளித்தது.

அண்ணன் செல்லூர்ராஜூவுக்கு விஞ்ஞானி பெயரை வாங்கித் தந்ததும் அதிகாரிதான். அவர் கூறியதை நம்பி அவர் வைகை ஆற்றை தர்மாகோல் போட்டு மூட ஒரே நாளில் உலக பேமஸ் ஆகிவிட்டார்.

கல்லில் துணி துவைப்பதைப் பார்த்தால் கூட துணியால் கல்லை உடைக்க முயற்சி செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும் கூட்டம் இது.

இதில் மாற்றுமத்தவர்கள் உள்ளே நுழைந்து விட்டால் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வரம்பு மீறல்களை செய்து வம்பு இழுப்பார்கள். அது வெடிக்கும் போது அரசுக்கு தான் கெட்ட பெயர். அதற்கு சமீபத்திய உதாரணம் கல்வித்துறை செய்தது தான்.

மாணவர்கள் ஜாதி அடையாளம் தெரியும் வகையில் கையில் கயிறு கட்டி வரக் கூடாது என்று பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றிக்கை அனுப்பினார். அதுவும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ரக்ஷா பந்தன் கொண்டாடும் நிலையில் இந்த உத்தரவு வெளியானது.

ஒரு சில சிறுபான்மை பள்ளிகள் பொட்டு வைக்க கூடாது, பூவைக்க கூடாது என்று சர்ச்சைகளை கிளப்பிடுவதை மட்டும் பார்த்த மக்களுக்கு அரசே அந்த நடவடிக்கையில் இறங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இதை கண்டிக்காவிட்டால் பின்னர் சிலுவை போட்டு வரக் கூடாது, புர்கா போட்டு வரக் கூடாது, கல்வி கற்கும், கற்பிக்கும் கன்னியாஸ்திரிகள் தங்களை வேறு படுத்தும் உடைகளை அணியக் கூடாது என்று சட்டம் போடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டது. விளைவு அனைத்து தரப்பினரும் கயிறு விவகாரத்தை ஒன்று கூடி எதிர்த்தனர்.

இந்த விவகாரம் தங்களுக்கே ஆப்பு வைக்கும் என்று உணர்ந்த அமைச்சர் செங்கோட்டையன் இந்த சுற்றிக்கை வந்ததே எனக்கு தெரியாது, பழைய நடைமுறையே தொடரும் என்று பேட்டி அளிக்கிறார். அமைச்சருக்கே தெரியாமல் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்ன வேண்டுமாலும் செய்யலாம் என்பதற்கு இது உதாரணம்.

இதே போல தஞ்சை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுக்கிறது. அதை சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரியும் ஏற்கிறார். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார் என்று தான் தெரியவில்லை.

சமுதாயம் விழித்து இருக்கிறதா? உறங்குகிறதா என்று தீக்கோல் கொண்டு கல்வித்துறை மட்டும் அல்லாமல், எல்லாதுறைகளும் தயாராகத்தான் இருக்கிறது.

கடந்த 48 நாட்களாக தென்னிந்தியாவை குறிப்பாக ஆந்திராவை தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்த வைபவம் அத்திவரதர் தரிசனம். ஒரு கோடி பக்தர்கள் சென்று தரிசனம் செய்துள்ளனர். ஆனாலும் அத்திவரதர் தரிசனத்தை இன்னும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கைவிடுத்தனர். இதைவிட சர்வரோக நிவாரணி போல ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. தொடக்கத்திலேயே இந்த மனுவை தள்ளுபடி செய்யாமல் விசாரணைக்கு கோர்ட் ஏற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அத்திவரதரை இந்த கோர்ட் எந்த அரசியல் சாசனப்படி விசாரிக்கும் என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டது. நல்லவேளையாக இந்து மதத்தை, அதன் பாரம்பரிய முறைகளை நம்பும் நீதிபதிபகளிடம் வழக்கு சென்றதால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வேறு மாதிரி அமைந்திருந்தால் நம்மவர்கள் வேண்டுதல்களுக்கு பலன் தராத கடவுள்களை  நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தண்டிக்க வேண்டும் என்று கூட வழக்கு தொடர்ந்து இருப்பார்கள்.

இது போன்ற சம்பவங்கள் கேலிக் கூத்தாக முடியாதற்கு சமுதாயத்தின் விழிப்புணர்வு தான் காரணம். அதை மங்காமல் பாதுகாப்பது சமூக ஆர்வலர்களின் கடமை. அவர்கள் களம் இறங்க வேண்டும் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பு.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close