தலீத் சமூகத்தினருக்காக தன்னலமில்லாது உதவிய தோழர்!!!

  அபிநயா   | Last Modified : 01 Dec, 2019 04:14 pm
a-person-who-stands-for-dalits

காலஞ்சென்ற உக்கன் என்பவருக்கு 1935-ல், பிரிட்டிஷ் அரசு வழங்கிய 2.8 ஏக்கர் நிலத்திற்கு , வரிகட்ட வேண்டும் என்ற நோட்டீஸ் ஒன்று அவர் பேரனுக்கு பழனிசாமிக்கு வந்து சேர்ந்தது.

நோட்டீசைப் படித்த பேரனுக்கோ பெரும் அதிர்ச்சி. காரணம், இந்த நோட்டீஸ் அவர் கையில் வந்து சேரும் வரை, இப்படி ஒரு நிலமிருப்பதே பழனிசாமிக்கு தெரியாது.

சரி நோட்டீஸ் வந்து விட்டது, வரி கட்ட வேண்டுமே. ஆனால், அதற்கான நிலம் தொடர்பான ஆவணங்களை தேடியெடுப்பதற்குள்  போதும் போதும் என்றாகிவிட்டது பழனிசாமிக்கு. ஒருவாராக, பல்வேறு தோழமைகளின் உதவியுடன் ஆவணங்களை தேடி சேகரித்தார் உக்கனின் பேரன்.

மேட்டுப்பாளையம் நகர எல்லைக்குள் இருக்கும் அந்த நிலம் சுமார் 2.8 ஏக்கர் நிலப்பரப்புடையது. அதன் விலை மதிப்பு சுமார் 5 கோடிக்கு மேல் தேறும் என்பதை அறிந்தவுடன் புரோக்கர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என அனைவரும் பழனிசாமியை சூழ்ந்து விட்டனர்.

லாட்ஜ்க்கு அழைப்பது, ஒரு பெட்டியை திறந்த காட்டுவது என ஒரே பண மழை. "இந்த
பணக்கட்டுகள் முழுவதையும் எடுத்துக்கொள்‌ கையெழுத்து மட்டும் போட்டுக்கொடு" என்றனர். அவர் இறங்கிவரவில்லை என்பதால், மற்றுமொரு பெட்டியை நீட்டினர். 
அப்போதும் அவர் இறங்கி வரவில்லை. 

கோபமுற்ற அவர்கள், பழனிசாமியை மிரட்டத் தொடங்கினார்கள். அவர்களின் எந்த உருட்டல் மிரட்டல்களுக்கும் அஞ்சாத பழனிசாமி சிரித்துக்கொண்டே படியிறங்கி வந்துவிட்டார். 

ஆவணங்களை முழுமையாக சேகரித்த பழனிசாமி, தலித் மக்களுக்கு அந்த நிலத்தை வழங்குவது என முடிவு செய்தார், அதில் உறுதியாகவும் இருந்தார்.

மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தில், தலித் மக்கள் வாழ்கின்ற பகுதிகளுக்கு சென்ற அவர், வீடோ, நிலமோ, இல்லாதவர்களாகப் பார்த்துப்பார்த்து 105 பேர்களை தேர்வுசெய்து பட்டியலிட்டார்.

ஒரு விடுமுறை நாளாக பார்த்து, தான் பட்டியலிட்ட அனைவரையும் தனது வீட்டிற்கு அழைத்தார்.அவர்கள் அனைவருக்கும் ஒரு குடும்பத்திற்கு (1.1/2 ) ஒன்றரை செண்ட் ‌வீதம் 2.8 ஏக்கர் நிலத்தையும் பிரித்துக் கொடுத்தார்.

அந்த நிலத்திலிருந்து தனக்கென்று ஒரு பிடி மண்ணைக்கூட அவர் எடுத்துக்கொள்ளவில்லை. அவருக்கென்று 1 செண்ட் நிலமாவது வைத்துக்கொள்ளுமாறு சிலர் கூற, அவர்களுக்கு பதிலளித்த அவர், "இப்போது நான் குடியிருக்கும் 1 1/4 செண்டே எனக்கு போதுமானது;   நிலமில்லாதவர்களுக்குத்தான் நிலம் போய் சேர வேண்டுமே தவிர நிலம் உள்ள தனக்கு எதுவும் வேண்டாம்" என்று புன்னகையோடு கடந்துபோனார் 

ஆனால் அவரது சகோதரியோ, தனக்கும் ஒரு செண்ட் நிலம் வேண்டும்  என்று பிடிவாதமாக கேட்டார். ஆனால் பழனிசாமியோ, தான் குடியிருக்கும் இடத்தில் ஒரு பங்கு எனது சகோதரி பெயரில்தான் இருக்கிறது என்றும், சகோதரி என்பதற்காக ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலத்தை கொடுக்கமுடியாது என்று மறுத்து விட்டார். நிலம் இல்லாதவர்களுக்கு தான் இடம் என்ற கொள்கையிலிருந்து அவர் சிறிதும் அசைந்து கொடுக்க தயாராக இல்லை.

நிலம் கொடுத்ததோடு நின்றுவிடவில்லை அவர். குடிசை கூட போட முடியாத நிலையில் பலர் அவரது பட்டியலில் இருந்தனர். அவர்களுக்கு குடிசை போடுவதற்காக சிறு சிறு உதவிகளையும் சேர்த்தே செய்தார். 

அதன் பிறகும் நிலத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. நிலத்தை அரசை எடுக்க வைத்து, அதில் அவரது பட்டியலில் இடம் பெற்றிருந்த 105 தலித் குடும்பங்களுக்கு பட்டாவும் பெற்றுக் கொடுத்தார்   யு.ஆர்.பழனிசாமி!

இத்தனையையும் எந்த ஓர் ஆடம்பரமும், விளம்பரமும் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் அமைதியான முறையில் செய்து முடித்த அவரும் ஓர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

இப்படிபட்ட நல்ல எண்ணமும், குணமும் கொண்ட தோழர் யு.ஆர். பழனிசாமி தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளையம் நகர செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

Newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close